பக்கங்கள்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

யாம் பெற்ற பெரும் பேறுகள் (1)

எனக்கு 86 வயது பிறக்கிறது என்ற ஒரு 'வசதியற்ற உண்மையை'  (an  inconvenient  truth)  நினை வூட்டுகிறார்கள் நம் தோழர்கள்!
பெரியாரின் பெரும் பணியின் ஒருசிறு துளியாக சிலவற்றை நிறைவேற்றினேன்; அய்யா பெரியாரும், அன்னையாரும், அவர்களையொட்டி நமது குருதி உறவுகளை விட மேலான எம் அரும் தோழர்களும் இந்தத் தொண்டர்க்குத் தோழனான வனிடத்தில் வைத்த  நம்பிக்கையை நியாயப்படுத்த இன்னமும் உற்சாகத்தோடு உழைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி காணுகிறேன். பொது வாழ்வில் உள்ள பலருக்கும் எளிதில் கிட்டாத வாய்ப்பு, என்னால் எனது உறவுக் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லையானாலும், அவர்களால் எனக்கு நிரம்ப லாபம் உண்டு; காரணம் அவர்கள் என் பணிக்கு உறுதுணையானவர்களே எனது வாழ்விணையர் முதல் அனைவரும்; இன்னும் கேட்டால் நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகமாகவும் உரமிட்டுக் கொண்டி ருப்பது - குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சினையும் ஏற் பட்டதில்லை என்பதே எனக்கு மகத்தான உதவி அல்லவா?
வயதான நிலையில் பலர் 'இதை அடைய வில்லையே;' 'அது கிட்டாமற் போய் விட்டதே' என்று மனச் சஞ்சலம் அடைவது உண்டு. அது போன்ற எந்தக் கவலையும் எனக்கு ஏற்பட்டதில்லை; நம்மீது அன்பும், நட்புறவும், நம்பிக்கையும் கொண்ட இத்தனை தோழர்கள் உலகம் முழுவதும் உள்ளார்களே என்ற மகிழ்ச்சியே ஊற்றெடுக்கிறது! சீரிளமைத் திறத்தினை வழங்குகிறது.
பெரியவற்றுள்ள எல்லாம் பெரிது பெரியாரை தமராக் கொள்ளல் என்பது நம் அனைவருக்கும் கிடைத்த அரியதோர் நல்வாய்ப்பு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
(- குறள் 7)
இதற்கு தனக்குவமை இல்லாத நம் தலைவரை பின்பற்றியது (தாள் சேர்ந்தார்க்கல்லால்) என்பது உண்மைப் பொருள் - 'நல்ல தலைமையைத் தேர்ந் தெடுத்துப் பின்பற்று', என்பதல்லாமல் அது வேறு என்ன?
குறிப்பாக யாம் பெற்ற பேறு - யாருக்கும் கிட்டாத தனிப்பேறு என்று காலமெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்துவது எந்த பேறு குறித்து தெரியுமா?
அக்காலத்தில் சில பேச்சாளர்கள் அய்யாவை வைத்துக் கொண்டு "அதிகப் பிரசங்கம்" செய்யும்போது தடியைத் தட்டிடுவார்; அதற்குப் பொருள் உடனே முடியுங்கள்; பேச்சை நீட்டாதீர்கள் என்பதேயாகும்!
உங்களுக்கு அப்படி ஒரு அனுபவம் அய்யா தடியைத் தட்டி (மறைமுகமாக) பேச்சை முடிக்க குறிப்புக் காட்டிய அனுபவம்  - ஏற்பட்டது உண்டா என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்?
இதோ பதில் சொல்லி விடுகிறேன், எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது உண்டு!
திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் பக்கத்தில் உள்ள புதுப்பாளையம் (செங்கம் - புதுப் பாளையம் என்றே அழைப்பர்) ஒரு கழக முக்கியஸ்தரின் வீட்டுத் திருமணம் - பல ஆண்டுகளுக்கு முன்பு.
அய்யா அவர்களும், அன்னையாரும் முதல் நாள் இரவே சென்று தங்கி, காலை 9 மணிக்கெல்லாம் திருமணம் துவங்கி விட்டது; நான் சென்னையிலிருந்து செங்கம் - புதுப்பாளையம் சென்றேன்; சற்றுதாமதம்; அய்யா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துப் பிறகு பேச இருக்கிறார்; சில தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்; என்னையும் பேசுமாறு பணித்தார்கள்.
நான் சுயமரியாதைத் திருமணம் - அதன் சிறப்புகள், சடங்கு, சம்பிரதாயங்களைத் தவிர்த்தலின் நன்மை இவைகளைப்பற்றி 'சிலாகித்துப்' பேசத் துவங்கி, சில நிமிடங்கள் ஆன நிலையில், அய்யா (தலைவர்) தடியைத் தட்டினார். எனக்கு ஒரே அதிர்ச்சி. மிக அதிக நேரமும்கூட பேசவில்லை. உடனே பேச்சை முடித்து உட்கார்ந்து விட்டேன்; பிறகு அய்யா பேசி மணவிழா முடிந்தது. அய்யா வேனில் ஏறி அய்யாவுடன் பயணம்.  வேனில் அன்னையார், புலவர் இரா. இமயவரம்பன் மற்றும் சில கழக முக்கியப் பொறுப்பாளர்கள் மட்டும் இருந்தனர்.
வேன் சிறிது தூரம் சென்றவுடன் அய்யா என்னைப் பார்த்து "நீங்கள் பேசும்போது ஏன் முடிக்கச் சொன்னேன் தெரியுமா? அந்த வீட்டு சம்பந்தியை திருப்தி செய்திட இரவு சில சடங்குகளைச் செய்ய வேண்டிய 'இக்கட்டுக்கு' நமது முக்கியஸ்தர் ஆளாகி, பிறகு என்னிடம் வந்தவுடன் மன்னிப்புக் கேட்டு நான் சமாதானம் சொன்னேன் அவருக்கு.
நீங்கள் நேரே இப்போதுதான் மேடைக்கு வந்ததால் உங்களுக்கு அது தெரிய நியாயமில்லை - வழக்கம்போல் எல்லா சுயமரியாதைத் திருமணங்களிலும் பேசும் முறை போல பேச ஆரம்பித்து விட்டீர்கள்; கேட்பவர்கள் நம் இயக்கத்தைப்பற்றி தவறாக நினைக்கக் கூடும் அல்லவா?
செய்து விட்டு செய்யாததுபோல் கூறுகிறார்களே இவர்கள் என்பார்களே; அதற்காகத்தான் 'சட்'டென்று முடிக்கச் சொன்னேன் - புரிகிறதா?" என்று எனக்கு விளக்கம் கூறினார்கள்.
அய்யா தட்டினால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். இப்போது புரிந்தது. "நன்றி, அய்யா, மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றேன். "பரவாயில்லை,  தாமதமாக வந்த உங்களுக்கு எப்படி அங்கு முன்பு நடந்தது தெரியப் போகிறது என்பதால் அது ஒன்றும் தவறல்ல" என்று என்னையும் "தேற்றினார்"
எப்படிப்பட்ட தலைமை - பார்த்தீர்களா?
விடுதலை நாளேடு, 1.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக