நாளேடுகளில் முழு பக்க விளம்பரங்கள், தொலைக்காட்சிகளில் இடையறாத விளம்பரங்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விளம்பரங்கள் ஒரு பக்கம் என்றாலும், பொருள் விளம்பரங்கள் - தள்ளுபடி விளம்பரங்கள் - எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரையே பெரிதும் பலி''யாகச் செய்கிறது!
கைத்தொலைப்பேசி மாடல்கள் இடையறாது மாறிக் கொண்டிருக்கின்றன. அவைகளை - சபலம் உள்ள இளைஞர்கள், தங்கள் தகுதியை மீறிக் கூட மாதத் தவணை (EMI) முறையில் வாங்குவது, கண்டபடி செலவழிப்பது, நுகர்வுக் கலாச்சாரம் என்ற ஒரு தொற்று வியாதி மிகவேகமாக - தொலைக்காட்சி விளம்பரங்கள்மூலம் எக்கச் சக்கமாக' அங்கிங்கெனாதபடி விளம்பரங்கள்!
ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்' என்ற ஆசைகளைத் தூண்டி, தேவையற்ற பொருள்கள், துணிமணிகள், அணிகலன்கள் இவைகளை கடனுக்காவது வாங்கத் தூண்டும் நிலையில், பல நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் சேமிப்பு களையெல்லாம்கூட இழந்து நிற்கும் அவலம் - இன்று நாம் அன்றாடம் காணும் காட்சிகள்!
மிகவும் இன்றியமையாத தேவை என்றா லொழிய எந்தப் பொருளையும் அது மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, இலக்குத் தெரியாமல் புதையலைத் தேடி அலைந்து ஏமாந்த சோண கிரிகளாகிவிடுவது போல் ஆகிவிடுவது தேவையா?
கடன் அட்டைகளை (Credit Cards) வங்கிகள் மிகவும் தாராளமாக, ஏராளமாக புழக்கத்தில் விடுகின்றன. அதை ஒரு தகுதிப் பெருமையின் அடையாளம்'' (Status symbol) ஆக எண்ணி, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, குடும்பத்தில் உள்ள மகளிரும்கூட இது உள்ளப டியே தேவைதானா? இதை வாங்காவிட்டால் நமக்கு ஏற்படும் நட்டமோ - குறையோ எந்த அளவு என்றெல்லாம் பல கேள்விகளை மனதுக்குள் அடுக்கடுக்காய் எழுப்பி - திருப்தியான விடை - நியாயமான தேவை என்பது உணர்ச்சி வயப்பட்ட நிலை தணிந்த பிறகு - தேவையானால் வாங்கலாம். ஓர் வரையரை - இலக்கணம் தேவை.
சாப்பாட்டுக்குரியது என்பதில்கூட எதை ஒதுக்கலாம், எதை ஒதுக்கக்கூடாது என்று உடல் நலக் கண்ணோட்டத்தோடு, மருத்துவர் ஆலோச னையெல்லாம் பெற்று, பிறகு உணவைக்கூட தள்ளுபவைகளைத் தள்ளி, கொள்ளுபவைகளைக் கொள்ளும்போது,
இந்தப் பொருள் வாங்கி வியாதி'களுக்கு ஏன் பலியாகவேண்டும்? கண்டதும் காதல் (விளம் பரத்தைப் பார்த்ததும் மோகம்') எதிர்த்த வீட்டுக் காரர் வாங்கி விட்டாரே, நாம் வாங்கி - என்னிடமும் அதைவிட விலை உயர்ந்த பொருள் இருக்கிறது'' என்ற வீண் ஜம்ப வெளிச்சம் - தேவையா?
தீபாவளி போனஸ்' வாங்கி பல வீடுகளில் குறிக்கோளற்ற வீண் ஆடம்பரச் செலவுகள், அல்லாது நுகர்வுக் கலாச்சாரப் பாயலாக' பல்பொருள்கள் - தேவையற்ற துணிமணி - நகை அலங்காரம் இவைகளுக்கு செலவழிப்பதைவிட, வருங்காலத்தில் எதிர்பாராது ஏற்படக்கூடிய செலவினங்களுக்கு நாம் சேமித்து வைத்தால்தானே சுயமரியாதையுடன் கடனற்ற நிம்மதி வாழ்வு - மான வாழ்வு வாழ முடியும் என்று எண்ணிட வேண்டும்.
சம்பள உயர்வுக்குப் போராடுவோர் அதை சரிவர செலவழிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்களோ, அமைப்புகளோ இல்லாதது மிகப் பெரிய குறைபாடு அல்லவா!
உங்களுக்கு நீங்களே ஆசான்களாக' (தேவையற்றவைகளை) வாங்குதலினும் வாங் காமை நன்று - வீட்டில் வறுமை (பிறகு) தேங்காமை நன்று - இல்லையா!
- விடுதலை நாளேடு, 2.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக