பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2018

தோட்டம் என்ற வகுப்பறை எடுக்கும் பாடம்!

வகுப்பறை" என்பது பள்ளிக்கூடங்களில் மட்டும் தானா உள்ளது?

உலகெங்கும் உள்ளதே, ஓ மனிதா - அவற்றை நீ ஏன் சரியாகப் பயன்படுத்திப் பாடங்களை கற்க ஏனோ தவறி விடுகிறாய்?

இயற்கை மனிதனைப் பார்த்துக் கேட்கிறது!

நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் அன்றாடம் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் - செய்திகள் மூலம் நாம் பாடம் கற்க வேண்டாமா? அவைகளையும் நமது வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய வகுப்பறைகளாக மாற்றிக் கொள்ள வேண்டாமா?

"தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவரது பொதுக் கூட்டங்களே மாலை நேரக் கல்லூரிகளாக,  வகுப்பறைகளாக மாறி, 3,4 மணி நேரம் மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள்" என்றார் அவரது தலைமைச் சீடர் அறிஞர் அண்ணா அவர்கள்! உண்மைதானே!

சிறைச்சாலைகள்கூட சிறந்த வகுப்பறைகள்தான் என்பது சிறைக்குச் சென்று திரும்பிய நல்லவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்! - அந்த வகுப்பறை கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம்!

"செய்யாத குற்றத்திற்கு 14 ஆண்டு தண்டனையா அய்யோ கிருஷ்ணா உனக்கா?" என்று நெஞ்சம் குமுறி படிப்போரைக் கண்ணீர் கடலுக்குள் தள்ளும் இலக்கியம் போன்ற 'குடிஅரசு' வார ஏட்டில் தலையங்கம் தீட்டிக் குமுறினாரே தந்தை பெரியார்; அதன் பிறகு மேல் முறை யீட்டின் காரணமாக விடுதலை  அடைந்தாரே  நகைச் சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், (எம்.கே. தியாகராஜபாகவதரும்கூட) அவர்கள்; அவருக்கு  விடுதலையானவுடன்  முதன் முதலாக கடலூர் மஞ்சள்நகர் மைதானத்தில் மாபெரும் மக்கள் வரவேற்பினைத் தந்தோம் - கழக ஏற்பாட்டில்!

அப்போதுதான் அவர் - உடுமலை நாராயணக் கவி அவர்கள் எழுதிய 'ஜெயிலுக்குப் போய் வந்த சிரேஷ்டர்  மக்களை சீர்திருத்துவாங்கோ' என்று  சிறை அனுபவம் எப்படி வகுப்பறை அனுபவமாகவே இருந்தது   என்பதைப் பாட்டுப்பாடி - மக்களுக்கும் அதுபற்றி ஒரு  அறிய - அரியதோர் வகுப்பெடுத்தார்!

"உடம்புக்கு ஒண்ணுன்னா உடனே டாக்டர் ஓடியாந்திருவாங்கோ!" என்றெல்லாம் வரிசைப்படுத்திப் பலதையும் பாடி  முத்தாய்ப்பு வரிகளையும் முத்திரை யாக வைப்பார்.

"கோயில் இல்லிங்க - அங்கே

கோயில் இல்லிங்க - அது

ஒரு குறையா சொல்லுங்க?"

என்று கேட்பார்.

அன்றாட நடைப்பயிற்சியை தோட்டங்களில் நாம் மேற்கொள்ளும்போது, அத்தோட்டத்தில் பூத்துள்ள பூக்களும் காய்த்துப் பழுத்துள்ள பழங்களும்கூட மனிதர்களுக்குப் பாடங்கள் போதிக்கும் சிறந்த இயற்கை என்னும் பேராசான் எடுக்கும் வகுப்பறைப் பாடங்கள் என்பதை நம்மில் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்!

விதைகளைப் போட்டு; செடிகளாக வளருவதற்கு நாம் தண்ணீர் விடுகிறோம்; சிற்சில நேரங்களில் உரமுமிடுகிறோம்.

அவற்றைப் பெற்று வளர்ந்த அந்த செடிகளும், கொடிகளும், மரங்களும்  எத்தகைய நன்றியை தனது வாழ்வு முடியும் வரையிலோ, அல்லது புயல், வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதாலோ ஏற்படும் விபத்துக் காரணமாக வீழும் வரையிலோ - பருவம் தோறும் பூக்களையும், பழங்களையும் தொடர்ந்து தந்துகொண்டே உள்ளன!

சிறு உதவி பெற்று அவற்றை பெரும்பயனாக பூக்களாக, காய்களாக, கீரைகளாக, பழங்களாக மனிதர்களுக்குத் திருப்பித் தந்து நன்றியைக் குவிக்கிறது!

ஆனால் நாம் வளர்க்கும் நமது பிள்ளைகளேகூட, பல குடும்பங்களில், இறக்கை முளைத்தவுடன் பறந்து செல்லும் குஞ்சுகளாகின்றன, தாய்ப் பறவைகளும் தனது கடமை முடிந்து விட்டது என்றே திருப்தி கொண்டு வாழுகின்றன. மனிதர்களைப் போல, பிள்ளைகள் தங்களைக் கவனிக்கவில்லையே என்று குறை கூறி வருத்தம் கொள்ளுவதும் இல்லையே! தோட்டங்களின் வகுப்பறைத் தரும் பாடங்கள் - பல.

தோட்டங்களிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளத்தான் தெரிந்திருக்கிறோமே தவிர கற்றுக் கொள்ளத் தெரிந்திருக்கிறோமா? புரிந்திருக்கிறோமா? இல்லையே!

இயற்கை நமக்கு சிறந்த ஆசானாக இருந்து வகுப்பெடுக்கிறது!

பூக்களோடு சரி சில செடிகள், பூத்துப் பிறகு காய்த்து கனியாகி சுவை தருவது சிலவகை மரங்கள்!

வண்ணங்களை ரசிக்க ஒரு வகை!

பழங்களை ருசிக்க மற்றொரு வகை!

அடாடா என்னே சிறப்பு - எல்லாப் பழங்களும்கூட ஏற்றுக் கொள்ளக் கூடியவையா? இல்லை.

மனிதர்களில் எல்லா மனிதர்களும் நல்லவர்களா? இல்லையே அதுபோலவே -

எட்டிப் பழுத்து யாருக்கென்ன லாபம்?

விஷ மனிதர்களைப்போல விஷச் செடிகளும்கூட உண்டே!

நமது கரியமில வாயுவை அவை உண்டு, நடை பயிலும் நமக்கு நல்ல  மூச்சுக் காற்றையும் (பிராண வாயு) நமக்குத் தருவதற்கு நாம் அவைகளை வெட்டி வீழ்த்தும் வெட்டி வேலையில் ஈடுபடுவதுதான் பதிலுக்கு நாம் காட்டும் நன்றியா?

1962இல் குடியேறிய எங்கள் வீட்டில், முன்பிருந்தவர் ஒரு பக்தியாளர்; ஒரு துளசிச் செடி நட்டு சிமெண்ட் தளத்தை வீட்டின் முன் வைத்தார்.

நாங்கள் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்து, அதில் ரோஜாச் செடிகளை நட்டோம்; ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கி புத்துணர்ச்சியூட்டுகின்றன! மகிழ்கிறோம்-

துளசி தொட்டியிலும் ரோஜாக்கள் முளைக் கின்றனவே!

ஒட்டு மாங்கனிகள்தானே தனிச் சுவையைத் தருகின்றன.

பின் ஏன் மனிதா நீ மட்டும் ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து ஆணவக் கொலைக்காரனாக அலைந்து காட்டுமிராண்டியாய் ஆகின்றாய்?

- இப்படிக் கேட்காமல் கேட்கிறது! இந்த தோட்டத்தை நோட்டம் விட்டு, வாட்டம் போக்க வாரீர்களா நம்முடன் என்று சொல்லாமல் சொல்லி பாடம் எடுக்கிற இந்த வகுப்பறை களிலிருந்து மனிதர்களே! ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?

-  விடுதலை நாளேடு, 9.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக