தவத்திரு. குன்றக்குடி அடிகளார் என்ற தமிழ் மா முனிவர் அறஞ்செய விரும்பிய அறத்துறவியர் ஆவர்! பக்தி குளத்தில் பூத்த பகுத்தறிவு மலர், இனமான உணர்வின் இலக்கணமானவர்! தந்தை பெரியாரை என்றும் பல்வேறு தடங்களில் தனது வழிகாட்டியாகக் கொண்ட, தமிழ்த்திரு ஆதின கர்த்தர்!
அவர் அந்தத் துறையில் செய்த அறிவியல் பரப்பிடும் பணி அநேகம்.
அதில் ஒன்று "அறிக அறிவியல்" என்ற திங்கள் தாளிகை நடத்தி வரும் ஒரு சிறந்த தொண்டறம்.
அறிவியலைப் பரப்ப வேண்டிய வானொலி, தொலைக்காட்சிகள் மூடநம்பிக்கையை மொத்த வியா பாரிகளாக நின்று செலாவணி செய்யும் இக்கால கட்டத்தில், அறிவியல் நெறியைப் பரப்பிட 'அறிக அறிவியல்' தாளிகையை அடிகளார் தம் அடுத்த வாரிசு - தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் சிறப்பாகத் தொடருகிறார்.
அதில் பல அருமையான சிந்தனை விருந்து திங்கள்தோறும் படைக்கப்படுகிறது. அதில் "அக்டோபர்" இதழில் ஒரு அருமையான கட்டுரை; உடல் நலம் பேண மூளை முக்கியமல்லவா? 'உணவே மருந்து' என்ற தலைப்பில் வந்த அந்த கட்டுரையைத் தருகிறோம், படித்து, செயல்படுத்துங்கள்!
"எண்ணம், பேச்சு, செயல்பாடு, உடல் உறுப்புக்களின் இயக்கம் என அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது மூளையே! தலைப் பகுதியில் இயற்கையாகவே பாதுகாப்பாக அமைந்துள்ள இதில் பெருமூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum), முகுளம் (Medulla oblongata) என மூன்று முக்கிய பாகங்கள் உண்டு. இதைத் தவிர பிரைசஸ்டம், தண்டுவடம் என்ற பகுதிகளும் உண்டு.
எழுதுதல், பேசுதல், எண்களை நினைவு கொள் ளுதல், உடல் இயக்கம் போன்றவற்றை மூளையின் இடது பக்கமும், கலை, இயக்கம், உணர்தல் ஆகிய வற்றைக் கண்காணிக்கும் பணியை வலது பக்க மூளையும் செய்கின்றன. மூளையைச் சுற்றியுள்ள பகுதி மண்டை ஓடு, பெரு மூளை, மூளையின் பெரிய பகுதியாகும். உடல் உஷ்ணம், இயக்கம், பார்வை, கேட்பது, தொடுதல், கற்றுக் கொள்ளுதல், முடிவெடுப்பது, பிரச்சினை தீர்வுக்கு வழி காண்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை இது கவனிக்கிறது. உடல் அசைவு, சுய உணர்வு போன்றவற்றை சிறுமூளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
உணவின் பங்கு
நினைவாற்றல், உணர்ச்சி வசப்படுதல், மனச்சோர்வு, முரட்டுத்தனம் இவைகள் அனைத்தும் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களைச் சார்ந்தே உள்ளன. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு சத்துக்கள் குறைந்த உணவைக் கொடுத்தபோது அவரின் மூளை செயல்பாடு வேகம் குறைந்து காணப்பட்டது. அதே நபருக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தபோது மூளை மீண்டும் வீரியத்துடன் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்குக் காரணம் சில ரசாயனப் பொருட்களை நரம்பியல் கடத்திகள், செல்கள் வழியாக மூளைக்குக் கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. இதற்குத் தேவையான கச்சாப் பொருளாக சில உணவுப் பொருட்கள் பயன்படுகின்றன. இதனை முன்னோடி (Precursor) என்பர். நாம் உண்ணும் உணவு பல்வேறு வேலைகளைச் செய்யும் கடத்திகளை உண்டாக்குகிறது.
புரத உணவில் டிரிப்டோபென் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது மனதை சாந்தப்படுத்தி, நல்ல உறக்கத்தைத் தரும். டைரோசின் என்ற அமினோ அமிலத்திலிருந்துதான் டோபாமைன் மற்றும் நார் எபிநெபிரின் மூளைக்குப் புத்துணர்வு, ஆபத்து குறித்த எச்சரிக்கை உணர்வைத் தரும். அதே நேரத்தில் கார்போஹைடிரேட் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
எனவே, சர்க்கரை, அய்ஸ்கிரீம், அரிசி சோறு, மாமிசம், இனிப்பு, கேக் இவைகளை உணவில் அதிக அளவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கீரை, பச்சைக் காய்கறிகள் மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. போன்னிபிரிஸ் எனும் மனநல மருத்துவர் கார்ப்போ ஹைடிரேட் உருவாக்கும் மந்த நிலையை மாற்றவே புரதம் உதவுகிறது என்கிறார்.
காபி
தொடக்கத்தில் மூளையைத் தூண்டும் சக்தி கொண் டது என்பதால், அய்ரோப்பாவில் 1,600 ஆம் ஆண்டு களில் மருந்துக் கடைகள் மூலமே காபி வழங்கப்பட்டு வந்தது. காபி அருந்துவதால் மூளை தூண்டப்படுகிறது என்பது உண்மைதான். இதனால் மூளை செல்கள் எப்போதும் துடிப்புடன் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதிக அளவில் காபி குடிப்பதால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி மட்டுமே அருந்தலாம்.
போரான் எனும் அரிய தாதுப் பொருள் மூளையில் மின்சார செயல்பாட்டை உருவாக்கும். நாம் சாப்பிடும் உணவில் போரான் அளவு குறைந்தால் மூளையின் செயல்பாட்டில் சரிவு ஏற்படும். தினமும் 3 மி.கி. போரான் சத்துள்ள உணவு சாப்பிடுவதால் மூளை அலையின் வேகம் அதிகரிப்பதை மூளை வரைவு (EEG) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வால்நட், பாதாம்பருப்பு, தண்டுக்கீரை, புரோகோலி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய் - இவற்றில் போரான் அதிகம் உள்ளது. 3.5 அவுன்ஸ் நிலக்கடலைப் பருப்பு, ஓர் ஆப்பிள் சாப்பிடுவதால் 3 மி.கி. போரான் நமது உடலில் சேருகிறது. ஈரல், பால், பாதாம், தானியம் இவற்றில் ரிபோபிளவின் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தையமின், கரோடின், இரும்புச் சத்து, ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் வயதானவர்களுக்கு நினைவாற்றலைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
கரோடின் கரும்பச்சை காய்கறி, கீரை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், மற்றும் கேரட்டில் கரோடின் உள்ளது. ஈரல், மீன், பச்சைக் காய்கறிகளில் இரும்புச் சத்து உள்ளது.
துத்தநாகம்
மீன், தானியங்கள், முழுப் பருப்பு, பசலைக் கீரை இவற்றில் அதிக அளவில் துத்தநாகம் உள்ளது. நினை வாற்றலை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.
தாய்ப்பால்
தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களைவிட புட்டிப் பால் குடித்து வளர்ந்தவர்களிடம் மூளையின் செயல் பாடு குறைந்து காணப்படும். காரணம் தாய்ப்பாலில் உள்ள சில அரிய பொருட்கள் மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. புட்டிப்பால் குடித்த குழந்தைகளிடம் அய்.கியு., (I.Q.) 93.1 சதவீதமும், தாய்ப்பால் குடித்த குழந்தைகளிடம் 103.7 சதவீதமும் இருந்தது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மது வேண்டாமே
மது அருந்துவதால் மூளை பழுதடையும். தொடர்ந்து மது அருந்துபவர்களிடம் எம்ஆர்அய் (MRI), பிஈடி (PET) சோதனை மூலம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களின் மூளை சுருங்கி, பெருமூளையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றக் குறைபாடு காணப்பட்டது. 30 வயது 'குடி' மகனின் மூளை, 50 வயது உள்ளவரின் மூளை போல காட்சி அளித்தது. எனவே மது அருந்துவதைத் தவிருங்கள். நமது அன்றாட செயல்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் மூளை சிறப்பாகச் செயலாற்ற சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி ஒளிமயமான வாழ்க்கை வாழ்வோம்."
எனவே நண்பர்களே,
உணவு முறையை மாற்றி நல்ல உடல் நலத்தோடு வாழுங்கள்.
மருந்தே உணவாக்கி வாழாதீர்கள்; உணவே மருந்தாகட்டும் - விருந்தாகட்டும்!
- விடுதலை நாளேடு, 13.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக