பக்கங்கள்

புதன், 7 நவம்பர், 2018

செத்தும் சாகாத சீனிஅம்மாள்கள்!



நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அமைதிப் புரட்சி - அடிமைகளாய், ஆமைகளாய், ஊமைகளாய் இருந்த பெண்ணினத்திற்குத் துணிவினையும், தெளிவினையும், கனிவினையும் தந்து மாற்றி, ஆண்களுக்குச் சமமாகக்கூட அல்ல; அதற்கு மேலும்கூட ஆற்றலில், துணிச்சலில் என்ற வகையில் ஆக்கியுள்ளது!

நமது இயக்கத்தின் வீராங்கனைகள் எத்தனையோ பேர்கள் உண்டு.

நெய்வேலியில் பல ஆண்டுகளாக இருந்த திரு. ராஜாராம் அவர்கள் கருஞ்சட்டை வீரர்; கொள்கை 'வெறியர்' என்றே சொல்ல வேண்டும். அவரது வாழ்விணையர் திருமதி. சீனிஅம்மாள்.  அவர்களின் குடும்பம் பல ஆண்டுகளாக நான் அறிந்த கழக சுயமரியாதைக் குடும்பங்களில் ஒன்று.

கடும் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு கடலை மிட்டாய் தயாரித்து, பல கடைகள், வீடுகளுக்குத் தந்தும், சிறு கடை வைத்தும் வாழ்ந்து வந்த நடுத்தரக் குடும்பம்.

பகுத்தறிவு, அண்ணாதுரை, நாத்திகம் என்ற மூன்று பிள்ளைகள் (2 பெண், ஆண் உட்பட).

இவர்களுக்கு போதிய படிப்பு, வாழ்க்கை எல்லாவற்றையும் ஏற்படுத்தியதோடு, நெய் வேலியிலிருந்து மகள் பகுத்தறிவு வீட்டிற்கு (குமணன் சாவடி - பூந்தமல்லி அருகே) வந்து குடியேறி விட்டார்.

நெய்வேலியில் அவருடன் பழகும் - பழகிய கொள்கைக் குடும்பங்கள் ஏராளம் உண்டு.

சீனிஅம்மாள் பல முறை கழகப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.  எவரிடமும் துணிச்சலாக கொள்கை விவாதங்களை செய்யும் மகளிரணித் "தோழர்" ஆவார்!

கடந்த 17.9.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நம் அறிவு ஆசானின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு மேடையிலும் வந்து அன்பளிப்பு வழங்கினார்.

நான் அவரிடம் "ஏம்மா, நீங்கள் மகளிரணியுடன் இங்கேயே வந்து சேர்ந்து இன்னும் தீவிரமாக கழகப் பணிகளில் ஈடுபடுங்கள்" என்றேன். "கட்டாயம்  வருகிறேன் - அய்யா, திடலில் உள்ள மற்றவர்களோடு நிச்சயம் வந்து உறுதுணையாக மகளிரணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துவிட்டேன்" என்றும் கூறினார்.

மதுரையில் உறவினர்களைச் சென்று பார்த்த நிலையில் திடீரென்று நெஞ்சு வலி வந்து (Massive attack) மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.

அவரது விருப்பப்படி, கண் தானம் என்ற விழிக்கொடை கொடுக்க முடியவில்லை; காரணம் 8 மணி நேரம் ஆகி விட்டதால்; மற்றபடி மருத்துவக் கல்லூரிக்கே அவர் உடலை, கொடையாக அளித்து வழிகாட்டியுள்ளார்!

நம் பெரியார் கண்ட புரட்சிப் பெண்களுக்குத் தான் எத்தனைத் துணிவு - எவ்வளவு தெளிவு - உறுதி!

அது மட்டுமா? அவர் தனக்கு ஏதாவது இறுதி மரணம் ஏற்பட்டால், யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஒரு உயில் கடிதமாக எழுதி வைத்துள்ளார் அவரது கைப்பட! (24.7.2018) - அந்த உயில் கடிதத்தில்  - ஒரு வாக்கியம்,

"....ரூபாய் 1 லட்சம் உங்கள் (மூவர்) பெயரில் இருப்பதை நமது கட்சி (தி.க.) எனது படத்திறப்பு அன்று நமது கழகத் தலைவரிடம் கொடுத்து, அதைத் திராவிடன் நல நிதியில் போட்டு, அதில் வருகிற வட்டிப் பணத்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கொடுக்குமாறு ஏற்பாடு செய்து விடுங்கள்..." என்று உயில் எழுதி வைத்துள்ளார்.

கடுமையாக உழைத்த சிறு சேமிப்பு மட்டுமே உள்ள ஒரு குடும்பத்தினைச் சார்ந்த எளிமையான ஒருவர் - அதுவும் வாழ்விணையர் மறைந்த பின், குழந்தைகளையும் நன்கு ஆளாக்கிவிட்ட பிறகு தனது சேமிப்பில் ஒரு பகுதி கழகத்தின் மனிதநேயப் பணிக்கு - நாகம்மைக் குழந்தைகள் இல்லத்திற்கு என்று தெளிவாகக் குறிப்பிட்டு, நன்கொடையாக அளிக்கக் கூறியுள்ளார் என்றால் எவ்வளவு பெரிய உள்ளம் - பெரு உள்ளப் பெருந்தகை அவர்!

சில வாரங்களுக்கு முன்கூட "வாழ்வியல்" கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன் - நினைவிருக்கும்.

'கொடுப்பதற்கு முக்கியம் பணம் அல்ல; மனம் என்று! ஆம், அது எவ்வளவு உண்மை என்பதற்கு இதோ சீனிஅம்மாளே சாட்சி அல்லவா!'

அவரது மகளும், மருமகனும் வந்து என்னைச் சந்தித்து அவரது கடித நகல் ஒரு படிவத்தைக் காட்டி கண்ணீர் மல்க தேதி கேட்டனர்.

எனது துயர உணர்ச்சிகளை மறைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அவரது மகள் பகுத்தறிவு ஒரு செய்தி சொன்னார்; ஆவடியில் உள்ள  ஒரு தலைமை ஆசிரியை ஒருவர்  ஆறுதல் கூற இவரிடம் வந்த நிலையில், "நான் கொஞ்ச நாள் பழகிய நிலையில் நீங்கள் எப்படியம்மா இவ்வளவு துணிவுடன், தெளிவுடன் இருக்கிறீர்கள்" என்று கேட்டபோது, 'பளீச்' சென்று சொன்னார் சீனியம்மாள் - "எல்லாம் நாங்கள் எங்கள் தந்தை பெரியார் கொள்கையைக் கடைப்பிடித்ததால் தானம்மா!" என்று கூறியதைக் கேட்டு அவரே வியப்படைந்து விட்டாராம்!

இப்படிப்பட்ட வீராங்கனைகளின் இழப்பு பேரிழிப்பு என்றாலும், இத்தகு சீனிஅம்மாக்கள் செத்தும் சாகாதவர்களாக, உணர்வாக நம்முடன் வாழ்பவர்களாகவும், வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாகவும் வாழுகிறார்கள், வாழு கிறார்கள், வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது உறுதி! உறுதி!! உண்மையும்கூட!!!

- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக