உலக மனித குல வளர்ச்சியை பல பருவங்களாக பற்பல உலக எதிர்கால நோக்காளர்களான சிந்தனை யாளர்கள் பார்த்தனர்; பகுத்தனர்!
ஆல்வின் டாஃப்ளர் (Alwin Toffler) என்ற சிந்தனையாளர் 'மூன்று அலைகள்' ஒன்று விவசாய அலை (Agricultural Wave), இரண்டு தொழில் அலை (Industrial Wave), மூன்றாவது மின்னணுக் கால அலை (Electronic Age Wave) என்றார். ''Third Wave'' மூன்றாம் அலை என்ற நூலில்!
இதை மேலும் பெருக்கியதுபோல, புகழ் வாய்ந்த நிர்வாக இயல் பரப்புரையாளரும், பல ஊக்கமூட்டும் நூல்களை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பியவரும் அமெரிக்க நாட்டு ஸ்டீபன் கோவி (Stephan Covey) அவர்கள் ஒரு நூலில்,
(1) வேட்டையாடி சேகரிக்கும் பருவம்
(2) விவசாய பருவம்
(3) தொழிற் புரட்சி பருவம்
(4) மின்னணு பரவிய தகவல் தொழில் நுட்ப பருவம்
(5) கூர்த்த அறிவு பருவம் (Age of Wisdom) என்று பகுத்தார்.
மின்னணுவியல் காரணமாக மனித குலம் அடைந் துள்ள நன்மைகள் மிகப் பல.
ஆயுள் விருத்தி, டிஜிட்டல் தொழில் நுட்பம், மருத் துவத் துறையில் ஸ்கேன், துல்லிய ஒளி, ரோபொட்டிக் அறுவை - வென்ட்டிலேட்டர் - போன்ற பற்பல வசதிகள்!
தொழில் நுட்பக் கருவிகளும், மருத்துவ அறிவும், அனுபவமும் மனித வாழ்வின் சராசரி ஆயுளை வெகுவாக நீட்ட உதவியுள்ளன!
உடனடியாக உலகத்தோடு தொடர்பு கொள்ள மின் அஞ்சல் - மின் வர்த்தகம், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இது ஒரு பக்கம்; இதற்கு மறுபக்கமும் உண்டே!
தனி மனித அந்தரங்கம், தனி மனித ரகசிய காப்பு (Right of Privacy, Personal Datas) எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நமது குளியல் அறையில் குளிக்கும் பெண்களைக்கூட படம் எடுத்து, பார்க்கும் கயவர்களின் கீழ்த்தர ரசிகத் தீனியும் இதன்மூலம் கிடைக்கிறது!
எல்லாவற்றிற்கும் இரண்டு முனைகள் உண்டுதானே! காய்கறி வெட்டும் கத்தியால்தானே கொலைகளும் நடக்கின்றன!
சமைக்க உதவும் நெருப்புதானே 'திடீர்த் தீ' மூலம் பல உயிர்களைப் பலி வாங்குகிறது.
மூச்சுமூலம் வாழ வைக்கும் காற்றுதானே தனது "விஸ்வரூபத்தால்" பல நூறு உயிர்களைப் பலி வாங்குகிறது!
எனவே எல்லாவற்றிலும் நன்மை - தீமைகள் இணைந்தே உள்ளன!
ஆனால் இந்தத் தகவல் தொழில் நுட்பம் நமது கையில் உள்ள ஒரே உரிமையை - வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் கொடுமையையும் நிகழ்த்துகிறது.
நமது மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகப்படுத்திய சீரிய சிந்தனை யாளரும், இளம் எழுத்தாளரும், பொறியாளர், மனோ தத்துவமும் படித்துப் பயன்படுத்தும் பயனுறு சமூகச் சிந்தனையாளர், சமூக நலனைப் பாதுகாக்கும் எழுத்துப் போராளியுமாகிய நண்பர் வினோத்குமார் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து பெரியார் திடலில் சந்தித்து அவர் எழுதிய 'டிஜிட்டல் மாஃபியா - நீங்கள் டிஜிட்டல் உலகில் சோதனை எலிகள்' என்ற 132 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான நூலைத் தந்தார்.
உடனே படித்தேன். நம்மில் பலரும் கணினி அறிவு உலகத்தைப் பொருத்து வெறும் 'தற்குறிகளே!'
பல வீடுகளில் நமது பேரக் குழந்தைகளும், பேத்திகளும், பேரன்களும் தான் தொலைக்காட்சி முதல் கணினியை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் 'குமரகுரு' போன்ற ஆசிரியப் பெருமகன்கள்.
அது வயதைப் பொருத்தது அல்ல
அறிவைப் பொருத்தது!
கணினி உலகின் 'தற்குறிகளாகிய' நமக்கு அவர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; நாம் கற்றுக் கொள்கிறோம்; நல்லதுதானே!
வினோத்குமார் என்ற கணினி ஆசிரியருடைய பாட வகுப்பில் சேர்ந்தேன் கற்றுக் கொண்டு வருகிறேன். நீங்களும் வாரீர்களா?
முதல் அறிமுகம் இதோ:
இந்த நூலிலிருந்து மேலும் வகுப்பைத் தொடரலாம்.
ஏன் நீங்களேகூட இந்த நூலை வாங்கி வைத்துக் கொண்டு கணினி பற்றிய திடுக்கிடும் அதிர்ச்சியூட்டும் அதிசயத் தகவல்களை அறிந்து பிறருக்குப் பரப்பலாம்.
விலை : ரூபாய் 120.
வீ கேன் புக்ஸ் (We can) (அலுவலகம்), சென்னை
பெரியார் திடலிலும் கிடைக்கும். நாளை மறுநாள் வாங்கலாம்!
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 22.12.18
'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்! (2)
'டிஜிட்டல் மாபியா' என்ற நூலில் அறிமுகம் என்பதில் தோழர் வினோத்குமார் விளக்குகிறார்.
"2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு மாலை நேரம். இந்தியர்கள் பயன்படுத்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்படியெல்லாம் கூட நடக்குமா? என அனைவரும் மலைத்துப்போய் நின்றார்கள். பூமியில் இந்தியாவின் எதிர்ப்புறம் உள்ள அமெரிக்காவில் மாலை வேளை. இந்தியர்களைப் போல அமெரிக்க மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அமெரிக்கா வின் அதிபர் தேர்தல் முடிவுகள் அப்போது வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவின் புதிய அதிபராக டோனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார். இந்தச் செய்தி பரவத் தொடங்கியதும் உலகமே சற்று அதிர்ச்சி யுடன் அமெரிக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ட்ரம்பின் வெற்றி யாருமே எதிர்பாராதது. அவர் வெற்றியை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கக் காரணம், உலகின் இரண்டாவது ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஒரு முடிவுடன்தான் பரப்புரைகள் செய்தார். அவரின் பரப்புரை முழுவதுமே இனவெறுப்பு கருத்துகளைக் கொண்டிருந்தது. முஸ்லிம்களை, மெக்ஸிகர்களை, ரஷ்யாவை, சீனாவை என பட்டியலிட்டுத் திட்டினார். ஜனநாயகவாதிகளை, தாராளவாதிகளை, கம்யுனிஸ்ட் டுகளை என ஒருவரையும் விட்டுவிடாமல் திட்டித் தீர்த்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். இவ்வளவு வெறுப்பை அதுவரை அமெரிக்க அரசி யலில் யாரும் கண்டதில்லை . அதனால், அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் முடிவுகளும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன. ட்ரம்பை யாரும் பொருட்படுத்தவில்லை.
ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றிபெற்றார். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் தோல்வியடைந்தார். கண்டிப்பாக வெல் லுவார், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஹிலாரியின் தோல்வி அமெரிக்காவில் இருந்த ஜனநாயகவாதிகளையும், தாராளமயவாதி களையும் நன்றாகக் கிளறிவிட்டது. தோல்விக்கு ஆளுக்கொரு காரணம் அதற்கொரு கோட்பாடு எனக் கிளம்பினார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹிலாரியின் தோல்விக்குக் காரணத்தை அடுக்கிக் கொண்டே சென்றனர். விவாதம் அமெரிக்காவில் மட்டு மல்ல, உலகம் முழுவதும் நடந்தது. ட்ரம்ப் எப்படி வெற்றிபெற்றார் என்ற மர்மத்தின் விடை தேடி அனைவரும் கிளம்பினார்கள்.
அமெரிக்கா முழுவதும் நடந்த விவாதங்கள் மெல்ல ஒரு திசையை நோக்கி நகர்ந்தது. ட்ரம்ப் சும்மா எல்லாம் ஜெயிக்கவில்லை. கணிசமான ஓட்டை அறுவடை செய்திருந்தார். இதனைக் கணக்கில் கொண்டு முதல் குற்றச்சாட்டு ரஷ்யா மீது வைக்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்கள் ஹிலாரிக்கு ஆதரவாக இருக்க ட்ரம்பிற்கு எப்படி ஓட்டுகள் குவிந்தன. அப்படியென்றால், ட்ரம் புக்கு ஆதரவாக ரஷிய நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி ஹேக்கர்கள் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைச் சேமிக் கும் கணிப்பொறிகளை ஹேக் செய்து முடிவுகளை ட்ரம்பிற்கு ஆதரவாக மாற்றியிருக்க வேண்டும். இப்படி யான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது (ஆனால், இந்தக் குற்றச்சாட்டுப் பின்னால் ஏஜென்சிகளால் ஆதாரப் பூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது).
அடுத்து, இன்னொரு சாரார் முன் வைத்த குற்றச் சாட்டு, ட்ரம்ப் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றித் தன் பக்கம் திசைதிருப்பியிருக்கிறார் (பொய் சொல்லாத அரசியல்வாதிகளா?). அப்படி ட்ரம்புக்கு ஆதரவாகப் பொய்யான செய்திகளைக் குவிக்கக் காரணமாக இருந்தது பேஸ்புக் என்னும் சமூக வலைதளம். ஃபேஸ்புக் மீது வைத்த இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது, பணம் கொடுத்தார், பயமுறுத்தினார் என்பது மாதிரியான காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது இலவசப் பொருட்களைக் கொடுப்பதாக அறிவித்தார் என்றால் கூட நம்பும் படியாக இருந்திருக்கும். ஆனால், சற்றும் தொடர்பில்லாத மக்களின் பொழுதுபோக்கு வலை தளமான ஃபேஸ்புக் அமெரிக்க அதிபரைத் தேர்ந் தெடுக்கக் காரணமாக இருக்கிறதென்றால்... அதை எப்படி எடுத்துக்கொள்வது? நம்ப முடியுமா!
ட்ரம்பின் வெற்றியை விட அதற்குக் காரணமாக ஃபேஸ்புக்கைக் குறிப்பிடும்போது அனைவரின் புருவமும் உயர்ந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஃபேஸ்புக் மறுக்கவில்லை என்பதுதான் சுவாரஸியம். (நாமும் பொழுதுபோக்குக்காக அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் இருப்பதை நினைவில் கொள்க).
ஒரு சில நாட்களில் ட்ரம்ப் தன் சாகசத்தைத் தொடங்க ஃபேஸ்புக் பற்றிய இந்தக் குற்றச்சாட்டை அனைவரும் மறந்துவிட்டார்கள். செய்திகளில் இருந்து இது காணாமல் போய்விட்டது. பல மில்லியன் டாலர் நிறுவனமான ஃபேஸ்புக்கின் தலைவரும், அதை உருவாக்கியவருமான மார்க் ஜுக்கர்பர்க் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், எல்லாம் சில மாதங்கள்தான்.
சில மாதங்கள் கழித்து...
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம். அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு நேரம். இன்னும் சில மணி நேரங்களில் ஞாயிறு உதயமாகப் போகிறது.
'தி சன்டே அப்சர்வர்' பத்திரிகையின் தலைப்புச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கப் போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சனிக்கிழமை முடிந்து தனக்கு சனிதோஷம் பிடிக்கும் என்று ஜுக்கர்பர்க்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றைய தலைப்புச் செய்தியில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலை உருட்டப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியின் சுருக்கம் இதுதான்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 24.12.18
'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்! (3)
ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா (cambridge analytica) என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல அமெரிக்க வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது.
"ஃபேஸ்புக் தகவல்களின் உதவியுடன் பல வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக ஓட்டுப்போட அவர்கள் முடிவெடுக்க தாக்கம் செலுத்தினோம், அவர்களைக் குழப்பினோம், தூண்டினோம்" என ஒருவர் சாட்சியம் அளித்திருந்தார். ஆங்கிலத்தில் அவரை "விசில் ப்ளோவர்" (Whistle blower) என்று அழைப்பார்கள். ஆபத்து வரும் முன் காவலர் விசி லடித்து எச்சரிக்கை செய்வார் அல்லவா! அதைப்போல அரசு, அல்லது தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடுத் தனங்களை மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக வெளிப் படுத்துபவர்களை விசில் ப்ளோவர் என்று அழைப் பார்கள். அப்படிப்பட்ட விசில் ப்ளோவர்தான் கிறிஸ் டோபர் வையலி. அவர் "கேம்பிரிட்ஜ் அனா லிடிகா" (Cambridge Analytica) நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
சில மணி நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உலகம் முழுவதிலும் நடக்கும் பல தேர்தல் களில் சமூக, வலைதளங்கள் மற்றும் இதர டிஜிட்டல் தகவல்களின் உதவியுடன் இத்தகைய "வாக்காளர்களை வசியப்படுத்தும்" (Persuading Voters) வேலைகளைச் செய்திருப்பது அம்பலமானது. குறிப்பாக இந்தியத் தேர்தல்களிலும். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க செனட்கள் கொண்ட குழு மார்க் ஜுக்கர்பெர்கை விசாரணைக்கு அழைத்தது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ராஜினாமா செய்தார். தேர்தல்களில் சமூக வலைதளங்கள் வக்காளர்களை வசியப்படுத்தவும், அவர்களை திசைத்திருப்பவும், குழப்பவும் பயன்படும் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அனைவரின் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவின் தகவல்தொடர்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அனைத்துச் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்திய தேர்தல்களில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நிறுவனங்களும், வலை தளங்களும் தடை செய்யப்படும் என எச்சரித்தார். ஆனால் பீதி விட்டபாடில்லை. தேர்தல் நடக்கும் போதெல்லாம் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.
குழப்பமாக இருக்கிறதா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் தெரிகிறதா?
ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும்? தேர் தலுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்மந்தம்? அட... தேர்தலுக்கும் இணையத்திற்கும்தான் என்ன சம்மந்தம்? நான் வரிசையில் நின்று வாக்களிப்பதை அவர்களால் எப்படி மாற்ற முடியும்? முதலில் இது சாத்தியமா? என்று பல கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
முதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறேன்.
ஆம், இதெல்லாம் முடியும்தான். விடை இதோடு முடிவதல்ல. ஃபேஸ்புக் பயன்படுத்தும் உங்களைத் தங்களுக்கு ஏற்றாற்போல் பல நிறுவனங்கள் வளைத்துப் போட முடியும். உங்களைக் குறிப்பிட்ட பொருட்களை வாங்க வைக்கமுடியும். உங்களுக்குத் தேவையே இல்லை என்றால் கூட, தேவையைச் செயற்கையாக உருவாக்க முடியும். உங்களைத் தங்களுக்கு ஆதரவாக வசியப்படுத்த முடியும். அதுவும் தொழில்நுட்ப ரீதியாக, அறிவியல் பூர்வமாக... உங்கள் மனநிலையை மாற்ற முடியும்.
நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவரா? எதற் கெல்லாம் பயன்படுத்துவீர்கள்? (கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோனில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்)
பொருட்கள் வாங்க, சாப்பாடு ஆர்டர் செய்ய, நண் பர்களுடன் தொடர்பில் இருக்க, பொழுதுபோக்கிற்காக, சினிமா பார்க்க, பில் கட்ட, பயணச் சீட்டு வாங்க என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போதும்... நீங்கள் பல நிறுவனங்களின் அடிமை; உண்மையைச் சொன்னால் நீங்கள் ஒரு சோதனை எலி; அதே நேரம் யாரோ ஒருவர் கோடி கோடியாக லாபம் குவிக்க உதவும் ஓர் அப்பாவி அடிமை.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருக்க நீங்கள் சமூகவலைதளங்களைப் பயன்படுத்த லாம். உங்களின் முன்னால் காதலியைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடப் பயன்படுத்தலாம், மீம்கள் பார்த்து ரசித்திருக்கலாம், இணையப் போராளியாக இருக்கலாம், நீங்கள் இதில் எந்தக் காரணத்தைச் சொல்லி சமூக வலைதளங்களைப் பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் அவர்களுக்கு ஒரு எலிதான்.
நீங்கள் இந்தச் சமூகவலைதளங்களைப் பயன்படுத் துவதால் பெறும் நன்மைகளை விட உங்களைப் பயன்படுத்தி அவர்கள் பெறும் நன்மைகள் அதிகம். ஆனால், மறுபக்கம் இந்தச் சமூகவலைதளங்களால் உங்களுக்கு வரும் பிரச்சனைகளும் அதிகம்.
நீ ங் க ள் ஃபேஸ் புக்கைப் பயன்படுத்துகிறீர்கள். நிச்சயம் அய்ந்து பைசா அதற்காகச் செலவு செய்திருக்க மாட்டீர்கள். ஃபேஸ்புக்கின் பயனாளராக இலவசமாகத் தான் சேர்ந்திருப்பீர்கள். உங்களைப் போன்று பல லட்சம் பேருக்குச் சேவை தர ஃபேஸ்புக் தொழில்நுட்ப ரீதியாகப் பலமான கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஒரு சின்ன உதாரணம் பாருங்கள். பல கோடிப் பயனாளரின் வருகை, பகிர்வுகளின் படங்கள், வீடியோக்கள் என சகலத்தையும் ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கிறது. இவையெல்லாம் பல Terabyte டேட்டாக்கள். அப்படியென்றால் அவ்வளவு தகவல்களைச் சேமிக்க எவ்வளவு பணம் செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள்? நாம் ஃபோனுக்குப் போட்டிருக்கும் 4 ஜிபி டேட்டா கார்டின் விலை சுமார் 500 ரூபாய். அப்படியென்றால் ஃபேஸ்புக் பயனாளர் களின் பல லட்சம் ஜிபி டேட்டாவைச் சேர்த்துவைக்கப் பணம் வேண்டாமா? இப்படியாக ஃபேஸ்புக் இயங்க பற்பலத் தொழில்நுட்ப உதவிகள் தேவை. அவை யனைத்தும் செலவுகள் பிடிப்பவைதான். அதுவும் கோடிக்கணக்கில் செலவுகள் செய்ய வேண்டும்.
அப்படியிருக்க ஃபேஸ்புக் சமூக சேவை செய் கிறதா? இல்லை சமூக சேவை செய்யத்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்களா?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குப் படி அந்நிறுவனத்தின் சர்வர்களைப் பராமரிக்க ஒரு மாதத்திற்குச் சுமார் 30 மில்லியன் டாலர்களைச் செலவு செய்கிறார்கள் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 1800). கோடி மாதத்திற்கு 1800 கோடி ரூபாயைச் செலவுசெய்து இலவசமாக நம்மை பயன் படுத்த விடும் ஃபேஸ்புக் எப்படித் தன் செலவுகளைச் சமாளிக்கிறது? அது மட்டுமா அந்நிறுவனம் லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறது.
லாபக் கணக்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த படியேதான் இருக்கிறது?
இது எப்படிச் சாத்தியம்?
ஃபேஸ்புக் செலவு செய்வதைவிடப் பல கோடி டாலர்களுக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்திற்குக் காரணம் எல்லாம் நம் மூலமாகத்தான். அதாவது பயனாளர்கள் மூலமாகத்தான்.
நீங்கள் எப்படியெல்லாம் இந்நிறுவனங்களுக்குச் சோதனை எலியாக இருக்கிறீர்கள்? அவர்களின் வருமா னத்திற்கு எப்படி உரமாக இருக்கிறீர்கள்? அவர்கள் உங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள் கிறார்கள்? இதனால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள், அறம் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்தையும் பற்றி அறிந்துகொள்வோம். விவாதிப்போம்.
இது ஒரு வெறும் தொடக்கம்தான்..."
உள்ளே பாடம் எடுப்பதைப் போல அருமையாக பல்வேறு செய்திகளை எளிதில் புரியும்படி விளக்கி எழுதியுள்ளார்.
நம் கையில் உள்ள வாக்குச் சீட்டை 'மயக்க பிஸ்கட்டுகள்' கொடுத்து ஏமாற்றிப் பறிப்பதுபோன்ற ஒரு வித்தை, இப்போது நடைபெறும், இனிவரும் - தேர்தல்களில் உண்டு என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.
- விடுதலை நாளேடு, 25.12.18