டாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூலகம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்!
ஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து, பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.
அவர்களுக்கு ஆச்சரியம்...!
அது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.
டாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே! தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா? அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே!
அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.
இப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே!
புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில் அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!
தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference)
வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்!
என்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!
இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.
அப்படி படிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!!! சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.
அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே தனது நூலில் பதிவு செய்துள்ளார்).
‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே!’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,
பாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders)
அவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.
எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!’’ என்று கூறினார்.
அவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!
அதுமட்டுமா?
டாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.
அடுத்துப் பார்ப்போமே!
டாக்டர் அம்பேத்கரின் நட்புறவு வட்டத்தின் நெருங்கிய சீடரான நாம்தேவ் நிம்காடே, ஓர் நாள் மாலை டாக்டரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். வழமைக்குமாறாக டாக்டர் அம்பேத்கர் சற்றுப் பதற்றத்துடன் கவலையும், அதிர்ச்சியும் உறைந்த நிலையில் உள்ளதைப் புரிந்து கொண்ட நாம்தேவ் "என்ன நடந்தது, ஏன் இன்று இப்படி இருக்கிறீர்கள்?" என்றுகேட்கிறார்.
அதற்கு டாக்டர் பதிலளிக்கிறார். "நேற்று நான் ஒரு விபத்தில் சிக்கி மீண்டேன். புத்தகம் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து நடந்தது; கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால், சாலைகள் வழுக்கிடும் நிலையில் இருந்திருக்கிறது. அப்படி கார் ஓடும்போது ஏற்பட்ட அந்த விபத்து, கார் வழுக்கிச் சென்று விபத்தை உருவாக்கிடும் பேரபாயம் ஏற்பட்டது; எப்படியோ எனது காரோட்டி (டிரைவர்) மிகவும் சாமர்த்தியமாக ஓட்டி, காரை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து என்னைஅந்த ஆபத்தி லிருந்து காப்பாற்றினார். நான் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். அதோடு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகவும் தந்தேன். ஒரு வேளை அப்போது அந்த விபத்து ஏற்பட்டு நான் செத்திருந்தால் என்னவாகும்?"
இப்படி அவர் சொன்னதைக் கேட்கும் எவரும், டாக்டர் தனது உயிரின்மீது எவ்வளவு ஆசை வைத் துள்ளார்; அல்லது சாவு கண்டு எவ்வளவு பயப்படுகிறார் என்றுதான் அவசரப்பட்டு, நம் கருத்தைச் சொல்லி விடுவோம்.
'நான் செத்திருந்தால் என்னவாகியிருக்கும்?' என்பதோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார் அம்பேத்கர்.
'நான் ஹிந்துவாக அல்லவா செத்திருப்பேன்! அதுதான் எனது கவலை!' என்பதுபோல் அப்படிக் கூறியிருக்கிறார்.
அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு தான் செத்திருந்தால் ஓர் ஹிந்துவாகவல்லவா செத்திருப்பேன் என்று கூறியது எவ்வளவு ஆழமான கொள்கை உறுதியையும், சொன்னதை செயலில் நாட்டுவதில் அவருக்கு இருந்த லட்சிய உறுதியையும் அல்லவா இது காட்டுகிறது.
"பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். அது எனது விருப்பமோ, அல்லது தேர்வோ அல்ல; ஆனால் இறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகச் சாக மாட்டேன்என்பது உறுதி!" என்று பல மேடைகளில் முழங்கியவர் ஆனபடியால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால், தான் சொன்ன சொல்லை - லட்சியத்தை - காப்பாற்ற முடியாமல் போயிருக்குமே என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து அவருக்கு அவரது உயிரின்மீதிருந்த பற்றைவிட, அவரது கொள்கைப் பிரகடனமான "நான் சாகும்போது ஒருக்காலும் ஹிந்துவாக சாக மாட்டேன்!" என்ற உறுதியைச் செயல்படுத்த முடியாத வரலாற்றுப் பழிக்குத் தான் ஆளாகி விட்டிருப்போமே என்ற கவலை தான் டாக்டரை அதிர்ச்சிக்குரிய தாக்கியது!
உயிரைவிட இலட்சியம் - கொள்கை - சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றுதல் என்பவை முன் னுரிமை பெற்று முதல் இடத்தில் உள்ளன அவரது வாழ்வில் என்பதைப் பார்த்தீர்களா?
இதைப் படித்தவுடன் அம்பேத்கர் என்ற ஒரு நாணயத்தின் மறுபக்கமான தந்தை பெரியார் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த இதே போன்ற கவலையும், அதிர்ச்சியும் எமது நினைவில் நிழலாடியது!
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கச்சனம் என்ற ஊரில் 1964இல் நடைபெற்ற 'ஜாதி ஒழிப்பு மாநாட்டில்' தந்தை பெரியார் பேசும்போது, (அம்மாநாட்டில் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர், நானும் கலந்து கொண்டேன்!) "சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய் - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு, 'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும்? இது புற்றுநோய் - நாக்கில் ஏற்பட் டுள்ளது; என்றாலும் சிகிச்சைகளை உடனே துவக்கி விடுகிறோம்' என்று கூறி ஏதோ சிகிச்சைகளை மேற்கொண்டார்.
அப்போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, துன்பம், கவலை ஏற்பட்டு விட்டது.
"நாம் சாவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. வாயில் புற்று நோய் வந்தல்லவா இந்த இராமசாமி நாயக்கன் செத்தான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அவனுக்கு கடவுள் என்ன தண்டனை, எப்படித் தந்தார் பார்த்தீர்களா? என்று அல்லவா எதிரிகள் பிரச்சாரம் செய்வர். அதை சிலரும் நம் மக்கள் முட்டாள்களாக இருப்பதால் நம்பித் தொலைப்பார்களே என்று கருதி அப்படி நடப்பதைவிட தற்கொலையாவது செய்து கொள்வது மேல் என்றுகூட நான் யோசித்த துண்டு" என்று கூறினார்.
அவருக்கு மரண பயம் இல்லை; மாறாக அய்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியது - தனது கொள்கைக்கு ஓர் பின்னடைவு பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுமே என்ற கவலைதான் அவரை இந்த ஒரு விபரீத முடிவுக்குக்கூட தள்ளிவிட்டது!
டாக்டர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி - மரணத்தைவிட தமது கொள்கை, லட்சிய, வெற்றிக்காக எவ்வளவு கவலையெடுத்தனர், அதற்காக உழைத் துள்ளனர் என்பதைப் பாருங்கள்.
இலட்சிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களது இலக்கணம் எப்படி என்பது இதன்மூலம் புரிகிற தல்லவா?
இப்படிப்பட்ட அரிய தகவலைக் கூறும் நாம்தேவ் அவர்கள் தனது சைக்கிளில் சென்று, அண்மையில் அம்பேத்கரின் புத்தகம் வெளிவந்திருந்தால் அதைக் கொடுங்கள் என்று (1956 டிசம்பர் 6ஆம் தேதி) காலை குறிப்பிட்ட நாளன்று புத்தக விற்பனையாளரிடம் கேட்கிறார்.
அவர் ஒரு புத்தகத்தை இவருக்கு எடுத்துக் கொடுக் கும்போது, "இந்த நூலாசிரியர் டாக்டர் அம்பேத்கர் இன்று காலை காலமானார் என்று வானொலியில் செய்தி சொல்லப்படுகிறது; தலைவர்களும், மக்களும் அவரது (டில்லி இல்லம்) நோக்கிச் செல்கின்றார்களே" என்று இவரிடம் கூறிட இடி தாக்கியதுபோல உணர்ந்து - "இருக்காது நிச்சயம், அது உண்மையாக இருக்காது; இருக்கவும் கூடாது" என்று தலையில் அடித்துக் கொண்டே சென்று செய்தி உறுதியான பிறகு அம் பேத்கர் எழுதிய புதிய புத்தகம் ஒருகையில்; மறுகையில் மாலையும் அவரது சடலத்தின் மீது வைத்து, தேக்கிய கண்ணீர் ஏரியை உடைத்து விட்டுத் திரும்பினார்.
என்னே கொடுமை! இயற்கையின் கோணல் புத்தி.
(நதி மீண்டும் ஓடும்)
- விடுதலை நாளேடு,1,2.11.17