பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!


நமக்கு வயதாகிறது என்று கவலைப் படும் முதுமையாளர்களான நண்பர்களே!
ஏதோ இனி நம் உடல் நிலை என்ன வாகுமோ, நமக்கு யார் பாதுகாப்புத் தரப் போகிறார்களோ என்று எண்ணி முதுமையைத் துன்பத்தின் துவக்கம் என்பதுபோல கற்பனைக் குதிரைமீதேறி சவாரி செய்யும் அருமைப் பெரியோர்களே.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் வருத்தப்படாத வாலிபராகவே என்றென்றும் வாழ்ந்து காட்ட முடியும்!
கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள் அல்ல   - நெறிகள் இதோ:
கருத்தூன்றிப் படித்து, களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
1. முதலாவது நெறி: எனக்கு வயதாகி விட்டது என்று ஒரு போதும் அலுப்பு, சலிப்புடன் கூறாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து விரட்டியடியுங்கள்!
காரணம் மூவகை வயது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மறவாதீர்! முதலாவது ஆண்டுக் கணக்கில் வயது
(Chronological Age)
இரண்டாவது பிறப்பு, உறுப்பு  அடிப்படையில் வயது
(Biological Age)
மூன்றாவது  மனதில் நாம் எண்ணும் வயது - மனோ தத்துவ வயது(Psychological Age)
முதலாவது:  நமது கட்டுப்பாட்டிற்குள் வராது கொண்டு வர முடியாது என்பது உண்மை.
இரண்டாவது: நமது உடல் நலத்தைப் பொறுத்தது நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதன் அடிப்படையில் அமைந்த வயது. நாம் எப்படி வாழ்க்கையை அமைத்து நலம் காக்கிறோமே அதைப் பொறுத்தது.
மூன்றாவது: (உணவு முறை உட்பட) முதலாம் நெறி (பாட வழி) எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது, ஆக்கபூர்வ சிந்தனை ஓட்டம், (Positive Attitude) எதிர்மறை சிந்தனைக்கு இடம் தராது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிடும் மனமில்லாத உயரிய - இரட்டை அல்லாத திறந்த ஒற்றை மன - மகிழ்ச்சி தரும் வாழ்வு - நமது இளமைக்குப் பால் வார்க்கும்! சீரிளமைத் திறன் அதன் மூலம் வாய்க்கும்!
2. இரண்டாவது நெறி:
உடல் நலத்தைவிட சிறந்த செல்வம் - உண்மைச் செல்வம் வேறு ஏதுமில்லை. எனவே உடல் நலப் பாதுகாப்பை அலட்சியம் செய்யாமல், அன்றாடம்  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மீதூண் தவிர்த்தல் இவைகளுக்கு முன்னுரிமை.
மருந்துகள் எடுத்தலை தவிர்க்காத ஒழுங்குமுறை அவசியமாகும்.
நல்ல மருத்துவக் காப்பீடு திட்டம் பயன் தரும் - (ஆனால் இதை நன்கு ஆராய்ந்து  தேர்வு செய்தல் அவசியம் - குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்தால், நோய் வந்தபோது சிகிச்சைச் செலவு என்ற பாரம் - சுமை குறையக் கூடும்).
3 மூன்றாவது நெறி: பணம் அவசியம்(Money) நமது தேவைகள், செலவுகளுக்கு நியாய வழிகளில் - ஈட்டும் பொருள் - சம்பாதித்த பணம் மிகவும் முக்கியம்.
பணத்தைச் சம்பாதிப்பதைவிட சேமிப்பது மிக மிக முக்கியம்.
எளிமை, சிக்கனம், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தல், தேவைக்கு மட்டுமே செலவழித்தல், டம்பாச்சாரத்தை அறவே கை விடுதல் எல்லாம் பணம் சேர உதவிடும்.
ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை      (குறள்-478)
வரும் வருமானம் அதிகமாக இல்லையே என்று கவலைப்படாதீர்கள். அதைப் பெருக்க திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் அருமையான வழி முறை கூறியுள்ளனர்!
செலவைச் சுருக்குதலே, வருவாய் பெருக்குதலுக்கு வாய்ப்பேற்படுத்தித் தரும் என்பது உண்மை.
பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் எவரும் பணப் பேராசைக்கு அடிமையாகி விடக் கூடாது. அது உங்கள் எஜமானன் ஆனால் ஆபத்து; அதை உங்கள் பணியாளராகவே வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(மற்றவை நாளை)
- கி.விரமணி
-விடுதலை,30.11.15

முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும், செயற்பாட்டுக்கும்! (2)

முதுமையை விரட்டி, என்றும் சீரிளமைத் திறத்தோடு உள்ளோம் என்று முதுகுடிமக்கள் வரை - மனப்பாங்கைப் பெற பின்பற்ற வேண்டிய பத்து நெறிகளில் மூன்று நெறிகளை முன்னர் விளக்கினோம். அதன் தொடர்ச்சியே இவை:
4. நான்காம் நெறி: இளைப்பாறுதலும் (Relaxation)
பொழுது போக்கில் திளைத்தலும்
(Recreation)
நமது மனப்பாங்கு வளமை,இளமை பெற மிகவும் இளைப்பாறுதல் தேவை -கோடையிலே இளைப்பாறுதல் என்ற வடலூர் வள்ளல் பெருமானின் பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருமே!
ஆங்கிலச் சொல்  Relexation என்பதற்கு வடலூரார் தந்த வளம் மிக்க செம்மொழியாம் எம் மொழியான தமிழ் மொழியில் உள்ள சொல் இளைப்பாறுதல் - களைப்பைப் போக்கும் செலவில்லா மாமருந்து!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! - இல்லையா?
கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணனின் பொருள் பொதிந்த நகைச்சுவை துணுக்குகளை ஒலி நாடா மூலமாகவோ, அல்லது ஞிக்ஷிஞி என்ற ஒளி வட்டத் தகடுகள் மூலமோ வீட்டில் கேட்டு மகிழலாமே!
அதுபோல தற்போதுள்ள காமெடி சேனல் என்ற நகைச்சுவைத் துணுக்குப் பகுதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரியுங்கள் - பல ஆழ்ந்த பொருள் உள்ள நகைச்சுவை அல்லவென்றாலும்கூட!
நல்ல இசையைக் கேட்டு ரசியுங்கள் - உங்களை மறந்து அதில் லயித்து, புத்துணர்வைப் பெற அதன் உதவியை நாடுங்கள்; நாதஸ்வரம், வயலின், வீணை (பழைய யாழ் இல்லையே இப்போது) இவைகளால் ஒரு மீட்டுருவாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
துன்பம் நேர்கையில், யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே?
என்று அன்பு மகளைப் பார்த்து புரட்சிக் கவிஞர் கேட்டதன் உள்ளார்ந்த கருத்து இதுதானே!
பொழுதுபோக்கு (recreation) என்பவை புத்தகப் படிப்பாகவோ, விளையாட்டுகளாகவோ, பிடித்த நண்பர் களுடன் கலகலப்பாக உரையாடுதல் நல்ல ஓவியங்கள், சிற்பங்களைக்கூட கலை நயக்கண் கொண்டு பார்த்து அதில் உள்ளத்தைப் பறி கொடுத்தோ எப்படியேனும் இருக்கலாம் அதன் மூலம் புத்தாக்கத்தைப் பெருக்கலாம்!
என்றாலும் இந்தப் பொழுது போக்கு அம்சம் குறித்த ஒரு எச்சரிக்கையும் தேவை!
இது உணவில் உப்பைச் சேர்ப்பது போல இருக்க வேண்டுமே தவிர, உப்பே உணவாகும் கீழ் நிலைக்குச் சென்று விடக் கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி பார்ப்பதை பொழுது போக்கு எனக் கூறும் நண்பர்கள் முதுமையாளர்கள் இதை மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளல் நல்லது.
5. காலத்தை மிகவும் மதித்து, திட்டமிட்டு வாழ்தல் என்பது அய்ந்தாம் நெறி.
காலத்தை உங்கள் கட்டுப்பாட்டில் ஒரு குதிரையின் லகானைப் பிடித் துச் சவாரி செய்பவரைப்போல கட்டுப்பாட்டில் வைத்து வாழ்தல் அவசியமாகும்.
ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய் பிறக்கிறோம். நேற்று என்பது கொடுக்கப்பட்ட (கிழிக்கப்பட்ட செக்) பணவோலைத் தாள்(paid Cheque) போன்றது.
நாளை என்பது பிராமி சரி நோட் - புரோநோட் போன்றது!
இன்று என்பது கையில் உள்ள ரொக்கம்   (Ready cash)
மறவாதீர்!
இதை லாபகரமாகச் செலவழிக்க வேண்டாமா? அதைவிட முக்கியம், ஒவ்வொரு விநாடியும் திரும்பி வராதவை என்பதால் திட்டமிட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக்கி உழைப்பது, நடப்பது, படிப்பது, எழுதுவது முதலிய பலவற்றையும் அட்டவணைப்படுத்தி வாழ்ந்தால் சாதிக்கும் செயல்கள் எண்ணற்றவை.
முடியாதோ என்பவைகளும், விடியாதோ என்ற கவலைகளும், பறந்தோடும் - துணிவுடன் மேற்கொண்டால்
இவ்வளவு எளிதா? நான் ஏன் இதை பெரிய மலை என்று தவறாக எண்ணினேன் என்று பிறகு எளிதில் நீங்களே உணர்வீர்கள்!
(நாளை மற்றவை)
- கி.வீரமணி
-விடுதலை,1.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக