பக்கங்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மன நலம் - மன வளம் - முக்கியம்!

இன்று உலக மன நல நாள். (அக்டோபர் 10) நமது உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக மிக முக்கியம் உள்ள நலம் - உள்ள வளம்.
நம் உடல் நலம்கூட உள்ள நலத்தைப் பொறுத்தே அமைகிறது.
எடுத்துக்காட்டாக, நம் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது; நான் நலத்துடன் இருக்கி றேன். நான் நலம் பெற்று வருகிறேன்; நான் விரைவில் நலம் பெற்று வழமை யான சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்று படுக்கை யில் இருக்கும் நோயாளிகள் -  சதா எண்ணிக் கொண்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டும் இருந்தால் உடல் உபாதைகளிலிருந்து, வெளிப்பட இது ஒரு அருமையான மன - மருந்து ஆகும்!
இதன் அடித்தளம் - அடிநாதம் - தன்னம்பிக்கை தான். எந்த நிலையிலும் மனிதர்கள் தன்னம்பிக்கையை இழக் கவே கூடாது!
தன்னம்பிக்கையை இழக்காத வர்கள் எவரும் எத்தகைய துன்பம், துயரம், சோதனைகள், வேதனைகள், இழப்புகள் ஏற்பட்டாலும் ஒருபோதும் சோர்ந்து, மூலையில் முடங்கிவிட மாட்டார்கள்.
தடை ஓட்டப் பந்தயத்தில் ஓடும் ஒருவனுக்கு ஒன்றிரண்டு தடுத்தாலும்; அதையும் தாண்டி, மற்ற போட்டியாளர் களைத் தாண்டி இலக்கில் முதலில் சென்று முதற் பரிசைத் தட்டிச் செல்லும் நிலை நம் கண் முன்னே நிகழ்கிறதே!
மனிதர்களை விடுங்கள்; குதிரைகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கூட இத்தகைய தடை ஓட்டப் பந்தயத்தில் தாண்டித் தாண்டி வெற்றியின் இலக்கை அடைகிறதே! வியப்பானதல்லவா? பயிற்சி தானே காரணம்?
ஆறறிவு இல்லாத, அய்ந்தறிவுப் பிராணியான குதிரை அதை எப்படிச் செய்தது?
அதன் மனதில் - பயிற்சி - தொடர் பயிற்சி காரணமாக ஏற்பட்ட முயற்சியின் முத்திரைதானே இந்த வெற்றியை அதற் குக் கொணர்ந்து கொடுத்தது! இல்லையா?
சின்ன துன்பங்களாயினும், பெரிய துயரங்களாயினும் மனிதர்கள் காற்றில் அலைக்கழிக்கப்பட்ட வாழை இலை களைப் போல் கிழிந்து விடவோ, அல்லது வாழைகள் சாய்ந்து விழுந்து விடுவது போலவோ ஆகி விடாமல், எவ்வளவு சூறாவளியிலும் வளைந்து, நெளிந்து அதனை எதிர் கொண்டு வெற்றி பெற்று, வீழாமல் நின்று, வென்று காட்டும் நாணலைப் போல மூங்கில் மனப்பாங்கு டன் - நீக்குப் போக்கு தேவைப்படின், அத னையும் பெற்று, நின்று நிலைத்துக் காட்டு வதே வாழ்வின் வெற்றிக்கு அடையாளம்.
மனித மனம் என்பது  எல்லைகள் அற்றவை;பரந்து விரிந்தவை; ஆழ் கடலினும் அதிகமான ஆழம் உடையது. அது ஒரு சிமழ் அல்ல; அது ஒரு புழு அல்ல. மனோவேகம் அளக்க முடியாதது அல்லவா?
அது ஒரு கம்பீர கர்ச்சனை புரியும் சிங்கம் போன்றது! சிங்கம் சிலிர்த்து கர்ஜனை எழுப்பி, இரைத் தேடிடப் போகும் முன் எதிரில் கிடைப்பவை நிலை என்னவாகும்?
சிங்கம் பின் வாங்குமா? அதுபோல பிரசசினைகள் ஆயிரம் வந்தாலும் எதிர் கொண்டு, நின்று வென்று காட்டுவேன் என்ற வைராக்கியத்தினை எண்ணி பாறைபோல் நின்று - பனி போல் உருகி ஓடாமல் - வென்று காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்!
அய்யோ இப்பிரச்சினையிலிருந்து இனி நான் எப்படி மீளப் போகிறேன் என்று கலங்கி, கசங்கி, குப்பைத் தொட்டி களை உங்களை நீங்களே உறைவிட மாக்கிக் கொள்ளாதீர்கள்!
தீர்க்க முடியாத பிரச்சினைகளே உலகில் கிடையாது. மனிதனின் பகுத் தறிவு வெறும் கூர்மை ஆயுதம் மட்டு மல்ல; பல கோணத்திலும் பயன்படும் பல்வகை பரிமாணப் போர்வாள். அதே போர்வாள் சில நேரங்களில் கேடய மாகவும் மாறும்; மாற வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சினை இல்லாத வர்கள் எவரும் இல்லை; அலை இல்லாத கடல் உண்டா? ஆசையில்லாத மனிதருண்டா? அன்பு மலராத காதல் உண்டா? விடை இல்லாத கணக்கு உண்டா?
எல்லாம் எங்கே இருந்து புறப்படு கின்றன? ஊற்றுக்கும் சரி நாற்றுக்கும் சரி அடித்தளம் மண் தரை - நிலம் அல்லவா?
அதுபோல மனம் - நிலம் போன் றது! அகழ்வாரையும் தாங்க வேண்டும் அது! இகழ்வாரையும் பொறுக்க வேண்டும் அது! ஆனால், புகழ்வாரி டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டிய தடுப்பணையையும் கட்டிக் கொண்டே அது தொய்வின்றி, தொடர் பணி ஆற்ற வேண்டும்.
இந்த மனம் தொட்டுக் காட்ட முடியாத ஒன்றுதான்; ஆனால் விளங் கிக் கொள்ள முடியாத புதிர் அல்ல!! மூளை என்ற நம் உடலின் முக்கிய உறுப்புதான் இதற்குமூலம்!
உனக்கு மூளை இருக்கா? என்று கேட்டால் ஏன் மனிதனுக்குத் தீராத் திடீர்க் கோபம் வெடிக்கிறது? புத்தி - அறிவு, உள்ளம் எல்லாம் அங்கிருந்தே முகிழ்க்கின்றன; முத்திரை பதிக்கிறது!
(மேலும் திங்களன்று)-விடுதலை,11.10.15
மனவளம் என்பது பொருள் வளத்தைவிட மேலானது; தேவை யானது - அடிப்படையானது.
நம் உடலின் மூளை என்ற கருவியே இதன் மூலமாகும்.
சிலர் இல்லாதவைகளையும் கற்பனைகளையும் காட்டி மக்களை இன்றும் குழப்பிக் கொண்டுள்ளனர்!
சிந்தனை எப்படி எதன் மூலம் சிறகடித்துப் பறக்க முடிகிறது? மூளை யின் பலத்தாலும், பழுதுபடாத செயலி லும்தானே!
மனநலம் குன்றியவர்கள், மனநலம் பாதித்தவர் என்பது எதைப் பொறுத்துக் கூறப்படுகிறது? எதனை அடிப்படையாகக் கொண்டு மனநல மருத்துவர்கள் மருத்துவம் செய்ய முனைகின்றனர்?
மூளை! மூளை!! மூளை!!!
மூளையின் முடங்காத பணி, முற்றாகி விடாது மூளை நன்கு உள்ளவரை; இது மருத்துவ இயல்.
மூளைச்சாவு (Brain Death)என்ற ஒன்றுபற்றி இப்போது அடிக்கடி ஏடுகளில் வருகின்றதே, அதன்படி மற்ற உடல் உறுப்புகளையெல்லாம் பயன்படுத்த உடல் உறுப்புக் கொடை தரும் மனிதநேயர்கள் பலர் வரலாறு படைக்க எது அடிப்படை?
அத்தகைய மூளையை வளப் படுத்தி, பலப்படுத்திட வேண்டும்; விண்வெளி ஆய்வு போலவே மூளை ஆய்வும் - அது பயன்படும் முறையும், அதன் பரப்பில் எவ்வளவு சிந்தனை யால் உழுது பயன் விளைவிக்கப்பட்ட பகுதி; எஞ்சிய பரப்பும் அதன் எதிர் காலமும் எப்படி அமையும் என்பதை மூளை ஆராய்ச்சி அறிவியலாளர்; மனோ தத்துவ நிபுணர்கள் மருத்துவர்களின் ஆய்வு ஓர் தொடர் கதை;  அது முடிந்து விட்ட சிறுகதை அல்ல!
மூளை சிறந்த முறையில், நல்ல வழியில் நேர்கோட்டில் செல்லும்போது, மிகு பயன் உருவாகிறது!
அதே மூளை சிந்தனை ஆக்கபூர்வ மற்று, தீய வழியில், வெறும் உணர்ச்சி களுக்கு அடிமைப்பட்டு, தனது அறிவுப் பாதைப் பயணத்தை மாற்றிக் கொள்ளும் போது, அது தற்காலிக மகிழ்ச்சியையும், நிரந்தரத் தோல்வியையும் நமக்குப் பரிசாக வழங்குகிறது!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது இலக்குக்காக மட்டும் வள்ளுவர் கூறியது என்பதை விட, அது நம் மூளைக்குச் செலுத்தும் நல்ல நல வாழ் வுக்கான பாதுகாப்பும்கூட என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணங்கள் இதன் மூலம் விரட்டியடிக்கப்படுகிறது!
வாழ்க்கையின் வெற்றி - தோல்வி, இன்ப - துன்பம் எல்லாம் இதன் விளை வாகவே முகிழ்த்துக் கிளம்புகின்றன! முத்தெடுக்க மூழ்குவோர் முழுக் கடலின் அடியிலே சென்று விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?
ஆழ் கடல் - கீழ் கடல் எல்லாம் தொட்டுத் துருவி விட்டுத் திரும்பி விட் டார் என்று அறுதியிட்டுக் கூற முடியுமா?
எனவே மனவேகம் போலவே, மன ஆழமும் எளிதில் அளந்து கூற இயலாத ஒன்று. இன்றுவரை (நாளை என்னவோ! அறிவியல் நுழையாத பகுதிதான் அனைத்து அண்டங்களிலும் ஏது)
புறந்தூய்மை நீரான், அமையும் அகந் தூய்மை
வாய்மையால் காணப் படும்               - குறள் 298
இதன் பொருள்: ஒருவனின் உடம்பு தூய்மையாக ஆதல் என்பது, தண்ணீரால் ஏற்படும். அவனது உள்ளம் தூய்மையாக ஆதல் என்பது, அவன் வெளிப்படுத்தும் உண்மையால் உணரப்படும்.
ஏன் நமக்குக் குளியல் தேவைப் படுகிறது? குளிப்பது என்பது சடங்கா? சம்பிரதாயமா? நிச்சயம் இல்லை. அழுக் கினைப் போக்கி உடலைக் கழுவிய வுடன் நமக்கொரு புத்துணர்ச்சி, புது மகிழ்ச்சி உண்டாகிறதே!
அதுபோல ஏற்கெனவே அழுக் காறு, அளவுமீறிய ஆசை, குறுக்கு வழிகளில் பொருளையும் புகழையும், பதவிகளையும் ஈட்டிட முயற்சி, எல்லையற்ற சுயநலம் - இவைகளால் அழுக்கேறிய மனத்தை தூய்மைப் படுத்துதல் எதன் மூலம்?
வாய்மை மூலம்!
வாய்மை என்பது வெறும் உண்மை மட்டுமல்ல. சிற்சில தேவைப்படும் நிலைமைகளில் பொய்மையும் கூட இணைந்தாலும், பொன்னகை  செய்ய சேர்க்கப்பட்ட மற்ற தங்கத்தைவிட மாற்றுக் குறைவான உலோகங்களின் சரி நிகர் கலவைபோல - ஒளி வீசப் பயன்படும்.
ஆனால், அதைவிட முக்கியம் - தம் நெஞ்சம் அறிந்த உண்மைகளை - சுயநலம் கருதி - மாற்றிக் கூறும் பொய் ஒருபோதும் - மன அழுக்கினைப் போக்காது என்கிறார் வள்ளுவர்!
பகுத்தறிவுவாதிகள் விளைவுகளை ஏற்கத் தயங்காத வீரர்கள். எனவே அவர்கள் அகராதியில் வாய்மை எனப்படுவது அறிவு நாணயம் தான்.
தன் நெஞ்சு அறிவதை  ஒளிவு மறைவு இன்றி ஒப்புக் கொண்டு சொல்லல். வரும் அல்லல் கருதி மறைத்துப் பிழைக்கத் தெரியாதவர்கள் அவர்கள்.
(மேலும் சில செய்திகள் நாளை)
மனம் என்பது மூளை செய்யும் பணியின் உருவகச் சொல்தான். அறி வுக்கே முன்னிடம்; உணர்ச்சியை நல்ல மனத்தவர் - மனதை ஆள்பவர்கள்  கட் டுக்குள் கொண்டு வரும் ஆற்றலா ளர்கள் ஆவார்கள்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
என்ற சொலவடை எதை விளக்குகிறது?
சிந்தனையில் சீர்மையும், நேர்மை யும் முரணற்ற தன்மையும் அமைந்து - குறுக்கு வழிகளில் ஈடுபடாமல், தன்ன லத்தையும் ஓர் கட்டுக்குள் அடக்கி, பொது நலத்திற்குப் பெரிதும் முக்கியத் துவம் அளிக்கும் மனித வாழ்வு - மனிதன் சமூகத்தில் வாழும் பிராணி - சமூகத்தின் ஓர் அங்கம் என்பதால், அவன் தன்னைத் தவறிழைத்த நிலையிலிருந்து தண்டனைக்குத் தப்ப, மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்; யாக யோகங்களைச் செய்ய வேண்டாம்; பாவ மன்னிப்பைத் தேட வேண்டாம்! இவைகளால் பயனில்லை என்பது வேறு செய்தி!
தூய மனதின் தொய்வில்லாச் செயல் அவனைக் காக்கும்; உயர்த்தும்; தடுக்கும். எல்லாவற்றையும்விட அவனை, படுத்தவுடன் தூங்கி, புத்துணர்வுடன் விழிப்புறச் செய்யும்!
இன்றேல் புரண்டு புரண்டு படுத்தும் தூக்க மாத்திரை தேடும்  அவலம் தானே மிஞ்சும்! மன நோயாளிகள் - உடல் நோயாளிகளைப் போலவே இருக்கிறார்கள்!
அவர்களிடம் இரக்கம்) (Sympathy) காட்டினால் போதாது; அவர்களை  அறிய ஒத்தது அறிவானாக (அவர்கள் நிலைக்கு மாறி நம்மை வைத்து) அவர் துன்பம் அறியும் நிலைக்கு  இறங்கி, இரங்கி இரக்கத்தினும் மேலான பண்பான உணர்வைப் (Empathy)
பெற வேண்டும்.
பலருக்கு மன உளைச்சல் அதிகமாகி அவர்கள் மனநோயாளிகளாவதற்கு எவை எவை காரணம் என்று மருத்து வர்கள் மனோதத்துவ ரீதியிலும் உணர்ந்து, நோய் நாடி நோய் முதல் நாடும் போக் கினைக் கடைப்பிடிப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்! சீரிய முன்னோடி முயற்சி!!
இதோ ஒரு மனிதநேய மருத்துவ உதவியைப் பாரீர்! தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக தோல்வி நிலையில் உள்ளவர் களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது! செய்தி இதோ:
தோல்வி நிலை சிகிச்சைப் பிரிவு' ஸ்டான்லியில் தொடக்கம்: தமிழகத்திலேயே முதல்முறை தமிழகத்தில் அரசு மருத்துவ மனை களிலேயே முதல் முறையாக, தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மனநல சிகிச்சைத் துறையின் கீழ் இந்தப் பிரிவு செயல்படும். மனநல சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சைத் துறைக்கு ஒரு நாளைக்கு 250 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின் றனர். இதில் 50 பேர் புதிய நோயாளிகள் ஆவார்கள். 40 உள்நோயாளிகளுக்கான படுக்கைகளும் உள்ளன.
இந்தத் துறை யின் கீழ், வயதானவர்கள் தொடர்புடைய மனநலப் பிரச்னைகளுக்கான புறநோ யாளிகள் பிரிவு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை செயல்படுகிறது.  எண்ணச் சுழற்சியால் அதாவது ஒரு காரியத்தை ஒரு முறை செய்து திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் செய்வது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக் கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படுகிறது.  போதைப் பழக்கத்துக்கு அடிமையான வர்களுக்கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செயல் படுகிறது. தோல்வியால் மனநலம் பாதித் தோருக்கு சிகிச்சை: இந்த நிலையில், தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு அண்மையில் தொடங் கப்பட்டுள்ளது.
தேர்வு, காதல், திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து, மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவ மனையின் மனநல சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் அலெக்ஸாண்டர் ஞானதுரை கூறியது: தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு மருத்துவ மனையில் இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட் டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களால் தோல்விக்கு ஆளானவர்கள் தங்கள் சுயகவுரவம் பாதிக்கப்பட்டு விட்ட தாகக் கருதி மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். இந்த நிலைக்கு முறை யாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் மனஅழுத்தம், வன்முறை, ஆக்ரோஷம் உள்ளிட்ட நிலைகளுக் குச் சென்று விடுவார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் எழக் கூடும். இதுபோன்று தோல்வி நிலை யில் உள்ளவர்கள் ஒரு வாரத்துக்கு 15 முதல் 20 பேர் சிகிச்சைக்காக வருகின் றனர். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மருந்துகள், ஆலோசனைகளிலேயே இவர்களைக் குணப்படுத்தி விட முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த சிறப்புப் பிரிவு செயல்படும். இந்தப் பிரிவில் 6 நிபுணர்கள் கொண்ட குழுவினர் பணியாற்றுவார்கள்.
(தினமணி 12.10.2015)
மனதின் துன்பங்களும், துயரங் களும் எப்படி, பல்வேறு அவதாரங் களை எடுக்கின்றன என்று பார்த் தீர்களா?
மனம் என்பது உடலின் மூளை யோடு இயைந்தது என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் சான்று - வேறு என்ன தேவை?
அஞ்சுவதற்கு அஞ்சுதல் என்பதை யும் அஞ்சாமையையும் பலர் குழப்பிக் கொள்ளுகிறார்கள் அது தேவையற்றது.
அஞ்சுவதற்கு அஞ்சுவது ஓர் எடுத்துக்காட்டு மின்சாரக் கம்பியில் கை வைத்து வீரம் காட்ட முனைய லாமா? விளைவு என்னவாகும்?
பேய், பிசாசு மற்றும் பல மூடநம் பிக்கை சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் கண்டு, எதை எடுத்தாலும் அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; என்று கூறுவது அஞ்சக் கூடாத கற் பனைகளை மூலையில் தள்ளுவதற் குப் பதில் மூளையில் பத்திரப்படுத்தி வைப்பது நியாயமா? தேவையா?
அகவாழ்வு - நம் உள்ளத்தைத் தூய்மையுடன் வைத்தல் மூலம் பல ஆக்கச் சிந்தனைகள், தானே மலரும்; எதிர்மறை எண்ணங்கள் (Negative Thougts)
நமக்கு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் நமக்குக் கிட்டும்.
மன அழுத்தம் (Stress)  என்பது எத்தனைப் பேர்களை - அவர்கள் இளையர்களாக இருப்பினும் - நடுத்தர வயதானவர்களாயினும் திடீர் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது! எங்கே மன இறுக்கம் - மனதில் சதா தொடரும் மன உளைச்சல் - இவை தூக்கத்தைக் கெடுக்கிறது; பசியைத் தடுக்கிறது. ரத்த அழுத்தம் அளவுமீறி ஏற்பட்டு அதுவே மாரடைப்பாக, சீரகத்தின் பழுதாக ஆவதற்கு மூல காரணமாக அமைகிறது!
எனவே மன அமைதி, மனதில் எவரையும் தாழ்த்தி எண்ணுதல் - அவரிடம் நேரில் புகழ்ந்து நாமாவளி பாடி விட்டு, பிறகு அவர் நகர்ந்தவுடன், புறம் கூறிப் பொய்த்துயிர் வாழும் போக்கு மற்றவர்களை அழிக்குமுன் இத்தகைய மனம் - உள்ளம் படைத்தோரையே அதிகம் பாதிக்கும்!
எவரிடத்திலும் குறைகண்டால் - தவிர்க்க முடியாத நிலை என்றால், -உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நண் பர்கள், அல்லது உறவினர்கள் என்றால் மட்டும் முகத்துக்கு நேரே மிகுந்த நயத் தக்க சொற்களால் சுட்டிக் காட்டுங்கள், இன்றேல் - புது அறிமுகம் என்றால் புரிந்து கொண்டு அத்தகையவர்களிட மிருந்து ஒதுங்கி விடுங்கள்.
உங்களை நோக்கி சிலர் ஆதார மில்லாத குற்றச்சாட்டுகளை - பொய்ப் புகார்களை அள்ளி விடும்போது; உங்கள் மனம் படாதபாடுபடும்; சிலர் கொதித் தெழுவார்கள். அதுகூட உடனே அப்படி பதிலடி கொடுக்கத் தான் வேண்டுமா? என்று ஒரு முறை அல்ல பல முறை யோசியுங்கள்.
பதில் கூறத்தான் வேண்டும் என்ற நிலை - விடை கிடைக்குமேயானால், அதை சற்று நேரம் ஆறப் போட்டு செய்தால் அதன் மூலம் நம் உடல், உள நலம் பாதிக்காமல், எதிர்பார்க்கும் பலனும் அதன் மூலம் கிடைத்தே தீரும்!
புத்தர் பற்றி ஒரு நிகழ்வு சொல்லப் படுவது உண்டு.
ஒருவன் வசைமாரிப் பொழிந்தான்; புத்தர் பிட்சை கேட்க  போன போது, புத்தர் புன்னகையடன் இருந்தார்; அவ னுக்கு மேலும் மேலும் கோபம் - ஆத்திரம் எரிச்சல் புத்தர் மீது பொங்கியது! அமைதியாகச் சொன்னாராம் புத்தர்; நீங்கள்  கொடுக்கும் இந்த உணவை நான் ஏற்காமல் போனால் அது யாரிடம் இருக்கும் - உங்களிடம்தானே? அது போல உங்கள் வசவு மொழிகளை நான் ஏற்கவில்லை; அது உங்களுடன்தான் தங்கிவிடும்!
அதுபோல் உங்கள் வசவு களை, நான் ஏற்கவில்லை. என்றார் மிக அமைதியாக. வெட்கத்தால் தலை குனிந்தவன் மனம் மாறி நல்ல மனிதன் ஆனான்! எனக்கேகூட ஒரு குறை - நான் உணர்ந்து திருத்திக் கொள்ள முயலும் குறை - எனக்கு நூற்றிற்கு நூறு சரியென்று பட்டதை - ஆதாரம் உள்ள செய்திகளை  - பிறர் மறுத் தாலோ, தவறாகச் சொன்னாலோ, அடித்துச் சொல்லும் பாணியில் உரத்த குரலில் பதில் சொல்லும் பழக்கம்.
இது தவறான ஒன்று என்று உணருகிறேன். ‘Aggressive tone’ தேவையில்லை. அழுத்தம் கருத்தில் இருந்தால் போதாதா? ஏன் குரலில் இருக்க வேண்டும்?
சிலருக்கு இது மனப்போக்கு. மாற் றிக் கொள்ள வேண்டியதும் ஆகும்!
குறை இருப்பது இயல்பு; அதைக் கண்டறிந்த பின்பு, அதை மாற்றிக் கொள்ளுவது தான் சீரிய பகுத்தறி வுள்ள மனிதரின் கடமை!
என்னே மனம் என்ற மூன்று எழுத்து - எப்படி நலம் என்ற மற் றொரு மூன்று எழுத்து கொண்டு நம்மை வாழ வைக்கிறது என்பதை உணர்ந்து,
மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்து, மனிதம் படையுங்கள். மாமனிதத்திற்கு உயர முயற்சியுங்கள்!
(நிறைவு)
வியாழன், 15 அக்டோபர் 2015 விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக