பக்கங்கள்

வியாழன், 25 ஜூன், 2015

இடுக்கண் வருங்கால் நகுக - மிசாவில் நிகழ்வுகள்!

வியாழன், 25 ஜூன் 2015   -  விடுதலை


இந்திய வரலாற்றின் இருண்ட காலம்  என்று வர்ணிக்கப்படும் நெரு டிக்கடி காலம் (Emergency Period) என்பது எத்தனையோ உள் அடக்கங் களையும் வெளிப்புற ஆகா, ஊகா பாராட்டுகளையும் பெற்ற இரு புறத் தோற்றங்களைக் கொண்டது!
எண்ணற்ற பதினாயிரக்கணக்கில் இந்தியாவின் பல்வேறு கட்சி, அமைப் புகளின் தலைவர்கள் கைது - காரணம் காட்டப்படாமலேயே, எப்போது அவர்கள் வெளி வருவார்கள் என்று கைதானவர்களுக்கோ சிறை நிர் வாகிகளுக்கோ கூடத் தெரியாத - தெரிந்து கொள்ள முடியாத விசித்திர நிலை. (ஆயுள் தண்டனைக் குற்ற வாளிகளுக்குக்கூட ஒரு இரும்பு பித்தளை அட்டை பெயர், எண், விடுதலையாகும் நாள் - 20 ஆண்டு கழித்து, என்று உண்டு. மிசா என்ற நெருக்கடி கால கைதிகளுக்கு எது வுமே தெரியாது!
இப்படிப்பட்ட இருண்ட, இறுக்க மான சூழ்நிலைகள் கவ்விய நேரத்தில், நாங்கள் மிகவும் கலகலப்பாகவே சிறை வாழ்க்கையை அனுபவித்தோம் - ஆரம்பக் கொடு மைகளையும்  தாண்டி!
இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர்தம் குறளின் பொருளை பல நேரங்களில் சுவைத்து மகிழ்ந்தோம்!
1976 ஜனவரி 31ஆம் தேதி இரவு தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டு, மாலையே குடிஅரசுத் தலைவர் ஆட்சிஅமுலுக்கு வந்தது. எங்களை நள்ளிரவு 1 மணி அளவில் கைது செய்து சென்னை நகர போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டோம்!
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இவர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியி லிருந்தும் கைது செய்து அங்கு (போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு)க் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டி ருந்தனர்.
இரவெல்லாம் அங்குள்ள ஹாலில்(Press Room) உட்கார்ந்திருந்தோம்.
அந்த நள்ளிரவில் நடிகவேள் M.R.  ராதா அவர்களைக் கைது செய்து எங்களுடன் அமர வைத்தனர்.
சில நிமிடங்கள் கழித்து நடிகவேள் அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மாட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பழைய அய்.ஜி.கள், சிட்டி போலீஸ் கமிஷனர்கள் படங்கள்பற்றி கேட்டுக் கொண்டே வந்தார். நான் பெயரைப் படித்து இது சஞ்சீவிப் பிள்ளை, இது  F.V. அருள் இப்படி வரிசையாக  நான் ஒவ்வொரு படத்தையும் பற்றி விளக்கி வந்தேன். அங்கே ஒரிடத்தில் மய்யப்பகுதியில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தது.  உடனே என்னைப் பார்த்து ராதா அண்ணன் அவருக்கே உரிய குரலில், சத்தமாக - ஏம்பா, திருவள்ளுவர் எப்பப்பா நம் நாட்டிலே அய்.ஜி.யா இருந்தார்? என்று ஒரு போடு போட்டார்!
உடனே மிகுந்த அதிர்ச்சி கலந்த சோகத்துடன் உட்கார்ந்திருந்த அத் தனைப் பேரும் கலகலப்பாக சத்தம் போட்டுச் சிரித்தனர்!
நிலவிய இறுக்கச் சூழ்நிலை திடீரென மறைந்தது!
இடுக்கண் வருங்கால் நகுக இதுதானோ?
****
வாரம் ஒரு முறை சிறையில் நேர் காணல் இரண்டு மிசா கைதிகளை தனித்தனியாக உட்கார வைத்து, அவர்கள் வீட்டுக் குடும்ப உறுப்பினர்கள் - மனைவி - மக்கள் - நெருங்கிய உறவினர்கள் அமர வைத்து நலம் விசாரித்து உரையாட அனுமதிப்பர் சிறை அதிகாரிகள்.
அந்த இடத்திற்கு முன்னால் சிறை அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பார்.
ஒரு சி.அய்.டி இன்ஸ்பெக்டர்  (Intelligence Inspector) சுருக்கெழுத்தில் கைதிகளின் மனைவி மற்றும் சொந்தக் காரர்களிடம் பேசுவதைக்கூட ஒருவரி விடாமல் எழுதுவார். திரைக்குப்பின்னால் இதே போன்று மற்றொரு அதிகாரி துப்பறியும் இன்ஸ்பெக்டர் (CID) அமர்ந்து குறிப்பெடுப்பார்.
இப்படிப்பட்ட ரத, கஜ, துரகபதாதி களுடன் எங்களின் தனிப்பட்ட சுதந்தரம் காவு கொடுக்கப்பட்டு -  ஏதோ ஒப்புக்கு பார்த்தும், பேசியதுமாக நேர்காணல் முடிந்து விடும்.
நடிகவேள் ராதா அவர்களின் நேர் காணலுக்கு அவரது மனைவி திருமதி தனலட்சுமி அம்மாள் வந்து பேசிக் கொண்டு, எப்ப மாமா நீங்க வீட்டுக்கு வருவீங்க? என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.
விட்டா நான் இங்கேயா இருப்பேன்? உடனே வந்துர மாட்டேனா? நான் என்ன இங்கேயே தங்கி குடும்பம் நடத்தப் போறேனா?  என்றார்.
ஒரே சிரிப்பு அதிகாரிகளாலும் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த கட்டம் தான் மிகவும் சுவையானது!
ஏன் மாமா வெளியே சொல் றாங்க; என்னவோ நீங்க எழுதிக் கொடுத்தா உட்டுடுவாங்க வீட்டுக்கு வந்துடலாம் என்று. அப்படி எழுதிக் கொடுத்துட்டு வாங்களேன் என்றார்.
என்னான்னு எழுதித் தர்றது?  - M.R. ராதா; அந்த அம்மா இனிமே இந்த தப்பைச் செய்ய மாட் டேன்ண்ணு எழுதிக் கொடுங்க என்றார்.
ஏம்மா, நான் என்ன தப்புப் பண்ணி இங்கே கூட்டியாந்திருக் காங்க... இன்னமும் புரியலையே யாருக்கும்!
நான் வீட்டிலே படுத்து தூங்கிக் கிட்டு இருந்தேன். எழுப்பிக் கூட்டி யாந்துட்டாங்க,
இனிமே இப்படி செய்ய மாட் டேன்னு என்னை எழுதிக் கொடுக் கச் சொல்றே.
இனி நான் ராத்திரிலே தூங்க மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்றியா? என்று பட்டென்று பதில் சொன்னார்.
ஒரே சிரிப்பு - எழுதிய சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவைக் கீழே போட்டு விட்டு சிரித்தார். சிறை அதிகாரி களின் சிரிப்பு அடங்க நேரமாகியது.
பக்கத்தில் நேர் காணலில் இருந்த எங்களுக்கு அவரது  - பதிலை நையாண்டி நகைச்சுவைக் குரலில் கேட்டு சிரித்துச் சிரித்து மகிழ்ந்தோம். இப்போதும் இது நல்ல காமெடி  பீஸ் அல்லவா!
இடுக்கண் வருங்கால் நகுக! - துன்பம் போயிற்று - மகிழ்ச்சி மின்னிற்று!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக