காலத்தை வென்ற மேல்நாட்டுக்
கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள்
வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச்
சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.
அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட
திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு
ஏற்பட்டதுண்டு!
மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில்
குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத்
தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத்
தவறவில்லை!
அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும்
பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக்
காட்டிடத் தவறவில்லை!
முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி
சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!
நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன்
கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.
நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித்
தொழுகுவதை அறியாதவர்கள்.
காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற
அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில்
ஏராளம்!
ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!
இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள்
அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு
கூறினார்கள் தெரியுமா?
துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு
நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள்
கூறுவதுண்டு.
நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது
நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக
இருப்பதில்லை.
எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே
அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக
இருப்பினும்கூட,
வெப்பம் போல்
அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை)
தயாராக இருப்பதில்லை.
எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது
அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்; தள்ளுவதைத் தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் -
வாழலாம்.
அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு
கெட்ட வாய்ப்பே ஆகும்!
மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள்
பகைவரா?
ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?
உடைந்த எலும்பை படமாகக் காட்டும் எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா
கருதுகிறோம்?
அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை
சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?
எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம்.
ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை
எறிந்துவிடுங்கள்.
சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத்
தவறாதீர்கள்.
அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன் கணியுங்கள்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,19.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக