'முதுமை' வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள்; வாழ்க்கையில் நாம் முதுமையையும், இளமையைப் போலவே அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறக் கூடிய நல்ல அனுபவமும் கிடைத்ததே என்று எண்ணி ஆக்கப்பூர்வச் சிந்தனை அலையில் மிதந்து மகிழ்ந்திடப் பழகுங்கள். பாரமாகக் கருதாதீர்கள். புதிய அனுபவம் என்றே எதிர் கொள்ளுங்கள்.
'நன்றும் தீமையும் பிறர் தரவாரா; எல்லாம் நம் கையில், நம் உள்ளத்தைப் பொறுத்ததுதான்!
முதுமை என்றால் ஒன்றும் செய்யாமலே ஓர் மூலையில் முடங்கிக் கிடப்பதல்ல; மாறாக பெற்ற அனுபவங்களைக் கொண்டு மற்றவரும் நாமும் மேலும் வளர, முன்னேற, வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று எண்ணுங்கள்; எக்காரணத்தைக் கொண்டும் அதைரியப்படவோ, வீணான கவலை கொள் ளவோ தேவையில்லை - நான் சொல்வது அனைத்துப் பாலாருக்கும்தான் - வெறும் ஆண்களுக்கு மட்டுமல்ல.
முதுமையிலும் நம் பணியை காலை எழுந்தது முதல், சிறு சிறு வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்திக் கொண்டால் அது நமது உடல் நலத்திற்கும் உள்ள நலத்திற்கும் பெரும் பயன் அளிக்கும்.
எழுந்தவுடன் நம் படுக்கையை நாமே சுற்றி வைக்கலாமே; நாம் பயன்படுத்தும் அன்றாட பொருள்களை நாமே அடுக்கி வைக்கலாம்; குறிப்பிட்ட பொருள்களை, குறிப்பிட்ட இடத்தில் வைத்து, எடுக்கும் பழக்கத்தைக் கையாண்டால் அது நமக்கு எளிதாகவும் இருக்கும்; இளைய தலைமுறைகளான குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பாட வகுப்பு போலவும் அமையக்கூடும்.
காலாற நடக்கவும், உடலுக்கு ஏற்ப மென்மையான உடற்பயிற்சிகளை அவரவர் உடல்வாகு, உடல் நிலைக்கு ஏற்ப - மருத் துவர் அறிவுரையைக்கூடப் பெற்று, பயன் படுத்தினால் - இதை ஒவ்வொரு நாளும் 30 மணித்துளிகள் காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி - வெளியில் இல்லாவிட்டால் வீட்டிற்குள்ளாகவாவது செய்து பழகினால், உடல் நலத்தைப் பெரிதும் பாதுகாக்க அது துணை புரியக் கூடும். படிக்க வேண்டியவைகளைப் படிக்கலாமே!
நல்ல நண்பர்களைக் கொண்ட 'நட்பு வட்டத்தை'ப் பெருக்கிக் கொள்வதோடு, அவர்களுடன் சந்தித்து உரையாடி மகிழ்வதும், நம் இளமைக்குப் பால் வார்த்ததாகவும் அமையும்.
நம் பணியை நாமே செய்துகொள்வதில் ஒரு தனி இன்பம் உள்ளதோடு, பிறர் தயவின்றி "சுதந்திரமாக" வாழவும் அது பெரிதும் உதவும் அல்லவா?
பழைய நிகழ்வு ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது!
தஞ்சை பெரியார் பெருந் தொண்டர், கழகத் தின் இரண்டாவது பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் சிறந்த நண்பர்; கொள்கை உறவினால் நம்மிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
அவருக்கு அன்றாடம் முகச்சவரம் செய்துவிட ஒரு (தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தைத் தெருவில் அவர் வீடு) பார்பர் தோழர் ஒருவர் வந்து செய்துவிட்டு செல்வார்; அவருக்கு ஆண்டு நெல் மூட்டை சம்பளம். (தஞ்சை மிராசுதாரர்கள் அப்படி ஒரு பழக்கத்தை நீண்ட நாள் வைத்திருந்தனர்) அவர் தனியே அவ்வப்போது பணம் தருதலும் உண்டு.
நான் "எதற்கு அவரை எதிர்பார்த்து நாளும் நீங்கள் காத்திருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் Self Shave தானே, ஷேவிங் கருவி மூலம் நாளும் செய்து கொள்ளுவது போல நீங்களும் செய்து கொள்ளலாமே" என்றேன்.
அவர் தயங்கிக் கொண்டே, இல்லை ரொம்பக் காலமாக பழக்கமாகி விட்டது; "எனக்கு Self Shave செய்துகொள்ள வராது, தெரியாது" என்றார்.
வெளியூரில் ஒன்றாக இருந்தபோது ஒரு நாள் எனது அறைக்கு அவரை வரவேற்று, நானே அவருக்கு முகச்சவரம் செய்ய பாடம் எடுப்பதுபோல - அவருக்கு நானே முதலில் முகச் சவரம் செய்ய படிப்படியாக சொல்லிக் கொடுத்து - ஒரு நல்ல ரேசர் செட்டையும் வாங்கிப் பரிசளித்தேன். முதலில் சற்றுக் கடினமாக இருந்தாலும் சில நாட்களிலே அவருக்கு, அது எளிதாக வந்துவிட்டது.
அதுதான் முயற்சியின் முன்னேற்றம். எனவே எதற்கும் முணுமுணுக்கவோ, முடங்கித் தயங்கவோ கூடாது - நம் பணியாற்ற நாம் பழகிக் கொள்ளலாமே!
(நாளை தொடரும்)