பக்கங்கள்

புதன், 26 மே, 2021

நில்லாத மழை இல்லை; வெல்லாத போரில்லை!


‘‘கரோனா கொடுந்தொற்று - இரண்டாம் அலையின் வீச்சு உச்சக்கட்டத்தை 30 ஆம் தேதிக்குள் தொடும்; அதன் பிறகு படிப்படியாக குறையலாம்'' என்று ஒரு சாராரும், ‘‘மூன்றாம் அலை வீச்சுக்கும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்'' என்று பரவலாகப் பலர் கூறுவதும், ‘‘நீரிழிவு நோயாளிகள் கரோனா கொடுந் தொற்றுக்குள்ளான பிறகு, சர்க் கரை அளவு கட்டுக்குள் வரா விட்டால், கண்களில் ‘கரும்பூஞ்சை'  (Mucormycosis) வந்து, உயிர்க்கொல்லியாகும்'' என்றும் வரும் செய்திகளை மிகவும் பயத்தையும், பதற்றத்தையும் பல ருக்கும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவரும் இல்லத் தரசிகள், வீட்டில் முடங்கியுள்ளவர்கள் மிகுந்த கவலை - பயத்தால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிடும் நிலையும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகக் காணப்படுகிறது!

இதுபற்றி அளவுக்கு மீறி பயப்படாமல், அறிவுப்பூர்வமாக, துணிவுடன் எதிர்கொள்ள முனையவேண்டுமே தவிர, அளவுக்கு மீறிய பயத்தால் - பதற்றத்தால் - நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துக் கொள்ள முயலவேண்டாம்.

இயற்கை நியதி - இயற்கை சட்டம் என்கிற தத்துவப்படி, எந்தத் தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஆக்கப்பூர்வ சிந்தனையும், நம்முடைய துணிவும் பெரிதும் துணை நிற்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அவை பெருக்கும் - உளவியல் ரீதியாக.

நாம் ஒழுங்காக சில நியதிகளைத் தவறாமல் கடைப்பிடித்து, ஒழுகினால், அச்சத்தை விரட்ட லாம்; நிம்மதியுடன் நித்தம் நித்தம் வாழலாம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. இன்பமும், துன்பமும் எல்லாம் நம் கையில்தான் - நம் அணுகுமுறையிலும், பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதிலும் தான் உள்ளது!

சாவு எண்ணிக்கையை கண்டு பயப்படு வதைவிட, குணமாகி வாழும் பலரது எண் ணிக்கை கூடுதல்; அதைக் கண்டு ஏன் நாம் துணிவுடன் வாழக் கூடாது?

முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியைப் பயன்படுத்துதல், அடிக்கடி சோப்புப் போட்டுக் கைகழுவுதல், போதிய உடற்பயிற்சி - தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்காது ஊசிகளைச் செலுத்திக் கொள்ளுதல், தனி நபர் இடைவெளி காத்தல், அவசியமற்று எங்கும் செல்லாமல் தனித்திருப்பது, அடிக்கடி சோதித்துக் கொள் ளுதல், ஊட்டச் சத்து உணவுகளை எடுத்தல், நீரிழிவு போன்ற நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதை அடிக்கடி கண்காணித்து வருதல் - ஆக்கப்பூர்வ சிந்தனை - மனதிற்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு இசையின்பம் பெறுதல், படிக்க விரும்பும் நூல்களைப் படித்தல், வீட்டில் விளையாட்டுகளில் ஈடுபடுதல், நிகழ்த்தப்படும் காணொலிகளில் கலந்துகொண்டு மன உளைச்சலுக்கு விடைகொடுத்தல், வீட்டில் இருந்தாலும், தூங்கும் நேரம் தவிர, மற்றபடி எப்போதும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதுமான பலவற்றில் நம்மை நாம் ஈடு படுத்திக் கொண்டால், விடி யலைக் காணலாம்! உடலுக்கு ஓய்வு - மனதிற்கு வேலை கொடுங்கள்.

நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவே கூடாது; அலட்சியமாக இருக்கவும் கூடாது; அஞ்சுவதும், கெஞ்சுவதும், மிஞ்சுவதும் எல்லா முமே கூடாது.

‘‘நில்லாத மழையில்லை - 

வெல்லாத போரில்லை''

என்பதை மறவாதீர்!

கட்டுப்பாட்டுடன் வாழத் தெரிந்தவர்களுக்கு ‘கவலை' என்பது, தானே விடைபெற்றுக் கொண்டு ஓடக் கூடியதுதானே!

மேலும், உளவியல் ரீதியாக எண்ணிப் பாருங்கள். கவலைப் பட்டால்  பிரச்சினைகள் தீருமா? நோய்தான் வரும் - உடல்நிலை தான் வெகுவாகக் கெட்டுப் போகக் கூடுமே தவிர - உருப்படியான பலன் ஏதும் விளையாது!

எந்த நோய்க்கும் சிகிச்சை உண்டு - மறவாதீர்!

எந்த சிகிச்சையும் வெற்றியளிக்க நாளும் ஆய்வு செய்து மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதில் 24 மணிநேரமும் ஆட்சியாளர்கள், மக்கள் நல களப்பணியாளர்களும் உழைக்கின் றனர். அவர்தம் ஈகத்தைக் கண்டு தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!

அவர்கள் இருக்கப் பயம் ஏன்?

அறிவியலால் முடியாதது எதுவுமில்லை. ஓராண்டுக்கு முன் தடுப்பூசியில்லை; இப்போது நம் கைகளில் கிடைத்துவிட்டதல்லவா? அது போலத்தான் எந்தக் கொடுந்தொற்றும் முடியவே செய்யும்.

முடிவற்ற நிலை எதற்குமில்லை - இது இயல்பான அறிவியல் - அறவியல் நிலை - தீர்வுகள் எட்டாக் கனிகள் அல்ல!

தெளிவுடன் இருங்கள் - துணிவுடன் செயல்படுங்கள்!

செவ்வாய், 25 மே, 2021

நம்மால் முடியும்; இன்றேல் முடிவே! - மறவாதீர்!

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி,



கரோனா தொற்றிலிருந்து நம்மை தடுத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் (பலரிடமிருந்து திரட்டப்பட்டவை) :

1. வீடுகளில் உள்ள ஜன்னல்களை நன்கு திறந்து வைத்து வெளிச்சத்தையும், காற்றோட் டத்தையும் ஏற்படுத்துங்கள்.

கதவுகள் ஜன்னல்களைத் திறந்து உள்ளே காற்று தாராளமாக வீசினால், எப்படி பலவகை நாற்றம், வாசனை போக, நாம் திறந்து காற்று வீச விரும்பி ஏற்பாடுகளைச் செய்கிறோமோ அதுபோன்றே, கரோனா மூலம் பரவும் (Droplets and Aerosols) மூக்கிலிருந்து துகள் - துளிகள் இந்த 'வைரசை'ப் பரப்பும்  சக்தி ஒரு தொற்று உள்ளவரிடமிருந்து அது சுமார் 2 மீட்டரிலிருந்து 10 மீட்டர் அளவுக்கு பயணிக்கும் சக்தி உள்ளதாம்! எனவே காற்றோட்டம் வெளிச்சம் முக்கியம். அடிக்கடி திறந்து வைத்து, பிறகு மூடும் பழக்கத்தினை தொடருவது நல்லது.

வேலை செய்யும் இடங்களில் கதவுகள், ஜன்னல்களும் திறந்து வைத்தல் அவசியம்.

பேருந்துகளில்கூட பக்கத்து ஜன்னல் போன்ற கதவுகள் திறந்திருப்பது அவசியம்.

2(a). தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.

2(b). பணிபுரிவோர் பலரும் N95 முகக் கவசம் தந்து அணியும்படி ஏற்பாடு செய்தல் அவசியம்.

3. கரோனா தாக்குதல் மே 29, 31களில் தமிழ்நாட்டில் உச்சக் கட்டத்திற்குச் செல்ல வாய்ப் புகள் உண்டு என்கிறார் மக்கள் நல் வாழ்வுத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.

கரோனா சங்கிலியை உடைக்க மக்களின் ஒத்துழைப்பே முக்கியம்; இன்றியமையாதவை. 

4. கரோனா பணியில் மும்முரமாக ஈடுபட்டு, மெழுகுவத்திகளாக எரிந்து, மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்க தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்த தியாக தீபங்கள் 329 மருத்துவர்கள் - என்கிறார் இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர்.

மருத்துவர்களையும், செவிலியர்களையும் அறிவும், நிதானமும் இழந்து, சிலர் அவர்களைத் தாக்குவதோ அல்லது மிருகத்தனமாக நடந்து கொள்ளுவதோ விரும்பத்தக்கதா? எண்ணிப் பாருங்கள்! இழப்பிலும் நிலைகுலையாததுதானே உறுதியான மனிதம் - அதை மறக்கலாமா?

5. இந்தக் கரோனா கொடுந் தொற்று எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது பலருக்கும் புரியாமலிருப்பதை துல்லியமாக, தெளிவாக விளக்குகிறார் விஞ்ஞானி ராபர்ட் ஏ.ஜெ. சிங்கர் என்பவர். 

கரோனா தொற்று உள்ள ஒரு நபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அவர் 30 நாளில் 406 பேர்களுக்கு கரோனாவைப் பரப்புகிற நிலை கண்டறியப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

இந்தசமூக தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்த முடியும் - எப்படி? இந்த நடைமுறை 75% கடைப் பிடிக்கப்பட்டால்  அது 30 நாளில் 2.5% மட்டுமே பரவும் அளவுக்கு குறைக்க முடியும் என்கிறார்.

25 நகரங்களில் உள்ள குடிமக்களில் 50 விழுக் காட்டினர்  முகக் கவசம் அணிவதில்லை!

அது மட்டுமா?

முகக்கவசம் அணிவோரில்கூட 64 விழுக் காட்டினர் வாயை மூடுகிறார்கள் மூக்கை மூடுவதில்லை.

20 விழுக்காட்டினர் 'தாவாக்கட்டை' வரை முகக்கவசம் அணிகிறார்கள்! என்ன கொடுமை!

2 விழுக்காட்டினர் கழுத்துப் பட்டை மாதிரி அணிந்துள்ளனர்!

அகர்வால் என்ற விஞ்ஞானி இதைக் கூறுகிறார்! ஒரு நபர்தானே என்று அலட்சியமாய் இராதீர்கள். அவர் பல நூற்றுக்கணக்கானவர் களுக்கு பரப்பும் அபாயம் உண்டு - மறவாதீர்!

இப்போது நாட்டின் சில மாநிலங்களில் குறைந்து வருகிறது.

கண்டிப்பான இந்த தடுப்பூசி, முகக் கவசம், தூய்மை, தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தால் கரோனாவை விரட்டலாம்.

இல்லையேல் முன்பு கரோனா பயம், இப்போது கறுப்பு கண் பூஞ்சை நோய்ப் பயமும் சேர்ந்து வந்து நம்மை அச்சுறுத்துகிறது!

பலருக்கு நோயால் ஏற்படும் சாவைவிட, பயத்தால் ஏற்படும் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவினால்)   மரணம் அதிலே - அநியாயம்கூட நடைபெறலாம்.

எனவே நம்மையும் காத்து நாட்டு மக்களையும் சமூகத்தையும் குடும்பத்தவரையும் காக்க கட்டுப்பாடு காத்து ஒத்துழைப்பு நல்கி -

புது வாழ்வு பெறத் தயாராவோம்

எளிய ஒரே வழி - ஒத்துழைப்பு - முகக்கவசம் மறவாதீர் - அது நம் கையில் - மனதில்!

திங்கள், 17 மே, 2021

அதிகாரவர்க்கத்தில் இப்படியும் ஓர் ஆளுமையா? அதிசயம்! அதிசயம்!!


புதிய அரசாக தி.மு.க. அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் பொறுப்பேற்றவுடன், சிறந்த ஆளுமையும், அனுபவமும், மனிதநேயமும், பண்பும் கொண்ட அதிகாரிகளை - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்பான பதவிகளில் அமர்த்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளரும், செயலாக்கமும் நிறைந்தவருமான மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியான - தமிழ்கூறும் நல்லுலகம்பற்றி சிந்தித்துச் செயலாற்றும் இயல்பாளருமான திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்தது ஒரு நல்ல திருப்பமாகும்!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்' (குறள் 517)

என்ற குறளுக்கேற்ப முக்கிய நியமனங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன!

சேலம் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்க பல்வேறு முயற்சிகள் எடுத்து, தொடர்ந்து அடுத்து முயன்று இப்பெரு நிலைக்கு வந்துள்ளார்!

சமூக சிந்தனையும், அறத்தின் மாண்பும் இன்றைய அரசு அதிகாரிகளுக்கு மிகவும் தேவை - அதுவும் இந்த கரோனா கொடுந்தொற்று காலத்தில்!

அவர் அப்பொறுப்பினை ஏற்று முறைப்படி பணியாற்றிவரும் இக்காலகட்டத்தில், அவர் விடுத்துள்ள ஓர் வேண்டுகோள் அறிக்கை - படிக்கும் எவரையும் மெய்சிலிர்க்க வைப்பது உறுதி.

‘‘நான் தலைமைச் செயலாளராக இருக்கும்வரை, எந்த அரசு நூலகத்திற்கும் எனது நூல்களை வாங்கவேண்டாம். அதன்மூலம் என்னை  மகிழ்விப்பதாக எந்த அதிகாரியும் மற்ற எவரும் கருதிடக் கூடாது'' என்பதுதான் அந்த வேண்டுகோள்.

சுயநலமும், சொந்த லாபமும் இதில் எவ்வளவு மிஞ்சும் என்று கணக்குப் போட்டுப் பார்த்து, எதிலும் காய் நகர்த்திடும் இக்காலகட்டத்தில், இப்படியும் நேர்மையும், வாய்மையும் கரைபுரண்டோடும் அதிகாரியும் இருக்கிறாரே - இதை எப்படிப் பாராட்டுவது என்பதே தெரியவில்லை!

அதிகாரவர்க்கம் என்றாலே தனி வர்க்கம் - தனியானதோர் உயர்ந்த மனப்பான்மையாளர் என்று கருதி, தங்களது சுயநலநோக்கத்தோடு மற்றவர்களை ‘காக்கா' பிடித்தே பழக்கப்படும் ஒரு பரவலான சூழ்நிலை என்ற பாலைவனத்தில் இப்படிப்பட்ட ‘ஓயாசிஸ்' - பூஞ்சோலை நீர்த் தடாகமும் இருக்கின்றது என்பதைக் காணும்போது, ‘அறம் என்றும் வெல்லும்' என்பது உறுதியாகிறது!

இவர் முந்தைய அரசுகளில் முக்கிய பதவிகளிலிருந்து, ‘முக்கியமற்ற' பதவிகளில் (மறைமுக தண்டனைபோல்) மாற்றப்பட்ட காலங்களிலும் தன் சுயமரியாதையை இழக்காமல், கெஞ்சுவதில்லை எவரிடத்திலும் - எந்தப் பணியிலிருந்தாலும் - அந்தப் பணியைச் செம்மையாகச் செய்து மகிழ்வுடன் வாழலாம். அம்மாற்றத்தின்மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதுப்புது துறையில் அறிவைப் பெருக்கிக் கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக அது அமைய வழிவகை கிடைத்து - அதுவும் நன்மைக்கே என்ற மன நிறைவு கொண்டு - ஆக்கச் சிந்தனையும் ‘செழித்தோங்கி' சிறந்து வருபவர்.

‘‘சுயநலமில்லாதவர் - தன்முனைப்பற்றவர் - எவருக்கும் எப்போதும் பயப்படவேண்டியதில்லை. சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்பவராகவே வாழ முடியும்'' என்று கூறுவார் தந்தை பெரியார் அவர்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய ஆட்சியில் புதிதாகப் பொறுப்பேற்ற, சமூக உணர்வும், அறிவியல் மனப்பாங்கும் பெற்ற பல அதிகாரிகள் வந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களில் முதல் வரிசையில் உள்ள இவர், தனது சுயநலம் துறந்த அறிவிப்பால் மிக உயர்ந்து காணப்படுகிறார்.

தமிழக ஆட்சித் துறை நிறைய ‘இறையன்புகளை' காணவேண்டும் என்பதே நம் விழைவும், பெரு விருப்பமும்!

இது அவர்களுக்காக அல்ல -

சமூக நலம் ஓங்கிப் பரவலாவதற்கு இத்தகைய சுயநலம் துறந்த அறவேரான அதிகாரிகளால் ஆட்சி மகுடம் நிச்சயம் ஒளிவீசும் என்பது உறுதி!

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி ஓங்கி  நிற்கிறார் அவர்!

சேவையின் மறுபெயரே செவிலியர்கள்!


இன்று (12.5.2021) உலக செவிலியர்கள் நாள்.

நோய்களுக்குப் பரிகாரம் தேடிட மருத் துவர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றும், சிற்சில சமயங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான சிகிச்சை முறைகளிலும் மருத்துவர்களைவிட அதிகமான அளவுக்கு தியாக உணர்வுடனும், தன்னை இழக்கவும் எப்போதும் தயாராக இருக்கும் போர்க் களத்துப் போர் வீரர்களைப் போன்று, கொடுந்தொற்றிலும், தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து, நோயுற்றவர்களைக் காப்பாற்றி புது வாழ்வு - மறுவாழ்வு அளிப்பவர்களாகவே செவிலியர்கள் ஒவ்வொருவரும் பாலின வேற்றுமையின்றி கடமையாற்றுபவர்கள் ஆவார்கள்!

அவர்களது தொண்டறத்திற்கு எளிதில் ஒப்புவமையே சொல்ல முடியாது.

அதிலும் குறிப்பாக கரோனா கொடுந்தொற்று அதன் இரண்டாம் அலையின் வீச்சை அதிக மாகவே காட்டி, மக்களை அச்சுறுத்தி, அரசு களுக்கு அறைகூவலாக இருக்கும் இத் தருணத் தில், மருத்துவ நல்வாழ்வுப் பாதுகாப்பு மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள், வீராங்கனை களைப் போல, மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் முதல் துப்புரவு தொண்டறப் பணித் தொழிலாளத் தோழர்கள் கரோனா வந்தவர் களுக்கு மட்டுமல்ல, வராமல் தடுத்துக்கொள்ள தடுப்பூசி போடும் தகைசான்ற மருத்துவத் தொண்டினை செவிலியர்களே, டாக்டர்கள் முன் னிலையில் சிறப்பாக செய்து வரலாறு படைத்து வருவது, அவர்களது முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துவதாகும்!

புதிய தி.மு.க. ஆட்சியின் தலைவரான நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.5.2021) மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர மருத்துவ நலப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் என்று அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கது. (செய்தி முதல் பக்கம் காண்க).

(இன்னும்கூட அதிகமாகவே தரலாம்; ஆனால், மாநில அரசின் நிதிப் பற்றாக்குறை என்ற கொடுவாள் அதன் தலைமீது தொங்கும் நிலைதானே இன்றுள்ள யதார்த்தம். ‘‘அவர்கள் தாயுள்ளத்துடன் சேவை செய்கின்றனர்'' என்ற முதலமைச்சரின் வைர வரி கூற்றே, பெரியதொரு ஊக்க மாத்திரையாகும்!).

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற ‘Lady of the Lamp'என்று'  வரலாற்றில் இடம்பெற்ற செவிலியர் தொண்டின் கலங்கரை வெளிச்சத்தின் பிறந்த நாள் அடிப்படையிலேயே இன்றைய நாள் அமைந்துள்ளது!

நம் நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கையில் மருத்துவர்கள் ஆற்றும் பெரும் பங்கை, அமெரிக்கா போன்ற  வளர்ந்த நாடுகளில் செவிலியர்களே செய்வதை நேரில் பார்த்து வியந்த அனுபவம் எனக்கு உண்டு.

1991 இல் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ‘மில்வாக்கி' (விஸ்கான்சின் மாநிலத்தின் பெருநகரங்களில் ஒன்று) நகரில் உள்ள செயிண்ட் மேரீஸ் மருத்துவமனையில் எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படும் பிரபல டாக்டர் டட்லிஜான்சன் - (மற்றொருவர் டெக்சாஸில் வாழ்ந்த டாக்டர் கூலி) இதய மாற்று (Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்தார். 5 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, அறுவை சிகிச்சை மருத்துவரை நேரில் பார்த்தது மூன்று முறைதான்! ஒன்று, அறுவை சிகிச்சை யன்று; மற்றொன்று வழியனுப்பியபோது. (இடையில் இந்தியாவிலிருந்து வந்தவன் என்பதால், அவர் கனிவுடன் வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்து அறிவுரை வழங்கிய வாய்ப்பு).

மற்றபடி எல்லா பணிகளையும் மேற்பார்வை, அறிவுரை, வழி நடத்தியமை எல்லாம் இருபால் செவிலியர்களே!

என்னே அன்பு! கவனம், பராமரிப்பு, ஊக்கமூட்டல், ‘தாயினும் சாலப் பரிந்து' கவனித்த முறை - இறுதியில் உடலில் தைத்திருந்த தைய லைப் பிரித்து இழுக்கும்போதுகூட, உரையாடி, நம்மை திசை திருப்பியே வலியை மறக்கச் செய்த அவர்களது பணி செய்த முறை என்னால் மறக்கவே முடியாத நிலை.  (அவ்வப்போது டாக்டர்கள், செவிலியர்களிடம் தொலைபேசி மூலம் நோயாளிகள்பற்றி கேட்டறிந்து, சிகிச் சைக்குத் தேவைப்படும் அறிவுரையை செவி லியரிடமே வழங்குவர்).

(பெரியார் பன்னாட்டமைப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், அவரது காரில் என்னை அமர வைத்து, ‘அஷ்டாவ தானம்'போல ஒரே நேரத்தில் வியக்கத்தக்கப் பணிகளை செய்வதை நேரில் கண்டு நான் வியந்து அதிர்ந்தேன்.

காரில் பயணம் செய்யும்பொழுது, செவி லியரை தொலைப்பேசியில் அழைப்பார். நோயாளிகள்பற்றிய அப்போதைய  நிலை - அதற்குத் தரவேண்டிய மருந்து, நம்மிடம் இடையே உரையாடல், காரில் பெரியாரின் உரையை காதால் கேட்பது (ஆடியோ) - கார் டிரைவிங், கவனத்துடன் ஓட்டுதல் - தூரத்தையும், நேரத்தையும் துரத்திவிட்ட அதிசயம் இவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். கடமையில் கண்ணாக இருப்பார். செவிலியர்களுடன் மிகவும் அன்புறவுடன் வேலை வாங்குவார் - நேரில் கண்டுள்ளேன்).

தமிழ்நாட்டில் தரத்துடன் புதிய நர்சிங் கல்லூரிகளைத் தொடங்கி நடத்திட அடிக்கட்டு மானத்தை மேலும் விரிவாக்கி, கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டியது - செவிலியர்கள் எண்ணிக்கையைப் பெருக்கும்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் இவ்வகைத் தொண்டு அளப்பரியது; எடுத்துக் காட்டானது ஆகும். கிராமப்புற பெண்களை அவர்கள் நல்ல முறையில் ஆயத்தப்படுத்தி, கல்வி அறிவை உண்டாக்கி வருகின்றனர்.

செவிலியர்களுக்கு நம் இதயம் கனிந்த வாழ்த்துகள்!