"அந்தி மழை" - அருமையான தமிழ் தாளிகைகளில் ஒன்று. பல்வேறு பொருள்கள் அடங்கிய ஒரு சிறிய இலக்கிய அங்காடி; அதன் நிறுவன ஆசிரியர்களில் ஒருவரான சீரிய எழுத்தாளர் - கருத்தாளர் நண்பர் பி. இளங்கோவன் அவர்களும், அருமைத் தோழர், எழுத்துலக எழுச்சி வீரர் ப. திருமாவேலன் அவர்களும் என்னை 20.11.2018 மாலை பெரியார் திடலில் சந்தித்தனர் - அப்போது அந்தி மழையும் பெய்து கொண்டிருந்தது!
நண்பர் பல அருமையான நூல்களைத் தந்தார்.
இவரும், மற்றொரு நிறுவன ஆசிரியருமான நண்பர் அசோகனும் இணைந்தே இந்த 'பத்திய' முயற்சிப் பத்திரிக்கைகளை தொடர்ந்து நடத்த பல பத்தியங்களைக் கடைப்பிடித்துக் கரை சேர வேண்டுமல்லவா? இருவருமே - கால்நடைத் துறை மருத்துவர்கள் - அந்தத் தொழிலில் வருவாய் கண்ணோட்டம் பார்க்காது - கால்நடைகளைவிடக் கேவலமாக மதிக்கப்படும் தமிழ்நாட்டு மக்களின் புத்தாக்கச் சிந்தனையைத் தூண்ட தங்கள் எழுதுகோல்களைப் பயன்படுத்தும் வகையில் லாபம் சாரா எழுத்துப் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபட்டு வெற்றிகரமாக தங்களின் ஏட்டினை நடத்தி வருகிறார்கள்!
'அந்தி மழை' விடாமல் பெய்கிறது - காய்ந்த நிலங்களை கனத்த ஈரத்திற்குள்ளாக்க!
அவர் தந்த ஒரு நூல் 'கரன்ஸி காலனி' 'சிக்ஸ்த்சென்ஸ்' பதிப்பக வெளியீடு.
படித்தேன் - சுவைத்தேன். அதன் முன்னுரையே, தொழில் தொடங்கவிருக்கும் - விழையும் - இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுழைவு வாயிலாக உள்ளதால் அதனை அப்படியே தருகிறேன். படியுங்கள்.
"அப்போது நான் குஜராத் மாநிலத்திலுள்ள பரோடாவில் வசித்து வந்தேன். உத்திரபிரதேசம், பீகார் பகுதிகளில் வேலை நிமித்தமாக பயணம் செய்துவிட்டு திரும்பி வந்திருந்த நாள். எங்கள் தெருவில் வசிக்கும் அந்தப் பெண்மணி வீட்டிற்கு அழைப்பிதழோடு வந்தார். தனது மகனின் புதிய கடையின் திறப்புவிழா விற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைத்தார். பத்தாம் வகுப்பு பெயிலான பத்தொன்பது வயது பையனின் சிறு கடை நண்பர்கள் சுற்றம் சூழ திறக்கப்பட்டது. அன்று எனக்கு மூன்று சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.
படிப்பை நிறுத்திவிட்டு தொழில் செய்ய விரும்பு வதாக நான் கூறிய போது, "படிப்பறிவில்லாமல் தொழில் செய்தால் பெரிய அளவிற்குப் போக முடியாது. படித்து பட்டம் வாங்கி விட்டு தொழில் செய்." என்றது குடும்பம். அப்போது எனக்கு வயது 16.
கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்ற பின் தொழில் தொடங்க விரும்பிய போது ,"இந்த படிப்பிற்கு அழகான வேலை கிடைக்கும் ,ராஜா மாதிரி வாழலாம். அனுபவம் இல்லாமல் ஏன் தொழில் தொடங்கி கஷ்டப்படனும்" என்று தடை போட்டது குடும்பம். தொழில் நுட்பப் பட்டம் பெற்று பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற பின் தொழில் தொடங்க முற்பட்ட போது ,"கிரக நிலை சரியில்லை" என்றது குடும்பம். என் குடும்பத்தைப் போலவே, பெரும்பாலான இந்திய குடும் பங்கள் மிகுதியான அன்பின் காரணமாக, தொழில் தொடங்க தடை விதிக்கின்றன. நஷ்ட மடைந்து விட்டால், தோற்றுப் போய் தெருவிற்கு வந்து விட்டால்.... என்று நிறைய பயங்கள்.
குஜராத், ராஜஸ்தான் , மகாராஷ்டிராவில் வாழும் சில சமூகங்களில் மட்டுமே தொழில் தொடங்க குடும்பமே அடித்தளமாக அமைகிறது. இந்தியாவில் பெரு நிறுவனங்களில் பெரும்பாலானவை இவர் களுக்குச் சொந்தமானவைதான்.
தொழில் நடத்துவது மலையேறுவது போல்தான். "எல்லா மலைகளின் மீதும் ஒரு பாதை இருக்கிறது. ஆனால் அது சமவெளியில் இருந்து பார்த்தால் தெரி யாது" என்கிற அமெரிக்க கவிஞர் தியோடர் ரோத்கி (Theodore Rothke)யின் வார்த்தைகளை அடிப்படை யாகக் கொண்டு கரன்ஸி காலனியை எழுதியுள்ளேன்.
தொழிலுலகை ஆளும் குடும்பங்கள் தங்களது இளைய தலைமுறைக்கு கிசுகிசுப்பான குரலில் தொழில் என்ற மலைப்பாதையின் சூட்சமங்கள் பற்றி என்ன போதிக்கிறதோ, அதை கதைகளாலும், சம்பவங்களாலும் 'கரன்ஸி காலனி' உரக்க பேசுகிறது.
ஏற்கனவே தொழில் நடத்துபவர்கள் 'கரன்ஸி காலனியை' படித்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். எனக்காக திரட்டப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு தான் 'கரன்ஸி காலனி'. இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் என் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற்ற பின் தான் புத்தக வடிவில் வெளியிட முனைந்துள்ளேன். இந்த புத்தகத்தை வெளியிடும் 'சிக்ஸ்த்சென்ஸ்' புகழேந்தி அவர்களுக்கும், அவரது குழுவிற்கும் எனது அன்பும் நன்றியும்.
கரன்ஸி காலனியின் பக்கங்கள் ஒவ்வொன்றும் தொழில் முனைவோரின் மனங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும்.
என்றும் உங்கள்... அந்திமழை ந.இளங்கோவன் பெங்களூரு, 30/9/2016."
தஞ்சை பெரியார் மணியம்மை தொழில் நுட்ப (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் அது கல்லூரியாக இயங்கியதிலிருந்து - பட்டதாரியாகி வெளியேறும் காலத்தில் ஒரு முழக்கம் என்ன தெரியுமா?
"நாங்கள் வேலை கேட்க மாட்டோம்
நாங்கள் மற்றவர்கட்கு வேலை கொடுப்போம்"
இதை நமது மேனாள் மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் அதை வெகுவாகப் பாராட்டி மற்றவர்களுக்கும் செல்லுமிடங்களெல்லாம் கூறி மகிழ்ந்தார்!
இளைஞர்கள் தன்மானம், தன்னம்பிக்கையுடன், துணிந்தால் தன்னறிவே கதவைத் தட்டும் புதுவாழ்வு! புரிகிறதா?
- விடுதலை நாளேடு, 23.11.18