பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

மவுனம் அமைதி (Silence) யின் விழுமிய தேவையும் பயனும்!




புத்தம் என்ற அறிவு மார்க்கம்தான் முதன் முதலில் அறிவின் முக்கியம் பற்றியும், மூச்சுப் பயிற்சி பற்றியும் அமைதியான சிந்தனைமூலம் பலவற்றை ஆய்ந்து முடிவு செய்து, உண்மைகளை நாம் புலப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியது; அதனை உணர வைத்தவர் புத்தர் - சித்தார்த்தன் - புத்தர் ஆனது அதனால் தான். (இதற்கு எவ்வளவோ கட்டுக்கதைகள் பிறகு இணைக்கப் பட்டன)
திபேத்தியர்கள் பவுத்தத்தினை ஒரு வகையான மதமாக்கிப் பின்பற்றி வருகின்றவர்கள் என்றாலும், வாழும் முறையில் அவர்களைப் புரிந்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர்கள் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்கள்.
அதில் ஒரு அருமையான நூல் கிறிஸ்டோபர் ஹேன்சார்டு  Christopher Hansard
என்பவர் எழுதிய “The tibetan art of living”  என்பதாகும்.
அதைப் படித்தேன்.  உடல் நலம் - உள்ள நலம் - புத்திக் கூர்மையான வாழ்வியல் பற்றி அதில் பல செய்திகள் மிக எளிய நடையில் விளக்கியுள்ளார்.
Wise Body -   புத்திசாலித்தனமான உடல்
Wise Mind - புத்திசாலித்தனமான மனம்
Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை
என்ற தலைப்புகளில் பல செய்திகள்!
அதில் ஒன்று - மவுனம் - அமைதி - Silence என்பதன் அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதற்கான அரிய விளக்கம் நமக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்துள்ளது!
அமைதி (Silence) என்பது ஏதோ ஒரு ஒலியின் தொடர் விளைவு அல்ல. (Silence is a Process not of Sound) அதைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும் - பாடுபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனிதக் கூறுகளின் அறிவுத் திறனில் இது முக்கியமான அம்சமாகும்! நமது அறிந்து செயல்படும் முயற்சியைக் கூர்மைப்படுத் துவது அமைதி என்ற கருவி! புரிந்து கொள்வோம். அமைதியாய் இருந்து கேட்டுச் சிந்திப்பவர்கள் நொய் யரிசிகளாக கொதி பொறுக்காதவர்களும் பக்குவமடைந்த பகுத்தறிவாளர்களாக மாறுவர்!
நமது மனத்தில் படிந்த மாசு, மருக்களை அகற்றும் தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியை அமைதியாய் இருந்த பின் அவ்வமைதி அதைச் செய்கிறது!
எதிலும் குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கிறது. நம்முடைய நட்பு என்பதை பெற்றுள்ளதா? அல்லது உள்ளம் இருக்கும் இடத்தில் பள்ளமும் கள்ளமும் இருக்கின் றனவா என்பதை அந்த அமைதி நமக்கு ஆசானாகி போதிக்கும் - பிறகு சாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.
எவ்வளவுக்கெவ்வளவு நாம் இந்த அமைதியோடு நம் காலத்தைச் செல வழித்துப் பயணிக்கிறோமோ அவ்வளவும் பயன்தரும்; நமது அறிவுத் திறன், உடற் கூறுகளை மேலும் விரும்பத்தக்க மாற்றத் திற்கு வழிவகை செய்யும்.
நாம் வளருவதற்கு இத்தகைய அமைதியாக இருந்து அதை அனுபவித்துப் பயன் பெறக் கற்றுக் கொள்ளுவதற்கு இந்த அமைதி பற்றிய அறிவு நுணுக்கம் மிக மிக அவசியமாகும்.
எப்படி ஒரு புயலின் சீற்றத்தின் அளவும், பரிமாணமும் அதனுள் அடங்கியுள்ள அமைதியின் வாயிலாக வெளிப்படக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! எவ்வளவு சிறப்பாக மவுனத்தின் (அமைதியின்) தேவைபற்றி நாம் அறிந்து கொண்டு நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமக்குப் பொறுமையாக கேட்கும் பண்பும், பழக்கமும் பெருகும். அது நமது பேச் சையும், சிந்தனையையும் செம்மைப் படுத்தப் பெரிதும் உதவி செய்யும்!
வாழ்க்கையில் நாம் பல்வேறு செய்தி களை அனுபவித்து அறிவதைப்போல, அமைதிப் பழக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் மிகவும் இன்றியமையாத தாகும்.
நீங்கள் அமைதியாக இருப்பதை விட அமைதி உங்களிடம் ஆட்சி செய்ய வேண்டும்.
அமைதியின் தேவையைப் புரிந்து கொண்டு அனுபவித்துச் சுவைக்கப் பழகிக்கொள்ளல் - பல்வேறு வகை களில் நமக்குப் பயன் தருவதாக அமையக் கூடும்.
எப்போது இடைவிடாத ஆரவாரத் திலேயே கழிந்து விடும் நமது வாழ்க் கைக்கு இந்த அமைதியின் பாடம் மிகவும் தேவையே! அன்றாட வாழ்க்கை அமைதி குலைந்த ஆரவார வாழ்க்கை யாகத் தானே நம்மால் பலருக்கும் அமைந்து விடுகிறது?
இந்த அமைதியைக் கடைப் பிடித் தல் மனதை ஒரு நிலையில், எதிர்மறைச் சிந்தனைகளிலிருந்து திருப்புவதற்குப் பெரிதும் வழிகாட்டும் நெறியாக - வாழ் வின் கலங்கரை விளக்கமாக அமையக் கூடும்!
மவுனம் மகத்தான சக்தி வாய்ந்த மொழியாகும். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்த வண்ணம் 15 மணித்துளிகள், இரவில் படுக்கைக்குப் போகுமுன் 15 மணித்துளி இத்தகைய அமைதியைப் பழகுங்கள் - பயன் உணரக் கூடும்.

-விடுதலை,26.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக