பக்கங்கள்

ஞாயிறு, 12 ஜூலை, 2015

சர்க்கரை நோய்பற்றிய சில புரட்டுகளும் உண்மைகளும்!

      

உலகத்தின் சர்க்கரை நோய்க்கான தலைநகரமாக இந்திய நாடு மாறி முதல் இடம் வகிக்கிறது என்று மருத்துவ உலகம் கூறுவது, நமக்குப் பெருமை அளிப்பதாகாது.
முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் சர்க்கரை நோய் (Diabetes)
இப்போது இளம் வயதுள்ள இளைஞர்கள், வாலிபப் பருவத்தினருக்குகூட வந்து வதைக் கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய உண்மையாகும்!
இளைஞர்கள் வேக (துரித) உணவு (Fast Foods)   என்ற பெயரால் கண்டபடி கொழுப்பும், அளவுக்கு மீறிய மாவுச் சத்தும் இன்னும் சுவைக் காக எத்தனையோ கேடான ரசாயனக் கலவைகளும் கலந்த உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி கண்ட படி, கண்ட நேரத்தில் உண்ணுதல் அதன் காரணமாக ஊளைச் சதையைத் தூக்கிச் சுமப்பதோடு, காசு கொடுத்து சர்க்கரை வியாதியை இலை போட்டு அழைத்து வந்து உடலுக்குள் நுழைக்கிறார்கள்!
இப்போதுள்ள மருத்துவ முறைப் படி, இந்த நோய், ஒரு முறை நம் உடலுக்குள் படையெடுத்து ஆக்கிர மித்தால், அதனை வாழ்நாள் முழுவதும் விரட்டவே முடியாது; மாறாக, மருத்துவம், உடற்பயிற்சி, பின்னால் பின்பற்றபடும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் - ஓரளவு அல்லது பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தலாமே தவிர, அறவே நோயின்றி நீங்கி விட முடியாது.
புற்றுநோய்கூட உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்திட முடிகிறது; மீண்டும் அது வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தக் கொடுமையான சர்க்கரை நோய் ஒரு முறை வந்து விட்டால் அது Type II 
மிமி  என்ற இரண்டாம் வகை  மருந்து உட்கொள்ளும் நிலை யில்கூட அறவே குணப்படுத்திவிட முடியாது.
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ
என்ற கவிஞர் கண்ணதாசன் பாட்டில் கூட திருத்தம் செய்து,
கடைசி வரை சர்க்கரை நோய் என்று மாற்றித்தான் ஒப்பாரிப் பாட்டுப் பாட வேண்டும் போலும்!
இந்த நோய் ஒரு கொடுமையான சந்திப்பு  நோய்  (Junction Disease) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
இது கண் பார்வையைப் பறிக்கும்! அல்லது சிறுநீரகத்தைப் பழுதாக்கிப் பறிக்கும், ரத்தக் கொதிப்பை அதிகப் படுத்தி, பக்கவாதம் (stroke)  முதலிய வற்றையும் தரலாம்.
காங்கிரன் என்பதை நுழைத்து, கால், கை, விரல்களை வெட்டுமாறுச் செய்யும் என்ற கொடுமைகளோடு மாரடைப்பு  - இதய தாக்குதலுக்கும் (Heart Attack) மூல காரணமாக அமைதல் கூடும். எனவே மிகவும் கவனத்தோடும், பொறுப்போடும் சர்க்கரை நோய் வந்தவர்கள் அலட்சியப் படுத்தாமல் சிகிச்சைகளையும், கட்டுப்பாட் டினையும் காத்திடுதல் மிகவும் இன்றிய மையாததாகும்.
இதுபற்றி சில தவறான புரட்டுகளும்  (Myths) பரப்பப்படுகின்றன. அவை உண்மையல்ல என்பதையும் சர்க்கரை நோயாளிகளான நண்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
புரட்டு எண்: 1
சர்க்கரை சாப்பிடுவதால்தான், சர்க் கரை நோய் வருகிறது.
உண்மை என்னவென்றால், பல்வேறு அம்சங்களின் கூட்டால்தான் இச்சர்க்கரை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. பிறவிக்கூறு (தாய் தந்தையர் பரம்பரை நோய் வழி).
டைப் 2 (Type 2) வகையிலும் சுற்றுச் சூழலான வாழ்க்கை முறையின் இணைப் பினாலும்தான் (Life Style) இது ஏற் படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அறவே இனிப்பை நீக்க வேண்டிய தில்லை; அளவுடன் உண்டால் - கட்டுப் பாட்டுக்குள் வைத் தால் அது கேடு செய்வதில்லை. அந்த அளவு இனிப் புச் சாப்பிடும்போது மற்ற உணவை - அரிசி, சப்பாத்தி வகைகளைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவுக்குள் இருக்கும்படிச் செய்தால் அது எதிர் மறை விளைவை ஏற்படுத்தாது!
புரட்டு எண்: 2
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக் லெட்களையோ, இனிப்புகளையோ சாப்பிடவே கூடாது.
உண்மை: அப்படிப்பட்ட பத்தியம் தேவை இல்லை; சாக்லெட்டோ, இனிப்போ சாப்பிடலாம் - அது அளவுடன் இருப்பது உடல் நலக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வரம்புக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்; அறவே கூடாது என்று தடுத்தால், அதன்மீது ஆசை அதிகம் வரும் - மனோ தத்துவப்படி!
கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டால் ஆசை ஆவியாய் நீராவியாய் மறைந்து விடக் கூடும்.
புரட்டு எண்: 3
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தனியே ஒரு வகை அதற்கென பிரத்தியேகமான உணவையே சாப்பிட வேண்டும்.
உண்மை: அப்படி அல்ல; ஆரோக் கியமான உணவை - மற்றவர்களைப் போலவே சர்க்கரை நோய் உள்ளவர் களும் உண்ணலாம்; தனி  Special Mealsஎன்று ஏற்பாடு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நார்ச்சத்து உண வுகள், குறைந்த நல்ல வகை கொழுப் புள்ள (Low Saturated food) மற்றும் நல்ல முழு தானிய வகை உணவுகளை (Whole Grain Foods) உண்ணலாம்.
புரட்டு எண்: 4
சர்க்கரை நோய் ஒரு தொத்து நோய் - பக்கத்தில் உள்ளவர்களையும் தொற்றக் கூடும்!
உண்மை: தவறான கருத்து. அது தொற்று நோய் அல்ல; அருகில் உள்ளவர்களுக்கோ, வீட்டாருக்கோ, நண்பர்களுக்கோ அது தொற்றி விடாது - ஒரு போதும். Genetic  என்பது குடும்ப பாரம்பரியம் காரணமாக தாய் தந்தை வழியில் சர்க்கரை நோய் வரக்கூடும்; அது வேறு; இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
புரட்டு எண்: 5
ஜனங்களில் சிலருக்கு சர்க்கரை நோயின் தொடுதல் போன்ற (Touch of Diabetes) நிலை உண்டு.
உண்மை: சர்க்கரை நோயில் மென்மையானது மெதுவானது (Mild Diabetes)
என்றெல்லாம் கிடையாது; எப்போதும் அது சீரியசான வியாதி தான்; இதைச் சரிவர   கண்காணித்து சிகிச்சையை உடனடியாக மேற் கொள்ளா விட்டால் ஆபத்துதான்.
நாம் மேலே சொன்ன பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகக் கூடும்!
எனவே சர்க்கரை நோய் பற்றிய மூடநம்பிக்கை புரட்டுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்து எச்சரிக்கை யுடன் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது மிகவும் விரும்பத்தக்கது!
சர்க்கரை நோய் வந்தவர்கள் இடிந்து, மனம் ஒடிந்து உட்கார்ந்து விடத் தேவையில்லை; அதிகமான கவலையால் நிலை குலைய வேண் டியதில்லை -
அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் எவ்வளவு காலத்திற்கும் வாழலாம், அலட்சியமும் காட்டாமல், சுவைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
நா காக்க என்பது - தவறான சுடுசொல்லைச் சொல்லாமல் இருப்பது என்பது மட்டும் பொருளன்று; இந்த புது யுகத்திற்கேற்ற பொருள் - நா காக்க என்றால், சுவைக்காக கண் டதைச் சாப்பிட்டு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள் என்றும் பொருள் கொள்ள வேண்டும் போலிருக்கிறது! வருமுன்னர் காப்போம்

-விடுதலை,25.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக