பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

கிளாக்கோமா என்றால் என்ன?



வழக்கமான கண் பரிசோதனைக்காக கோவை சத்தியன் கண் மருத்துவ மனைக்கு நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செல்வதுண்டு. அதனை மிக அருமையாக, நோயாளிகளின் நலப் பாதுகாப்பையே தொண்டாக நடத்திடும் டாக்டர் சத்தியன் அவர்களிடம் பரி சோதித்துக்கொண்டு வருவது வாடிக்கை.
அம்மருத்துவமனை நடத்தும் பிரபல கண் டாக்டர் சத்தியன் அவர்களை, நம்முடைய பெரியார் மருத்துவ மிஷ னின் இயக்குநர், டாக்டர் இரா.கவுதமன் அவர்கள்தான் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
வசதி படைத்த கோவை பெருங் குடும்பங்களில் ஒன்றிலிருந்து படித்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை போன்ற பலவற்றிலும் பழுத்த அனுபவம் பெற்ற, (நடுத்தர வயதுக்காரர்) டாக்டர் சத்தியன் அவர்களும், அவரது வாழ் விணையரும் (அவரும் இத்துறை வல் லுநர்) மருத்துவ சேவையை இவருடன் இணைந்து நடத்தி வருபவர்.
இனிய பண்பாளர்கள் இருவரும்! அவரது நிர்வாகத்தில் இயங்கும் அக் கண் மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள், மற்ற மருத்துவர்கள் - செவிலியர்களான சகோதரிகள் அனை வருமே சிகிச்சையை நாடி வருவோரி டம் பரிவுடன் கேட்டு, எவ்வித ஆர வாரமும் இன்றி தத்தம் கடமையைச் செய்யும் பக்குவத்தால் கனிந்துள்ளனர்.
நோயாளிகள் பரிசோதனைக்காக காத்திருக்கையில், புத்தகக் குவியல் ஒன்று அருகில் இருக்கும் - பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்கள் அவை. காலம் நகருவது - காத்திருக் கிறோம் என்ற அயர்வினைப் போக் கிடும் - அவை இளைப்பாறிட அரிய உறுதுணை!
நல்ல சிந்திக்கக்கூடிய மருத்துவ அறிவுரைகள், ஆக்கபூர்வ வாழ்வியல் சிந்தனை கருத்துரைகள் ஆங்காங்கு அலங்கரிக்கின்றன!
நான் இம்மாதிரி செய்திகள் எங்கே கிடைத்தாலும், தேனை பறந்து, பறந்து மலர்களில் இருந்து சேகரிக்கும் தேனீ போலச் சென்று குறிப்புகளை எழுதி வைத்து பலருக்கும் பரப்பிடுவதில் சுவை காண்பவன்.
டாக்டர் என்னை பரிசோதனை செய்யும் இடத்தில் கிளாக்கோமோ (ரீறீணீநீஷீனீணீ) கண்நோய் பற்றிய குறிப்பு களைத் தொங்க விட்டிருந்தார். படித் தேன், எழுதத் தொடங்கினேன்.
அதை விரிவாக தமிழில் விளக்கி, கேள்வி - பதில் ரூபத்தில் ஒரு சிறிய தகவல் வெளியீட்டினைத் தந்தால், அதுபற்றி எழுதினால் பலருக்கும் - குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்ப தால், அதை அப்படியே தருகிறோம்:
கெட்ட வாய்ப்பாக, பெரும்பாலான நோயாளிகள் கிளாக்கோமாவை தாம தமாகவே உணர்கிறார்கள், அந்நேரம் கிளாக்காமோ ஆனது 40%க்கு மேல் உருவாகியிருக்கும். அதைத் தவிர்ப்ப தற்கு, உரிய நேரத்தில் நோயைக் கண் டறிவதும் உடனடியாக சிகிச்சையைத் துவங்குவதும் கிளாக்கோமா மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கு அவசிய மாகும். உங்களுக்கு கீழ்கண்ட கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அறிவுறுத்தியது போல தவறாமல் ஒவ்வொரு நாளும் கண்ணில் போட்டுக்கொள்ள வேண்டும்.
நோயாளி: டாக்டர், இந்த நோயின் தீவிரத் தன்மையை நான் புரிந்து கொண்டேன். இருப்பினும் இதன் அறி குறிகளை நான் அனுபவிக்கவில்லை மற்றும் எனது பார்வையில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியானால் கிளாக்கோமா போன்ற ஒரு தீவிரமான நிலையால் நான் பாதிக்கப்பட்டிருக் கிறேன் என்று ஏன் நீங்கள் கூறு கிறீர்கள்?
கண் சிறப்பு நிபுணர்: சுவையான கேள்வி: உண்மையில் கிளாக்கோமா என்பது பார்வைத் திறனை அழிக்கும் ஒரு சப்தமில்லாது தாக்கும் கொலை யாளி ஆகும். ஆரம்பத்தில் பெரும் பாலான நோயாளிகள் பிரச்சினைகள், எதையும் உணர்வதில்லை. எனவே தான் அந்த நோயாளிகள் அந்த நிலையை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. கிளாக்கோமா ஆனது நோயாளியை முற்றிலும் குருடாகும் நிலைக்கு நோயாளியைப் படிப்படி யாகத் தள்ளுகிறது. கரையான் போன்று பார்வையைப் படிப்படியாக அரித்து விடுகிறது. எனவேதான் நமது அனைத்து முயற்சிகளும், இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக் கொள்வதை நோக்க மாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஒன்றும் செய்ய இயலாது. விசுவல் ஃபீல்ட்டெஸ்ட் மற்றும் கோனியோஸ்கோப்பி போன்ற நவீன கருவிகளால் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட லாம். பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை ஒழுங்காக எடுப்பது, நோயாளி குரு டாவதில் இருந்து தடுக்கிறது. கிளாக் கோமா பற்றியும் அதற்கான மருந்து பற்றியும் அறிந்திராத அல்லது அலட்சி யப்படுத்தும் நோயாளிகளே, குருடா வதற்கு வாய்ப்புள்ளது.
நோயாளி: டாக்டர் இந்த மருந்து களை ஒழுங்காக நான் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதும் கூட எனது பார்வையில் மேம்பாட்டினை என்னால் கவனிக்க முடியவில்லையே.
கண் சிறப்பு நிபுணர்: ஆமாம், நன் றாகக் கவனித்துள்ளீர்கள், கெட்ட வாய்ப் பாக கிளாக்கோமா உள்ள நோயா ளியாக நீங்கள் அறியப்பட்டுள்ளீர்கள். முற்றிலும் பார்வையிழப்பு என்ற நிலையை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள். மேலும் இந்த மருந்தானது அதைத் தடுத்திடும். நிலையை மேலும் மோசமடையச் செய்யாது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து களை நீங்கள் உபயோகிக்காவிட்டால் நீங்கள் தொடர்ந்து பார்வையை இழப்பீர்கள்.
நோயாளி: டாக்டர் மருந்தை எடுக்க நான் மறந்து விட்டால் என்ன நேரும்?
கண் சிறப்பு நிபுணர்: நான் பரிந் துரைத்த மருந்தை தினந்தோறும் மறக்காமல் அல்லது தவறாமல் எடுப்பது மிக முக்கியம் ஆகும். பரிந்துரைத்த மருந்து டோஸினை எடுக்கத் தவறுவது கண்ணைக் சேதமடையச் செய்யும்.
நோயாளி: சிறிது காலம் கழித்து இந்த மருந்து எனது கிளாக்கோமாவை குணப்படுத்துமா?
கண் சிறப்பு நிபுணர்: ஏற்கனெவே நான் சொன்னதைத் திரும்பச் சொல் கிறேன். நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்று கிளாக் கோமாவையும் குணப்படுத்த இயலாது. ஒழுங்காக மருந்தை எடுத்துக்கொள்வது அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மட் டுமே செய்யும். மருந்தை எடுப்பதற்கான நோக்கம் என்ன என்றால், ஏற்கெனவே இருக்கும் காணும் திறனை / பார்வைத் திறனை தக்க வைத்துக்கொள்வதும் அது மேலும் மோசமடையாமல் வைத்திருப் பதும் ஆகும்.
நோயாளி: டாக்டர் இந்த மருந்து களின் விலை பற்றி கூறுங்கள் அவை விலை உயர்வானவையா?
கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி கிளாக்கோமோ சிகிச்சைக்கான மருந்து கள் மலிவானவையும் உள்ளன.
விலை மதிப்பு மிக்கவையும் உள்ளன. பழைய மருந்துகள் மலிவானதாக இருக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு சில தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் நுரையீரல்கள் மற்றும் இதயம் பாதிக்கப்படக்கூடும். புதிய மருந்துகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை உங்களது நுரை யீரல்கள் மற்றும் இதயத்தைப் பாதிப்ப தில்லை. உங்கள் கண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மருந்து களை நான் பரிந்துரைக்கவில்லை. உங்களது ஒட்டுமொத்த உடல் நிலை யைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். கிளாக்கோமோவுக்கான பழைய மருந்து களை எடுத்துக்கொண்டு அதனால் நேரும் சிக்கல்களுக்காக பெரும் அளவில் பணம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை.
நோயாளி: ஒரு வேளை சிறிது காலம் கழித்து இந்த மருந்தை நான் நிறுத்தி விட்டால் என்ன நேரும்?
கண் சிறப்பு நிபுணர்: நீங்கள் விவேகமுள்ளவர் என நான் நம்பு கிறேன். இந்த கேள்விக்குப் பதிலளிப் பதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்ப்போம். 15 நிமிடங்களுக்கு உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங் களைச் சுற்றியுள்ள இருளானது உங் களை அச்சமூட்டி 5 நிமிடங்களுக்குள் ளேயே, மூடிய உங்களது கண்களைத் திறக்க வைத்திடும். இந்த காரிருள் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாகச் சூழ்ந்திடும் வகையில் ஒரு பொழுதும் செயல்படாதீர்கள். நீங்கள் யார் தயவும் இல்லாமல் சுயமாக நடமாடும் வகையில் உங்களது கண்களுக்கு அதிக முக்கியத் துவம் தாருங்கள்.
நோயாளி: மருந்து போடும் பொழுது ஒன்றைக்கவனித்ன். கண் சொட்டு மருந்துகளைப் போட்டதும் என் கண்கள் சிவப்பாகி விடுகின்றன. ஏதேனும் பிரச்சினையா? என் கண்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது?
கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி, சில நவீன மருந்துகள் ஆரம்பத்தில் கண்களைச் சிவப்பாகச் செய்கின்றன. அது பற்றி மிகையாகக் கவலைப்பட வேண்டாம். அந்த சிவப்பு நிறம் பின்னர் மறைந்து விடும். இப்படி சிவந்து போவது தீங்கானது அல்ல.
*****
கடுமையான சர்க்கரை நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று இந்த கிளாக்கோமா. எனவே,  சர்க்கரை நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடைப்பிடித்தால் கவலையில்லை. நன்கு வாழலாம்.

-விடுதலை,17.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக