• Viduthalai
கரோனா கொடுந்தொற்று காரணமாக அவதியுறு வோரை அதனின்று மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க நல்ல மனம் படைத்தோர் பலரும் ஏராளமாக நன்கொடை வழங்கி, கரோனா ஒழிப்பை ஒரு கூட்டு மக்கள் இயக்கமாக்கி வருவதற்கான அறிகுறியாக, வயது இடைவெளியின்றி பெரியார் பிஞ்சுகளும் சரி, பெரியாரின் திராவிடர் இயக்கத்தில், மனிதநேயத்தில் மாறா பிடிப்புள்ள நண்பர் இலியாஸ்மூலம் அறிமுகமான 97 வயது நிறைந்த சிங்கப்பூர் பெரியவர் அப்துல் கஃபூர் அய்யா போன்றவர்களும் எப்படி ஈகம் என்ற அறுபடாத நூலிழையால் பின்னப்பட்டுள்ளனர் என்பதை கீழ்க்கண்ட இந்த இரண்டு கடிதங்கள் பறைசாற்றுகின்றன!
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர்
திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு-இந்தியா
அனுப்புநர்:
ஹாஜி எம். அப்துல் கஃபூர்
சிங்கப்பூர்
HAJI M.ABDUL GAFOORE
Blk 43 LENGKOK BAHRU
#04-191
SINGAPORE 150043
பொருள் : தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி
அன்புள்ள, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். வாழ்த்துகள்.
என் பெயர் எம். அப்துல் கஃபூர். எனக்கு வயது 97. சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்கு, பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, குடவாசல் - 612 601 எனும் ஊர்.
தற்போது உலகெங்கிலும் பரவிவரும் கரோனா கிருமித்தொற்று இந்தியாவையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடவில்லை. நோய்ப் பரவலைத் தடுக்கவும், மக்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நீங்கள் முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
இந்தப் பேரிடர் கால அடிப்படையில் சீரிய பணிகளை மேற்கொண்டுள்ள நீங்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும், அவற்றை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்காகச் செலவிட முனைந்துள்ளதும் போற்றுதலுக் குரியது.
நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த முதிர்ந்த 97ஆம் வயதில் எனது பாசமிகு பிள்ளைகள் தான் எனக்கு மாதாமாதம் செலவுக்குப் பணம் கொடுத்து ஆதரவளிக்கின்றனர்.
எனது அவசர, அத்தியாவசியத் தேவைகளுக்காக நான் அந்தச் செலவுக்கான பணத்தில் கொஞ்சத்தைச் சேமித்து வைப்பதை பழக்கமாக்கி வந்துள்ளேன்.
தமிழகத்தில் மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும், அவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தற்போது நிதி தேவைப்படுவதை அறிந்து அந்தப் பணிக்காக நான் என் சேமிப்பிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் (ரூ. 2,00,000) நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்.
அதற்கான காசோலையை இந்த மடலுடன் இணைத்துள்ளேன். வயது முதிர்ந்த நிலையில் வங்கிக்குப் போக இயலாத காரணத்தால் குடும்ப நண்பரின் மூலம் அந்த காசோலையை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
சிறு வயது முதல் திராவிட இயக்கத்தின் கொள்கை யிலும், உலகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் மீது அளவுகடந்த மரியாதையும், பற்றும் கொண்டவன் நான். தலைவரின் கோபாலபுரம் இல்லத்தில், அவரை இரண்டு முறை நான் சந்தித்துள்ளேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் உங்களை நான் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற வி.கே.பி. (V.K.P.) இல்லத் திருமணத்தில் சந்தித்தேன். குடும்பத்தினர் சார்பில் நீங்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்தீர்கள். அப்போது, நானும் உங்களுக்குப் பொன்னாடை அணிவித் தேன் என்பதை அன்புடன் நினைவுகூர்கிறேன்.
தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் கி.வீரமணியின் அணுக்கமான நட்பும், அறிமுக மும் பல ஆண்டுகளாகக் கிடைத்ததிலும் பெருமை கொள்கிறேன்.
எனது கைச் செலவுப் பணத்தை உங்கள் மக்கள் பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!
அன்புடன்,
ஹாஜி. எம். அப்துல் கஃபூர்
நாள்: 18.5.2021
இடம்: தஞ்சாவூர்
அன்புள்ள ஆசிரியர் தாத்தாவுக்கு, வணக்கம்!
நலம், நலமறிய ஆவல்.
இந்தக் கரோனா நாள்கள் மிகவும் மோசமாக மக்களை வீழ்த்துகிறது. ‘விடுதலை'யில் கரோனா பாதிப்புப் பற்றியும், நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் உயர்திரு. ஸ்டாலின் அங்க்கிள் எடுக்கும் நடவடிக்கை.பற்றியும் வரும் செய்திகளை எங்கள் பன்னீர்செல்வம் தாத்தா படிக்கச் சொல்லி, நான் படிப்பேன்.
உயர்திரு. ஸ்டாலின் அங்க்கிள் எல்லோரிடமிருந்து பண உதவி கேட்டு எழுதியதைப் படித்தவுடன் என் தம்பி கவு.நிலவன், மாயா அத்தையிடம் பேசி ‘‘செங்கதிரன், நிலவொளி கிட்டே சொல்லுங்க அத்தைன்னு சொன்னேன்'' அத்தை ஒரே குசியாயிட்டாங்க, என்னைப் பாராட்டுனாங்க.
அதனால் நான் (இனியவன் - வயது 15) ரூ.20,000/
என் தம்பி (நிலவன் - வயது 10) ரூ.8,000/
அத்தை மகன் (செங்கதிரன் வயது 11) ரூ 5,000/
அத்தை மகள் (நிலவொளி வயது 8) ரூ 9,000/
ஆக மொத்தம் ரூ.42,000/- அனுப்பிவைக்கிறோம்.
அடுத்து எங்கள் தாத்தா (திரு.பன்னீர்செல்வம்), ஆத்தா (திருமதி தமயந்தி), அம்மா (திருமதி பல்லவி), அப்பா (திரு. கவுதம்), அத்தை (திருமதி. மாயா), மாமா (திரு கமலக் கண்ணன்), அம்மாச்சி (திருமதி. சியாமளா), தாத்தா
(திரு. பாலசுப்பிரமணி). மாமா (அம்மாவின் அண்ணன் திரு.அரவிந்த்) மற்றும் என் நண்பர்களிடமிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பெற்ற தொகையை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி!
தங்கள் அன்புள்ள,
கவு. இனியவன், கவு. நிலவன், க.செங்கதிரன், க.நிலவொளி
‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்''
‘‘ஈகைக்குமுண்டோ இடைவெளி?''
அள்ளித் தருபவர்கள் ஒருபுறம் என்றாலும், இத்தகைய அருங்குணம் மனிதத்தை எப்படி மாமனிதம் ஆக உயர்த்துகிறது பார்த்தீர்களா?
வாழ்த்துதலுக்குரியவர்கள் வாழ்க, வாழ்க பல்லாண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக