‘‘சின்னக் கலைவாணர்'' என்று கலைஞர் தந்த செல்லப் பெயரால் உலகத்தை வலம் வந்த நகைச்சுவை நாயகன் - பகுத்தறிவு, சமூக அக்கறை என்பதை நோக்கமாக்கி அதை சொல்லும் முறையில் சிரிக்க வைத்து சிந்திக்கச் செய்த சீலர் நம் அருந்தோழர் விவேக் அவர்கள் மறைவு என்பது பேரதிர்ச்சியால் நம்மை உலுக்கிய அண்மைக்கால இழப்பாகும்!
அவரது நகைச்சுவை நடிப்பில் பாடம் எடுக்கும் ஒரு பேராசிரியர் ஒளிந்திருப்பார். லாவகமாக சிரித்துக் கொண்டே நையாண்டியை பக்குவமாக பகுத்தறிவுப் பாடமாக்கி வகுப்பெடுப்பார் திரை உலகு மூலம்!
அவரது இழப்புக்கு அகிலமே கண்ணீர் வடிக்கும் நிலையில், அவர் கலை உலகின் ஈடு இணையற்ற - கலைவாணருக்கு அடுத்தபடி சீர்திருத்தக் கருத்துகளை சிரிப்புமூலம் கலந்து தந்து சிந்திக்க வைத்த தொண்டு என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. நடிகவேள் ராதாவின் பாங்கு ஒரு தனி ரகம்!
'இயற்கையின் கோணல் புத்தி' என்பார் இதை தந்தை பெரியார் - பற்பல நிகழ்வுகளின் போது!
60 ஆண்டுகள் நிறையவடையாத முடிவடையாத நிலையில் இப்படி ஒரு பேரிழப்பை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தில் நடித்தார்; இன்று பாடமாகி விட்டார்!
அவருக்குப் புகழ் மாலைகள் செலுத்தும் அதே நேரத்தில், அவரது படத்தை - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த அந்த உடன் பிறவா சகோதரனை நினைக்கும்போது பலரும் பல பாடங்களை கற்க வேண்டும்.
1. அவர் ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது அறிவு, ஆற்றல் திறமையில் உயர்ந்த ஒரு கிராமவாசி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்குத் தகுதி இல்லை; திறமை இல்லை என்ற புரட்டை தனது உழைப்பாலும், அறிவுத் திறத்தினாலும் உடைத்து உலகுக்கு காட்டி உயர்ந்த உத்தமத் தோழர்!
இது முதல் பாடம் - உழைத்தால் கிராமப் பிறப்போ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரென்பதோ ஒரு பொருட்டல்ல; கல்வியில் பகுத்தறிவும் இணைந்தால், அவர் உலகப் புகழ் எய்துவர் என்பது அப்பாடம்!
இரண்டாவது, வளர்ந்த பின்பும் எவரிடமும் அவர் காட்டிய அன்பும், பண்பும் எப்போதும் எவரும் கற்க வேண்டிய மற்றொரு பாடம்;
மூன்றாவது, அவரது அருமை மகனை பறி கொடுத்தபோதும் அந்த துயரத்தில் மனம் நொறுங்கி மூலையில் ஒதுங்கி விடவில்லை. முனைப்புடன் வாழ்ந்து, தனது துயரக் கடலை உள்ளடக்கி, நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்து நோயற்றுப்போக உழைத்தார்! சோதனைகளை எதிர்கொள்ள கற்க வேண்டிய விடயம் இது.
தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு, தன் பிள்ளை, தன் பெண்டு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தோடு வாழாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் நமது உறவுகள் என்ற பெரு நோக்கோடு, தொண்டறம் பேண - சமூகச் சிந்தனையை அப்துல்கலாம் அவர்களிடத்தில் கொண்ட ஈடுபாடு மூலம் பெற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு பாடமாக பலருக்கும் கற்றுக் கொடுப்பதை தனது இறுதி மூச்சடங்கும் வரை செய்த சமூகப் பாதுகாவல் படைத் தளபதி என்ற பாடம் நாம் அனைவரும் குறிப்பாக, கலை உலகில் கோடிகளில் புரளுவோர் கற்க வேண்டிய பொதுநலப் பாடமாகும்.
அதனால்தான் மக்கள் கண்ணீர் கடலில் நீந்தி அவர் தனது இறுதிப் பயணத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது!
பொதுத் தொண்டு - சமூகத் தொண்டு செய்வோரை சரித்திரம் மறக்காது!
மகுடம் சூட்டி மகிழ்ந்து கொண்டாடும் என்ற பாடத்தைப் பலருக்கும் இவர் பாடமாக நமக்கும் வரலாறாக பாடம் எடுத்துக்காட்டுகிறார்.
இவையும் தாண்டி உறுத்தலான மற்றொரு பாடம் - இவ்வளவு அறிவு ஆற்றல் நிறைந்த ஒரு கூர்மதியாளர் எப்படி 100 சதவிகித (பிளாக்) அடைப்பு இருதயத்தின் இடதுபுறக் குழாயில் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாய் தன் உடல் நலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்திருப்பார் என்பது புரியாத புதிராக இருக்கிறது!
50 வயது தாண்டும் எவரும் இந்த அறிவியல், மின்னணுவியல் யுகத்தில் அடிக்கடி உடற்பரிசோதனைகளை - குறிப்பாக இதயப் பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது முழுமையாக நடத்திக் கொள்ளத் தவறவே கூடாது! என்பது முக்கிய பாடம்!
சிலர் நெஞ்சு வலி வரும்போது அது வாயுத் தொல்லை (Gas) என்று அலட்சியப் படுத்திடுவதும், தனது பணிகளுக்கே முன்னுரிமை தந்து உடல் நலப் பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளுதலும் சர்வ சாதாரணம்!
இதய வலி ஏற்படும் போது ஈ.சி.ஜி. எடுத்து பார்த்துக் கொண்டு சிலர் திருப்தி அடைந்து விடுகின்றனர்.
மருத்துவர் அறிவுரைகளின்படி கூறுவதானால் அதுபோதாது; அதற்கு மேலும் முக்கிய 'எக்கோ' என்ற Electrocardiogram பரிசோதனையை இதய நிபுணர்களை வைத்து செய்துகொள்வதும் - தேவைப்பட்டால் 'ஆஞ்சியோ' (Angio) பரிசோதனை (நெருக்கடி ஏற்பட்டபின் செல்லுவதைத் தவிர்த்து) வழக்கமான கால அவகாசத்தோடு சென்று பரிசோதித்து, மருத்துவர், இதய மருத்துவர் ஆலோசனையை ஏற்று தவறாமல் மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் கற்க வேண்டிய பாடம் என்பதே!
நிகழ்ந்த தவறு புரியவில்லை என்றாலும், கலையுலகம் முதல் சமூகம் வரை அனைவரும் கற்க வேண்டிய - கடைப்பிடிக்கவேண்டிய பாடம் உடல் நலப் பாதுகாப்பு! அதனையும் நமக்கு கற்றுக் கொடுத்து புரிய வைத்திருக்கிறார்.
அவர் புகழ் என்றும் மறையாது - அவர் தரும் பாடங்கள் நம்மை உயர்த்தும் என்பது உறுதி!