பக்கங்கள்

புதன், 29 மே, 2019

தூக்கம் - ஒரு அறிவியல் பார்வை! 1&2



நமது முக்கிய தேவைகளில் ஒன்று - உடல் நலத்திற்கும் நோயற்ற வாழ்வின் தேவைக் குமாக - தூக்கம்.

தூக்கத்தை அலட்சியப்படுத் தாதீர்கள்; கோழி கூவும் வரை விழித்து, பிறகு முற்பகல் வரை தூங்கி எழுவதுதான் தனது வாடிக்கை என்பதாக பழகியுள்ள நம் நண்பர்கள் இந்த அறிவியல் உண்மைபற்றிய ஆராய்ச்சியா ளரின் கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்பட்ட பின்பு வழக் கத்தை எப்படி மாற்றிட முடியும் என்று கேட்காதீர்கள்.

வழக்கம்  என்பதில் ஒழுக்கம் இன்றேல், அவ்வழக்கத்திற்கு அடித்தளமாகிய பழக்கத்தைக் கைவிடுதல் அவசியம் என்பார் நம் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்!

கைலெஸ்ஸினர் (Guy Leschziner) என்ற நரம்பியல் ஆலோசகர் ஆன மருத்துவ நிபுணர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள "The Nocturnal Brain; Tales of Nightmares  and Neuroscience" என்ற புத்தகத்தில் மிக அருமையான ஆய்வு முடிவுகள் - தகவல்கள் வெளி வந்துள்ளன.

இங்கிலாந்து பகுத்தறிவாளர் அமைப்புச் சார்பாக லண்டனிலிருந்து வெளிவரும் (காலாண்டு ஆங்கில இதழ்)  'New Humanist' என்ற ஏட்டில் இந்நூல் பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாகி யுள்ளது. அதிலிருந்து திரட்டப்பட்ட தகவல் களின் தொகுப்புதான் இந்த வாழ்வியல்!

தூக்கம் என்பது நமது மூளை - உடல் - இரண்டின் புத்தாக்கத்திற்கு - மீள் பணிக்கு ஆயத்தமாகும் ஒரு அரிய வாய்ப்பு ஆகும்!

நமது மூளையும், வீடுகளில் எப்படி ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு வேலைகளும், நட வடிக்கைகளும், துப்புரவும் நடைபெறுகிறதோ அப்படித்தான் நம் மூளைக்குள்ளும் பல்வேறு தனித் தனிப் பணிகளும் முறையாக நடைபெற்று வருகின்றன.

நமது நினைவுக்கானது, கற்றல், உடலின் மற்ற உறுப்புகளுக்கு உத்தரவு போட்டு பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற தொடர் பணிகள் தொய்வின்றி நடந்துகொண்டே உள்ளன!

விஞ்ஞான ஆய்வுக்கூட முடிவுகளும் மனி தர்களின் உலக யதார்த்த நடவடிக்கைகளுக்குமே சிற் சில நேரங்களில் முரண்படும் நிலையும் உண்டு.

தூக்கத்தைப் பொறுத்தவரை இது பலருக்கு அளவிலும், தன்மையிலும் (Quantity and Quality)  மாறுபடவே செய்கிறது - பல நேரங்களில்

மருத்துவரைப் பார்த்துப் பலரும் கேட்கும் வழமையான கேள்வி. "டாக்டர் எனக்கு எத்தனை மணி நேர தூக்கம் தேவை?" என்பதேயாகும்.

இதற்கு சரியான பதில் என்ன தெரியுமா? "நீங்கள் விழத்தெழும்போது, சோர்வு நீங்கி புத்துணர்வுடன் எழுந்து - அயர்வின்றி உழைக்கும் நேரம் -  எத்தனை மணி நேரம் என்பதையே அளவுகோலாகக் கொள்ளுங்கள்; அதன் மூலம்தான் நீங்கள் மேலும் விழித்திருந்து, பல பணிகளை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதே!

பணியாற்றிக் கொண்டே இருந்து எப்போது நீங்கள் களைப்பு அடைந்து உறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது தான் உங்கள் தூக்கத்தின் அளவும், தன்மையும் ஆகும்!

தூக்கம் வராமலிருப்பது வேறு; தூக்கமின்மை என்ற நோய் Deprivation Sleep வேறு;  Insomnia - தூக்கமின்மை வேறு.

(நாளையும் விழித்திருக்க!)

- விடுதலை நாளேடு 27. 5. 2019

தூக்கம் என்பது தேவையான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் நலம் உறுதிப் படுத்தப்படும்.

தூக்கம்பற்றி பலரும் அடிக்கடி கூறுவது 'நான் நேற்று இரவு 2 மணி முதல் விடியற் காலை 5.30 மணி வரை விழித்துக் கொண்டே இருந்தேன் - தூக்கமே வரவில்லை' என்பது.

இதுபற்றி , தூக்கம் பற்றிய ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், இது சரியான கருத்து  அல்ல; அவர்கள் பலரும் 30 வினாடிகளோ, 2 மணித்  துளிகள் என்கிற விகிதத்திலோ  தூங்கித்தான் இருப்பார்கள். 5.30  மணி வரை இடையே இது நிகழாமல் இருக்காது. தொடர் விழிப்பு என்பது சரியான உண்மை அல்ல.

இத்தகைய விழிப்புக்குரிய காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும்; இது  மனம் சம்பந்தப் பட்டது - மன அழுத்தம், துக்கம், துயரம், வருத்தம், ஏமாற்றம் ஆகியவை இதற்கு  அடிப்படையாக இருக்கக் கூடும்.

அல்லது உடல் உபாதைகள், வலிகள் இம்மாதிரி தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே  உரிய அளவுக்கு தூக்கத்தை வர வழைக்கும் வழிமுறை களையும் ஆராயலாம்!

இவர் படுத்தவுடன் தூங்கி விடுவார்; என்னே அரிய "வரம்" பெற்றவர் என்று சொல்வார்கள்!

மனச் சுமை இல்லாது, ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, எதிர்மறை எண்ணங்களுக்கும்  (Negative thoughts பொறாமை போன்ற, மன நோய்க்கும்) இடம் தராதவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் தானே வந்து விடும்.

சராசரி மனிதர்களின் இயல்பு  பயத்தாலும், கவலையாலும் அலைக் கழிக்கப்படுவதே!

கவலைப்படுவதனால், எந்த பிரச்சினையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதற்குப் பதில் மூளையை மேலும் "உலைக்களமாக்கி", என்ன செய்தால் இந்த இக்கட்டிலிருந்து விடுபடலாம் என்று ஆக்கப்பூர்வ பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் பிரச்சினைகளும் தீரும் - மூளையும் சாணை தீட்டப்பட்ட கத்திபோல சரியான பயன்பாட்டுக்குரிய கருவியாகி,  மனிதர்களைக் காப்பாற்ற எந்நாளும் பயன்படும்.

வரலாற்றுப் பூர்வமாகவே ஆழ்ந்த தூக்கத் திற்கு மனிதகுலம் போதிய முக்கியத்துவம் தருவதே இல்லை; முன்னுரிமை கொடுப்பது மில்லை!

தூக்கத்தினைப் பற்றி ஆராய்ந்து,  'குறட்டை'  முதற் கொண்டு ஆய்வு செய்வதற்கு என ஏராளமான மருத்துவ நிலையங்கள் அண்மைக் காலத்தில் - கருத்தரிப்பு உருவாக்க மய்யங்கள் புற்றீசல் போல் உருவாகும் அளவுக்கு, தூக்க ஆய்வு மய்யங்கள் வராவிட்டாலும்கூட முக்கிய பெரு நகரங்களில் வந்துள்ளன.  அரசின் பெரு மருத்துவமனை களில் இதற்கென தனித் துறை உருவாக்கப்படுதல் நல்லது.

தூக்கம் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன  - அத்தகைய  மருத்துவ ஆய்வுக் கூடங்களில் என்றாலும்கூட, மனித மூளையின் மேற்பரப்புப் பற்றி மட்டும் ஆய்வுகள் நடைபெறும் நிலை உள்ளது. உள்பகுதிபற்றி இன்னமும் இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர்.

TED உரைகள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி 13 நிமிடங்களில் நிகழ்த்தும் இணையத்தில் அனைவரும் எந்த பொருள் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

அதில் 'அல்ஷைமர்ஸ்' என்ற 'நினைவு இழத்தல்' நோய் பற்றிய உரை  ஒன்றைக் கேட்டேன்.

அதில் தூக்கமிழப்பு ஒரு முக்கிய காரணம் - அந்த நோய்க்கு; அதிலும் 12 மணி முதல் இரவு 2  அல்லது  3 மணி வரை உள்ள  நேரத்தில்தான்  அந்த நோய்க்கான சுரப்பி உச்சக் கட்டத்தில் இருந்து, பாசி குளங்களில் படிவது போல அது மூளையை அக்கறை    அடைவதோடு  - அடைப்பதாகவும் அமைந்து விடுகின்றது. எனவே, இரவு கண் விழிப்போர் அருள்கூர்ந்து 12 மணிக்கு மேல்  - 2 மணி தாண்டியும் விழிக்காமல்,  12 மணிக்குள்ளாவது உங்கள் படிப்பு, பணி முதலியவற்றை முடித்து, நோய்க்கு இடந்தர மாட்டோம் என்று  கூறலாமே!

தூக்கம், உணவு, நடைப்பயிற்சி, இளைஞர் களின் விளையாட்டு, மருந்துகளை முதியோர் தவறாமல் எடுத்தல் எல்லாம் வரிசைப்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைக் காப்புறுதிகள் - மறவாதீர்!

- விடுதலை நாளேடு 28. 5. 2019


ஞாயிறு, 19 மே, 2019

எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (1)& (2)

நேற்று 'அன்னையர் நாள்' என்று அறிவிக்கப்பட்ட நாள்!
நம்மைப் பொறுத்தவரை எல்லா நாளும் அன்னையர்களுடன்தான் இருந்து, அவர்களது அரவணைப்பில் நாமும், நம்முடைய மரியாதை கலந்த பாச மழையில் அவர்களும் என்றே வாழும் ஒரு வகை குடும்ப உறவுகளைக் கொண்டவர்கள்தான்!
தாயின் தியாகமும், தன்னலம் பாராத மன்னிக்கும் குணமும் வேறு எவருக்கும் எளிதில் வராது.
தாயைப் புறக்கணித்து, சிற்சில நேரங்களில் பிள்ளைகள் வரம்பு மீறி தகாத சுடு சொற்களை வீசினால்கூட, அன்னையர்கள் அதனைப் பொருட் படுத்தாமல் மீண்டும் மீண்டும் கவலையும், கருணை யும் கொண்ட பழகிடும் பான்மைக்கு, மன்னித்து மறத்தல் பண்புக்கு ஈடு இணை வேறு எங்கு தேடினாலும் கிட்டாதே!
பெற்ற தாய்தான் அன்பு சொரிவார் என்பதில்லை. வளர்த்து ஆளாக்கும் தாய்களும் அதற்கிணை யாகவோ அல்லது அதைமீறும் அளவிலோ, பாசப் பிணைப்புகள் வற்றாத உறவுப் பாசத்தை பொழியத் தவறுவதே இல்லை.
குறிப்பாக வளர்த்து ஆளாக்கிடும் பல பிள்ளைகளுக்கு வளர்ப்பவர் வேறு; பெற்றவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் இருப்பார்கள் - இருக்கிறார்கள்!
என்னைப் பெற்றவர் பற்றி  நான் அறியுமுன்பே (சுமார் 1 ஆண்டு, ஒன்றரை ஆண்டுக்குள்ளேயே) அவர் இறந்து விட்டார்.
அதற்குப் பிறகு என்னை வளர்த்து ஆளாக் கிடுவதில் பெரும் பங்கு அளித்த அம்மா - நான் விவரம் தெரிந்து, மற்றவர்கள் சொல்லும் வரை நானே இவர் நம்மைப் பெறவில்லை என்பது அறியாத ஒன்று!
பெற்றவரைவிட, வளர்ப்பவர்களின் பாசமும், கவலையும், பொறுப்பும் பல மடங்கு அதிகம் என்பதே நடைமுறை உண்மையாகும்!
நான் பெறாது பெற்ற அன்னைகள் பலர் உண்டு. அதில் பெருமையுடன் குறிப்பிடும் வாய்ப்பு - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் எனும் உலகறிந்த எனதுஅம்மாவே ஆவார்!
சட்டக் கல்லூரியில் நான் படிக்கும் போது (1956- 57இல்), தந்தை பெரியாருக்கு ஒன்றரை ஆண்டு - மூன்று ஆறு மாதங்கள் தண்டனை - செய்யாத குற்றத் திற்குத் தரப்பட்டு சிறை செல்லுமுன், "அம்மாவுக்குத் துணையாக இருந்து, இயக்கப் பணிகளைப் பார்த்துக் கொள்" என்று கூறி என்னை இயக்கப் பணிப் பயிற்சியில் ஈடுபட  வாய்ப்பளித்தார் நம் தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
அப்போதுதான் அம்மாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைப் பற்றிய பற்பல வாழ்க்கை உண்மைகளை என்னிடம்  கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு என்னை அவர்களது முதற்பிள்ளையாகவே கருதி பாசத்தை, வற்றாத அன்பைப் பொழிய ஆரம்பித்தார்!
அவர் நினைப்பதை அறிந்து செய்யும் பணி என்னைப் பற்றிக் கொண்டது.
அவரது தன்னலமற்ற, பொறுப்பு மிகுந்த, அய்யாவின் அருந்தொண்டர்களில் அணியமாகிய முதல் பெருந் தொண்டராகவே அவர் இறுதி வரை தன்னை நினைத்துப் பணிகளைத் தொடர்ந்த பாங்கு என்னுடைய உள்ளத்தில் அவரை மேலும் மேலும் பெருமைப்படுத்தி உயர்த்திய பதிவாகவே அமைந்தது!
எவரிடத்திலும் 'ஒத்தறிவுடன்' (Empathy) எதையும் கேட்டு உதவிடும் அவரது உயரிய மாண்புக்கு அன்றாட நிகழ்வில் பல உண்டு.
சிலரிடம் வறுமை, இல்லாமை அறிந்து அவர் அதற்காக இவர் கண்ணீர் விட்டு அழுது, பாதிக்கப்பட்டவர் கண்ணீரைத் துடைக்க இவர் தனது உதவிகளை - விளம்பரமில்லாமல் அய்யாவைப் போலவே செய்வார்; செய்தார்!
உபசரித்த கழகக் குடும்ப உறவுகளைக் கூட; கடன் பெற்றதுபோல் உள்ளுக்குள் நினைத்து, அதனைப் பல வழிகளில், பல தடவைகளில் திரும்பச் செய்வதில் அய்யா - அம்மா கொண்ட மன நிறைவுக்கு எத்தனையோ சம்பவங்கள் உண்டு. அய்யாவின் வாழ்விணையராக ஒரு போதும் அம்மா நடந்து கொள்ளவே இல்லை; ஒரு வேலைக்கார நிபந்தனையற்ற பணித் தாயாராகவே (செவிலித்தாயைவிட மேலான பதம் இது) நடந்து கொண்டார் என்பதை நாங்கள் அருகில் இருந்து அறிந்து, அறிந்து - வியந்து, வியந்து மகிழ்ந் திருக்கிறோம்.
அம்மா பெயரில் தான் பல வங்கிக் கணக்குகள்; காசோலைப் புத்தகங்கள் (Cheque Books). ஆனால் அவை அத்தனையும் அய்யாவின் கைப்பெட்டியில்  - ஒரு துணிப்பையில்!
அய்யா அவர்களே காசோலை எழுதி "அம்மாவிடம் கையொப்பம் வாங்கி வாருங்கள்" என்று எங்களிடம் கொடுப்பதும்; நாங்கள் கையொப்பம் வாங்கி அய்யாவிடம் தருவோம். இவை ஏன், எதற்கு, எவ்வளவு தொகை என்றுகூட பார்க்கவோ, கேட்கவோ மாட்டார்! பணியாட்களாக இருந்தால் கூட  ஒரு தெரிந்து கொள்ளும் ஆவலும்,  ஆசையும் தலை தூக்கும். அன்னையாருக்கு ஒரு நாளும் அது வந்ததே இல்லை.
அய்யா ஏன் அம்மாவைத் தேர்ந்து வைத்த நம்பிக்கை அவரது வாழ் நாளுக்குப் பின்பும் வாழ்ந்து வளர்ந்து தொடருகிறது என்பதன் ரகசியம் புரிகிற தல்லவா? மேலும்  பல நாளை.
(நாளை)
-விடுதலை நாளேடு, 14.5.19   எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (2)
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் பற்றற்ற உள்ளம் பற்றி அறிந்தால், எவரும் வியக்கவே செய்வர்! அவருக்கென ஒதுக்கப்பட்ட பூர்வீக சொத்துக்களையும், தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவருக்கென  - தனக்குப் பிறகு அவரது வாழ்க்கைக்கு வசதிகள் தேவை என்பதால் அவரது கடமையாகக் கருதி ஒரு ஏற்பாடு செய்தார்.
இது அன்னையாருக்கு பல ஆண்டுகள் தெரியவே தெரியாமல் செய்யப்பட்ட ஏற்பாடு!
சென்னை 1, மீரான் சாயபுத் தெரு, மவுண்ட்ரோடு, இல்லத்தை அய்யா அவர்கள் வாங்கிய நாள் முதல் தன் பெயரில் வைத்திருந்தார் - முன் யோசனையுடன். மற்ற அவரது சொத்துக்களையெல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கே எழுதி வைத்திருந்தார்!
முன்பெல்லாம் சென்னை மீரான் சாயபுத் தெரு இல்லப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, நெரிசல் அதிகமாகி விட்டதால், வேன் நிறுத்தவும், கூச்சல் சத்தம் இவைகளின்று சற்று ஒதுங்கியும் இருக்க வசதியாக, எங்கள் அடையாறு இல்லத்திற்கு வந்து தங்கி, திருச்சி செல்லுவார்கள். நாங்கள் பெற்ற பேறு அது!
ஒரு முறை அய்யா, புலவர் கோ. இமயவரம்பன் அவர்களோடு மட்டும் - அம்மா இல்லாமல், தனியாக வந்தார். என் வீட்டில் தங்கி காலைச் சிற்றுண்டி முடித்த பின்பு, என்னையும் 'விடுதலை' நிர்வாகி என்.எஸ். சம்பந்தத்தையும் அழைத்து, 'மீரான் சாயபு வீட்டை அம்மாவிற்கு அளித்து - அவர்களுக்கு எதிர்கால சுதந்திர வாழ்வுக்கென ஒரு ஏற்பாடு செய்ய நினைக்கிறேன். அம்மா இதைத் தெரிந்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்; எப்படிச் செய்தால் சரியாக - சட்டப் படியான பாதுகாப்புடன் இருக்கும் என்பதை நமது மூத்த சிவில் வழக்குரைஞர் (மைலாப்பூரில் உள்ள) திரு. சுப்ரமணிய முதலியாரிடம் நான் அனுப்பியதாக நீங்கள் சென்று கேட்டு வாருங்கள்' என்றார்.
அதுபோலவே அவரிடம் (அவர் நமது ஜஸ்டீஸ் எஸ். மோகன் அவர்களுக்கே சீனியர் - மூத்தவர்) செல்ல, அவரும் சரியான சட்ட அறிவுரை கூறினார். 'செட்டில்மெண்ட்' எழுதச் சொல்லுங்கள். தானம் என்றால் பத்திரம் குறைவு; செட்டில்மெண்டுக்குகூட. தானம் என்றால் மாற்றலாம்; செட்டில்மென்ட் எழுதி விட்டால் அது மாற்ற முடியாது (Irrevocable) என்றும், பாதுகாப்பும் இருக்கும் என்றும் கூறினார். அய்யா விருப்பப்படி செய்யட்டும் என்றார்.
அய்யா என்னிடம் பணம் தந்து பத்திரம் வாங்கி எழுதச் சொல்லி, ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில், நேரில் சென்று பதிவு செய்தார்; நாங்கள் இருவரும் சாட்சிகள் ஆவோம்.
நாங்கள் "100 ரூபாய் கட்டினால் பதிவாளரை, நம் வீட்டிற்கே வரவழைக்க லாம்" என்றோம். ஆனால் அய்யா, எதற்கு 100 ரூபாய் செலவு, நானே நேரில் பதிவாளர் அலுவலகம் வந்தால், அது மிச்சம்தானே என்று கூறி, நேரில்  சென்று பதிவு செய்தபின், பத்திரத்தை என்னிடம் கொடுக்கும்படியும் கையொப்பம் இட்டுத் திரும்பினார்.
இது "ரகசியமாக" அதாவது, அம்மா அறியாமல் நடந்தது. அய்யாவிடம் பத்திரம் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, அய்யா மறையுமுன்  - ஒரு ஆண்டுக்கு முன்னர், பத்திரப் பெட்டியில் வேறு ஏதோ பத்திரம் தேடும் போது, அம்மாவின் கண்களுக்கு இது பட்டு விட்டது!
உடனே திருச்சியில் அன்னையார் அய்யாவிடம் ஏகத்திற்கு 'ரகளை' செய்து அழுது விட்டார்!  'எனக்கென்ன தனி ஏற்பாடு. என் செலவு, அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய என்னால் முடியுமே' என்றார்!
பிறகு அய்யா எவ்வளவோ சமாதானம் செய்தும்கூட, அவர் அமைதியாகவில்லை.
இது ஏதோ ஒப்புக்கு என்று யாரும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்!
அய்யா மறைந்த பிறகு, ஓராண்டுக்குள் அம்மா ஒரு தனி அறக் கட்டளையையே உருவாக்கி, அதன் முதல் சொத்தாக இந்த மீரான் சாயபு இல்லத்தைத்தான் - சொத்துப் பட்டியலில் இணைத்தார். சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது- உயிருக்குப் போராடியபோதுகூட, இந்த ஏற்பாட்டை மூன்று பெரிய மனிதர்கள் முன்னால் செய்தார்கள்!
என்னை அழைத்து 'நீ கூட என்னிடம் மறைத்து விட்டாயே' என்று கோபித்துக் கொண்டார்!  "அய்யாவின் கட்டுப்பாடு காக்கும் தொண்டன் நான் என்பது உங்களுக்குத் தெரியும்; அப்படி இருக்கையில் அய்யா அவர்கள் "ரகசியம்" என்று சொன்ன செய்தியைக் காப்பாற்ற வேண்டாமா?" என்று சொன்னேன். "சரியான தலைவர், சரியான தொண்டர்கள்" என்று தலையில் தட்டி விட்டுச் சொன்னார்!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(குறள் - 350)
"எனக்கு எந்தப் பற்றும் கிடையாது; மனிதப் பற்று - அறிவுப் பற்று மட்டுமே உண்டு என்ற தந்தை பெரியாரைப் பற்றினார்; போற்றிப் பாதுகாத்தவரின்  "பற்றுக்கோடு" எப்படிப் பட்டது பார்த்தீர்களா? எப்படி எங்கள் அன்னை! எங்கள் அன்னை!!
-விடுதலை நாளேடு, 14.5.19

புதன், 1 மே, 2019

இதோ ஒரு பயனுறு நல வாழ்வு அறிவுரை!

உலகப் புத்தக நாளில் உங்களுக்கு ஒரு அரிய புத்தகத்தை  - வாழ்வைப் பாதுகாக்கும் பயனுள்ள மருத்துவ அறிஞர் தரும் நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்தும் மறையாத மாபெரும் மனிதநேய மருத்துவ மாமணி பேராசிரியர்  டாக்டர் செ.நெ. தெய்வ நாயகம் அவர்கள் எழுதிய "ஊட்ட மளிக்கும் உன்னத உணவுகள்" என்ற ஒரு குறுகத்தரித்த குறள் போன்ற நவில்தரும் நூலைப் பற்றிய சில செய்திகள்.
122 பக்கங்கள் கொண்ட நூலை "பாவைப் பப்ளிகேஷன்ஸ்" வெளியிட்டுள்ளனர். 15 பகுதிகள்:
1). உன்னத உணவு, 2). உணவின் அடிப்படை மற்றும் அடித்தளம், 3) சித்த மருத்துவ உணவியல் கொள்கை, 4) ஏழு உடற்கட்டுக்களுக்கான உணவுகள், 5) உடலுக்கேற்ற உணவுகள், 6) காலத்திற்கேற்ற உணவு 7) நோய்க்கேற்ற உணவு, 8) நலவாழ்வும் உணவும், 9) ஊட்டச்சத்து மருத்துவம் நவீன மருத்துவப் பார்வை, 10) கோடைக்கேற்ற சிறப்புடைய குளிர்ச்சியூட்டும் பருகு உணவுகள் (பானங்கள்), 11) தேன், 12) சமையல் கலன்களின் பயன்பாடுகள், 13) வீட்டுக்குள் கல்பாக்கமா?, 14) அரிசி என்னும் அவிழ்தரு, 15) சில உன்னத  உணவுகள்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்த தமிழ்ப் பேரறிஞரும், முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான தமிழ்த்திரு. அவ்வை நட ராசனார் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல,
"ஊதியத்தைப் பெரிதாகக் கருதாமல், உழைப் பையும், ஒழுக்கத்தையும்  அணிகலனாகக் கொண்டு வாழும் உயரிய மருத்துவ மாமணி என்று மருத்துவப் பேரறிஞர் பேராசிரியர் செ.ந. தெய்வநாயகம் அவர்களை மருத்துவ உலகமே கொண்டாடுகிறது" என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
டாக்டர் தெய்வநாயகம் அவர் களின் தொண்டறம் வியந்து போற்றத்தக்கது. அவர் லண்டனில் படித்துப் பட்டம் பெற்று, தந்தை பெரியாரைக் கண்டு (சென்னை பொது மருத்துவமனையில் அய்யா  அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற காலை) வணக்கம் செலுத்தி, இன உணர்வாளர் சுயமரியாதை வீரர் செ.தே. நாயகம் அவர்கள் வழிவந்த பேரன் என்பதை  தந்தை பெரியார்அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இளைஞர் - மருத்துவரை அன்று பாராட்டி வாழ்த்தினார். அருகில் இருந்து அக்காட்சியை - இன்பத்தை நேரில் அனுப வித்தவர்கள் நாங்கள்.
தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தேய்வு நோயால் (எயிட்ஸ்) அவதிப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மட்டு மின்றி உணவில் கூடுதல் இட்லி, பருப்பு, பால் முதலிய சத்துணவு களையும் அளிக்கும் நடைமுறை இவரது தலைமைக் காலத்தில் செயலுக்கு வர, தமிழக அரசினை வற்புறுத்தி வெற்றி கண்ட மனிதநேயரின் நூல் - இந்த கருத்துக் கருவூலம்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்குத் தேவைப்படும் உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் விளக்குவதோடு, நீரிழிவு நோய், காசநோய், புற்று நோய் மற்றும் கடுமையான நோய்களால் (இரத்தக் கொதிப்பு, மூல நோய் முதலியன) பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, எத்தகைய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறது! குழந்தைகள் பெற்ற தாய்மார் களுக்கும், குழந்தைகளுக்கும் தேவைப்படும் சிறப்பு  உணவுகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது!
ஆங்கில மருத்துவ நுணுக்கத்தோடு, சித்த மருத்துவத்தின் சிறப்புக்களையும் உடன் இணைத்து, ஆராயும் நெறியில் தலைப்பட்டு, சில முடிவுகளைக் கண்டறிந்தவர் மருத்துவர் தெய்வநாயகம் அவர்கள்!
"அரிசி எனும் அவிழ்தரு" என்ற தலைப்பில்... ஒரு செய்தி! நூலாசிரியர் மருத்துவர் கூறுகிறார்.
"கலாச்சாரக் கலப்படம், வியர்வை இல்லா உடலுழைப்பு, பெருகி வரும் மனப்பளு, இவற்றால் பெருகி விட்ட நீரிழிவு போன்ற நோய்களால், அதி சர்க்கரை உணவு என அரிசி கருதப்படுவதால் மருத்து வர்களும் அதைக் கொஞ்சம் உணவில் குறைக்கச் சொல்ல, சிலர் அரிசி உடல் நலத்திற்காகதென்றே விலக்கிட ஆரம்பித்தனர். உண்மையில் அரிசி தமிழனுக்கேற்ற தலை சிறந்த உணவு. வெயில் காலம் அதிகமுடைய, உடற் சூட்டை தரக்கூடிய இத்தென் னாட்டிற்கு அரிசியே ஏற்புடைய உணவு!
இப்படிப்பல புதிய, புதுமை விளக்கங்கள் படித்துப் பயன் பெறுக! நூலைப் படியுங்கள்! காலை, மாலை கடும் பகல் எல்லா நேரத்திலும் படிக்கா விட்டாலும் இரவிலாவது படுக்குமுன் நல்ல நூல்களைப் படியுங்கள் - சிந்தியுங்கள் - செயலாற்றுங்கள்!
- விடுதலை நாளேடு, 23.4.19