புற்றுநோய் ஆபத்தான உயிர்க்கொல்லி நோய்; அதைத் தடுக்க எவ்வளவோ ஆராய்ச்சிகள் உலகின் வளர்ந்த நாடுகளில் நடைபெற்று வருகின்ற நிலையிலும், அதற்கான தனி தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
என்றாலும் நேற்று (14.9.2018) ஒரு நாளேட்டில் வந்துள்ள ஓர் செய்தி - இந்தியாவில் முதல் உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் முதன்மை பெறாத நோயாக எண்ணிக்கையில் இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
மாரடைப்பும் (Heart Attack), சர்க்கரை நோய்க் காரணமாக ஏற்படும் மரணங்களுமே இதற்கு முன் வரிசையில் நிற்கின்றவாம்!
கடந்த 1990 முதல் 2016 வரையில் 26 ஆண்டுகளில் சுமார் 100 அமைப்புகள் - இந்தியாவில் உள்ளவை ஒன்று திரண்டு, வயது முதுமை காரணமாக மரணம் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வினை நடத்தி சில அரிய தகவல்களைத் தந்துள்ளனர்.
வயது முதுமை நிலையில், இந்த புற்று நோய்த் தாக்கம் என்பது கூடினாலும்கூட, அதற்குரிய தக்க மருத்துவத்தின் மூலம் புற்று நோயாளிகளின் வாழ்வு கூடுகிறது என்பது ஒரு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியாகும். 'தி லேன்செட்' (The Lancet) என்ற ஏட்டில் வெளி வந்துள்ள பல புள்ளி விவரங்கள் இதோ:
இரண்டாவது பெரிய உயிர்க்கொல்லியான இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல உறுப்புகளின் புற்று நோயவர்கள் ஆகும். கருவாய் புற்றுநோய் - பெண்களின் பிறப்புறுப்பு புற்று நோய் (Cervical Cancer) பாதிப்பவர்கள் எண்ணிக்கையில் அவர்களது சுகாதாரப் பாதுகாப்புக் கண்காணிப்பு மூலம் குறைந்து வருகிறதாம்! இவ்வகை பல நோயாளிகளான பெண்கள் மருத்துவர்களிடம் கொண்டு வந்து காட்டுவதே, அந்நோய் முற்றிய நிலையில் மூன்றாவது, நான்காவது கட்டத்தில்தான் எனும் அவலம் உள்ளது என்பதால்; மற்றபடி உரிய காலத்தில் வந்து சிகிச்சை தொடங்கி விட்டால் 80 விழுக்காட்டினர் ஆபத்திலிருந்து நீங்கிய வர்களாகி விடுகிறார்கள்.
பல்வகையான உடலின் உறுப்புகளில் புற்றுநோய் தாக்குகிறது; தாக்கப்படுவது எந்த உறுப்புகளில், எந்த அளவு விழுக்காடு என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள் ஆய்வாளர்களான மருத்துவ வல்லுநர்கள் - 2016ஆம் ஆண்டு 'சர்வே'படி
1) வயிற்றுப் புற்றுநோய் - 9.1 சதவிகிதம்
2) மார்பகப் புற்றுநோய் - 8.2 சதவிகிதம்
3) நுரையீரல் புற்றுநோய் - 7.5 சதவிகிதம்
4) உதடுவாய்ப் புற்றுநோய் - 7.2 சதவிகிதம்
5) தொண்டை, மூக்குப் பகுதி புற்று நோய் - 6.8 சதவிகிதம்
6) கொலோன் - இரைப்பை, மற்றும் ஆசனவாய் புற்று நோய் - 5.8 சதவிகிதம்
7) ரத்தப் புற்றுநோய் - 5.2 சதவிகிதம்
8) கருவாய்ப் புற்றுநோய் - 5.2 சதவிகிதம்
கடந்த 26 ஆண்டு காலத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்த ஒரு அரிய தகவல் மார்பகப் புற்றுநோய் - மகளிரிடம் ஒவ்வொரு மாநிலத்தில் 39.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கருவாய் (பெண் பிறப்புறுப்பு) புற்றுநோய் 39.7 சதவிகிதம் குறைந்துள்ளது.
இதற்குரிய முக்கிய காரணங்கள் மருத்துவ ஆய்வின் அறிக்கை கூறும் தகவல் உடல் பெருத்தல், வயது தாண்டி கருவுற்ற பிள்ளைப் பேறு, சுற்றுச்சூழல் முதலியவை மார்பகப் புற்றுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
புகையிலை எந்த ரூபத்தில் உடலுள் சென்றாலும் மிகவும் ஆபத்தான புற்றுநோய்க்கான விதையாகும்!
இவைபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாடு தழுவிய இயக்கமாகவே நடத்திட நல அமைப்புகள் முன் வருதல் அவசியம் - அவசரம்!
புற்றுநோய் பற்றிய தடுப்பு விழிப்புணர்வுக்கான பெரியார் மய்யம் சென்னையிலும், திருச்சியிலும் இயங்கி வருகிறது. அதனை ஊக்கப்படுத்தி ஈத்துவக்கும் நல்லமனம் கொண்ட, நடுத்தரக் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய மேற்பொறியாளரும், சிறுவயது முதலே மானமிகு பெரியார் பற்றாளரான திரு. வாசுதேவன் (வயது 86) (இவர் செய்யாறு அருகில் உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்), அவரது வாழ் விணையர் மறைந்த பத்மினியின் நினைவாக 10 லட்சம் ரூபாய் நமது பெரியார் அறக்கட்டளைக்கு அளித்து மகிழ்ந் துள்ளார்கள்!
எத்தகைய பெரு உள்ளம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?
இப்படிப் பற்பல நற்பணிகள் அதிக விளம்பரங்கள் இல்லாமல் அடக்கமாக நடந்தேறி வருகின்றன!
அருமை நண்பர் மானமிகு வாசுதேவன் போன்ற வரால் இந்த உலகம் உயர்ந்தோர் மாட்டுமட்டுமல்ல; நற்பணிகளைத் தூண்டல் என்ற தொண்டறம் தொடர வாய்ப்பேற்படுகிறது! வாழ்க - வளர்க!
- விடுதலை நாளேடு, 15.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக