பக்கங்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அமெரிக்காவில் இதோ, ஒரு மாமனிதர்! (2)


அண்மையில் காலமான அமெரிக்காவின் மாமனிதர்களில் ஒருவரான ஜான்மெக்கெயின் பற்றிய பல்வேறு தகவல்கள் மிகவும் சுவையானவை.
அவர் எழுதியுள்ள "ஓய்வற்ற அலைகள்" என்ற நூலைப் படிக்கும்போது அவரது, மேலான சிந்தனைகளும், செயல்பாடுகளும் மிளிருகின்றன.
இவர் அமெரிக்கக் கப்பற்படையில் சேர்ந்து பணி யாற்றியவர்; இவரது தந்தையாரும், அவரைப் பெற்ற இவரது தாத்தாவும்கூட அதே துறைகளில் பணியாற்றி முத்திரை பதித்தவர்கள்.
இவரது தாத்தா - கப்பற்படையில் மிகப் பெரிய சேவை புரிந்து, வீட்டிற்குத்  திரும்புகிறார்; இவரது பாட்டி தனது வாழ்விணையரை வரவேற்க வீட்டில் நண்பர்களை  அழைத்துப் பெரியதொரு வரவேற்பினை அளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு காத்திருக்கிறார். தாத்தா மாரடைப்பினால், வந்த அடுத்த நாள், விருந்துக்கு முன்னர் மரணமடைந்த செய்திதான் போய்ச் சேருகிறது அவர்களுக்கு! 61 வயதுதான் அவருக்கு அப்போது! அவரது மகன்  - ஜான்மெக்கெ யினின் தந்தை - ஆற்ற முடியாத துயரம். அதனைத் தாங்கி எளிதில் வெளியே  வர முடியாத அவ்வளவு சோகம் கப்பிக் கொண்ட நிலையில், இவரது தந்தை இவரிடம், அவர் தந்தை சொன்ன அரிய கருத்துரைகளை நினைவூட்டிப் பேசுகிறார். "மகனே, மரணத்தைவிட மிகப் பெரிய செயல் உலகத்தில் ஏதும் இல்லை - எப்போது? நீ நம்பும் கொள்கைக்காகவும், நாட்டிற் காகவும் நீ மரணமடையும்போது, அதைவிடப் பெரியது வேறு எதுவமில்லை"
தன்னுடைய நூல் குவிக்கப்பட்ட நினைவுகளின் தொகுப்பாகவே இருக்கும் என்கிறார் ஜான்மெக்கெயின்.
இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்காவின் 'பேர்ல் ஹார்பர்' (Pearl Harbour) துறைமுகத்தில் ஜப்பானியர்களின் எதிர்பாராத தாக்குதல், அமெரிக்கா விற்கு மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதன் நினைவு நிகழ்ச்சியின்போது அந்நாளை, அப்போரில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற (War Veterans) இராணுவ வீரர்கள்,  தளபதிகளைக் கொண்டு அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் H.W. புஷ் அவர்களைக் கொண்டு நடத்திடும் அந்நிகழ்ச்சியில், முன்னணி வீரர்களாக இருந்த போரில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களை அழைத்துப் பாராட்டி, பல்வேறு மலரும் நினைவுகளையெல்லாம் பரிமாறி மகிழ்ந்திடும் நிகழ்ச்சியாகிய அதன மிக அருமையாக வர்ணிக்கிறார்!
வியட்நாமுடன் அமெரிக்கா நடத்திய போரில் ஜான்மெக்கெயின் 5 ஆண்டு வியட்நாம் சிறையிலும் இருந்து பிறகு விடுதலையாகி வந்தவர் ஆவர். POW (Prisoner of War) என்ற முகாமில் இவர் ஆற்றிய பணி அளப்பரியது. நீண்ட நாள் செனட்டரான இவர் டெட்கென்னடிக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவர்!
அமெரிக்க செனட் உறுப்பினராக இருந்தவர்களில் இவர் ஒருவர்தான் ஒரு தனித்துவம் நிறைந்த அருமையான யோசனைகளைக் கூறிய மேதையாவார்!
மசோதாக்களை அவைகளில் கொண்டு வரு முன்னரே, எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துப் பரிமாற்றங்கள் விவாதங்கள் மூலம் நடத்தி, எவற்றில் சமரசமாகப் போய் - விட்டுக் கொடுத்து, 'சுமுகமாக அவை சட்டங்களாக நிறைவேறிட வழிவகை செய்வது ஜனநாயகத்தின் மாண்புகளை மேலும் உயர்த்துவ தாகவே அமையக்கூடும்' என்ற அரிய யோசனையைக் கூறி, தனித்தே உயர்ந்து நின்றவர் இவர்!
அவர் இதற்காக ஒரு அழகான உவமையைச் சொன்னார்.
"எப்படி ஒரு மருத்துவர் - அறுவைச் சிகிச்சையை நடத்துமுன் நோய் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, பிறகே அறுவை சிகிச்சை தேவை என்று முடிவெடுத்து இறங்குகிறாரோ அதுபோல அவைகளின் நடவடிக்கை - சட்டங்கள் இயற்றுதலும் இருப்பது மிகவும் அவசியம்" என்று கூறினார்.
யதார்த்த நடைமுறைகளில் மனிதகுலம் பகுத்து பார்க்கப்படுவது மதம், இனம் (Tribe), மனிதர்கள் குழு, லட்சியங்கள் இவைகளால்தான் தனித்தன்மையுடன் இயங்குகின்றன" என்று கூறினார்.
நூலைப் படியுங்கள். பாழும் புற்றுநோய் இவரைப் பறித்தது! அவர் மரணத்தை எதிர்கொண்டே உழைத் தார் -  மாமனிதர் மக்கள் நெஞ்சில் நிறைந்தார்!
(நாளையும் தொடரும்)
- விடுதலை நாளேடு, 4.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக