ஜப்பான் நாடு 'உதய சூரியன் நாடு' என்று அழைக்கப்படும் நாடு.
அங்கே உள்ள மக்கள் தொகையில் 65 வயதானவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு!
மகிழ்ச்சியுடன் வாழும் முதியவர்கள் பலரும் உண்டு. அங்கே 122 வயது வாழும் மூதாட்டியும் உள்ளார்!
105 வயதான டாக்டர் ஷிகியாக்கி இனோஹாராஇதுவரை 150க்கு மேற்பட்ட புத்தகங்களை - "வாழும் கலை", "நீண்ட காலம் வாழ்வது", "நலமுடன் வாழ்வதெப்படி" என்பது போன்ற பல நூல்கள் அதில் அடங்கும்.
இவர் 'முதியவர்களின் புதிய இயக்கம்' என்ற ஒரு தனி இயக்கத்தின் நிறுவனர் ஆவார்!
உடல் நலத்துடனும் பலம் குன்றாமலும் இந்த 105 வயதிலும் உள்ள டாக்டர் இனோஹாரா அவர்கள் முதுமையைக் கண்டு அஞ்சாமல், அந்த முதுமையை வரவேற்று மகிழ்ச்சியுடன் வாழுவதற்குரிய 14 வழிமுறைகளை அவர் அறிவுரைக் கொத்தாக - பூங்கொத்து கொடுத்து மகிழ்விப்பது போல் மகிழ வைத்துள்ளார்! இதோ அந்த கருத்து முத்துக்கள்;
1) வியர்வையை வரவழைத்து - உடல் பலத்துடன் வாழுங்கள் முதுமையிலும் வியர்வை வெளியே வரும் வகையில் நமது உடல் நகர்ந்து கொண்டே - ஏதோ ஒன்றைச் செய்துகொண்டே இருங்கள்! மாடிப் படிகளில் ஏறி இறங்குங்கள்; உங்கள் உடமைகளை - பை போன்றவற்றைக்கூட - புத்தகங்களைக் கூட நீங்கள் பிறரிடம் தராமல் தூக்கிச் சென்று உடல் பலத்தை நாளும் இழக்காமல் கூட்டுங்கள். எஸ்கலேட்டர் - மின் படிகளில் ஏறுவதைவிட, படிகளில் நடந்து சென்றால் உங்களுக்குத் தேவையான வியர்வைத் துளிகள் உங்களுக்குப் பிறகு மகிழ்ச்சித் துளிகளாக மாறுவது நிச்சயம்!
2. உங்கள் டாக்டர் கூறுவதை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளாதீர்கள். (அவரே ஒரு டாக்டராக இருந்தும் இப்படிக் கூற, அவர் தயங்கவில்லை!) உங்கள் டாக்டர் கூறும் எல்லாமே உங்களுக்கு ஏற்புடைத்தாக வேண்டும் என்பது உண்மை அல்ல. நீங்கள் உடல் நலவாழ்வு பற்றியும், நலம் பேணுவதுபற்றியும் உள்ள பல நூல்களைப் படியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதற்கே முன்னுரிமை கொடுத்து அதனைப் புரிந்துசெயல்படுங்கள்.
உடல் அமைப்பு அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை - அறிவிப்புகளாக வெளியிடுவதை உன்னிப்பாக கவனித்து அதன்படி என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துங்கள். உடல் கூறுவதே முக்கியம்; டாக்டர் கூற்று அதற்குப் பிறகே! நமக்கு முதல் டாக்டர் நம் உடலே மறவாதீர்!
3. உங்கள் அறிவை, திரட்டும் தகவல்களை, அறியும் உண்மைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்!
இந்த 105 வயதான டாக்டர் இனோஹாரா - ஜப்பான் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து - 100 சொற்பொழிவு களுக்கு மேல் நிகழ்த்தி வருகிறார்! வியப்பாக இல்லையா?
அதுவும் நின்று கொண்டே பேசுகிறார்!
இவரது சொற்பொழிவுகளின் மய்யக் கருத்து வாணிபத்தில் வெற்றி பெறும் மக்கள் பற்றியும், போரும் - அமைதியும் எப்படிப்பட்டவை, மற்றும் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்கள் - இவைகளே!
4. எளிதில் ஓய்வு (Retire) பெற்று விடாதீர்கள்.
உங்கள் உடலில் ஏதாவது ஓய்வோ, மனதில் ஏதும் ஊனமோ, மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக வேலைகளில் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் ஒழிய எளிதில் ஓய்வு என்ற ரிடையர்மெண்ட் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள். தன்னைப்போல ஒரு நாளில் 18 மணி நேரம்கூட - இந்த வயது முதுமை யிலும் உழைப்பதற்குத் தயங்கவே தயங்காதீர்கள்!
5. முன்கூட்டியே திட்டமிட்டு வாழுங்கள். திட்டமிடாமல் மனம் போனபோக்கில் நடந்தால் நமக்குத் தோல்வியும், வீழ்ச்சியும் தான் ஏற்படும்.
ஒரு நாளுக்கு முன்பே அடுத்த நாள் என்ன வேலைத் திட்டம், எப்படி அதை செலவிடுவது என்பதை நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழுங்கள்; இன்றேல் உங்களது வாழ்வு கெட்டுப் போனதாக ஆகிவிடக் கூடும்.
இவரின் (டாக்டர் இனோஹாரா அவர்களின்) முன்கூட்டியே திட்டமிட்டு வாழும் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
2020 ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இவர் தனக்கென ஒரு வாய்ப்பையும், இடத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டுகோள் விடுத்து இடத்தையும் பெற்றிருப்பதுதான்!
(நாளையும் தொடரும்)
- விடுதலை நாளேடு, 20.9.18
6. உங்கள் எடையை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்க!
அதிக கூடுதல் எடையும், ஊளைச்சதையும் நமது உடலில் இரத்த அழுத்தத்தையும் (B.P), அதன் விளைவாக பக்கவாதத்தையும் (Stroke) உருவாக்கக் கூடும். (எனவே இந்த நோய்களிலிருந்து தப்பிடுவதற்கு சரியான வழி எடை நம் உடலுக்கும், உயரத்திற்கும் (BMI Body Mass Index) ஏற்றபடி உள்ள எடையை அவ்வப் போது விடாமல் கண்காணித்து வருவது மிகவும் அவசியமாகும்).
சரியான எடையை எப்போதும் சீராக வைத்திருப்ப தற்காக டாக்டர் இனோஹாரா அவர்கள் உணவுப் பழக்கத்தை ஒழுங்காக்கிக் கொள்வதில் அதிக கவனஞ் செலுத்துகிறார்.
ஒரு குவளை ஆரஞ்சு பழச்சாறு, காஃபி, ஆலிவ் எண்ணெய் என்பவை இவரது காலை உணவு (Breakfast) ;
குக்கீஸ் எனப்படும் ரொட்டித்துண்டு வகையறாவும், ஒரு குவளை பாலும் தான் இவரது மதிய உணவு (Lunch);
ஒரு குவளை சோறு, காய்கறிகள், மீன் - இவை தான் இவரது இரவு உணவு (Dinner);
கூடுமான வரை இவர் மெல்லிய இறைச்சியை 100 கிராம் வாரத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்கிறார்!
(அவரைப் பொறுத்தும், அந்நாட்டு உணவுப் பழக்க முறைகளையும், வயதையும் பொருத்து அது சரி; ஆனால் நம் நாட்டில் நீங்கள் மருத்துவ, ஊட்டச்சத்து உணவு வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனை கருத்துப் படியும், உங்கள் உடல் ஏற்கும் வகையான உணவுகளைத் தேர்வு செய்து உண்ணுவதே உசிதம்).
7. உண்மையான உடலுக்கான சக்தி (Energy) என்பது 'நாம் நன்றாக இருக்கிறோம்' என்ற மகிழ்வுடன் கூடிய உணர்விலிருந்தே பிறக்கிறது.
இது உணவிலிருந்து உண்மையில் வருவதைவிட நம் மகிழ்ச்சியான உணர்விலிருந்தே ஊற்றெடுக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் இனோஹாரா அவர்கள்!
அதேபோல தூக்கமும்கூட இந்த உணர்வுக்கு மூல காரணமாக அமைவதில்லை என்கிறார் இந்த டாக்டர். நமது மன உற்சாகம்தான் அடிப்படை.
இதுபோன்ற ஆக்க ரீதியான சக்தியை முதுமை யடைந்தவர்கள் பெறுவதற்குரிய ஒரே வழி - குழந்தைகளைப் போல நாம் நடந்து கொண்டு, எந்த வித கட்டுப்பாட்டிற்கும், விதிமுறைகளுக்குட்பட்டும் நடக்காமல், தாராளமான விளையாட்டு பிள்ளைகளைப் போல அன்றாடம் நடப்பதே உற்சாகத்தை, சக்தியை நமக்கு அள்ளித் தருவதாக அமையக் கூடும்.
8. முதுமை என்பதைக் கண்டு பயப்படாதீர்கள்;
அதைப் பெருமையுடன் ஏற்று, சகஜமாகப் பழக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர் களே, வயது கூடி விட்டதே என்று கலங்காதீர்கள் - அஞ்சாதீர்கள். முதுமைக்கு வரவேற்புக் கூறி மகிழ்ச்சியுடன் அதனை எதிர் கொள்ளுங்கள்!
டாக்டர் இனோஹாரா தனக்கு முதுமை வந்து விட்டதே என்று சிறிதும் கவலைப்படவே இல்லை. (அது இயல்பான ஒன்று வாழ்வில் என்று புரிந்து கொண் டால் இப்படி கவலைப்படுவது முட்டாள்தனம் அல்லது அறியாமை என்பது எவருக்கும் புரியுமே)
இவருக்கு வயது முதிர்ந்த நிலை ஏற்பட்ட பிறகும் கூட, ஒரு நாளில் 18 மணி நேரம் ஊக்கத்துடன், மகிழ்ச் சியுடன் இவர் வாழ்ந்து தான் வாழும் சமுதாயத்திற்கான தொண்டறப் பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்!
நாளும் 18 மணி நேர உழைப்பு!
அதுவும் ஏழு நாட்களும் (விடுமுறைக்கு விடுமுறை கொடுத்துவிட்ட மாமனிதர் இவர்)
இவ்வளவு 'சுறுசுறுப்புத் தேனீயாக' உழைத்து வாழும் இவர் தனது ஒவ்வொரு கணத்தையும் பயனுறும் வழியில் அனுபவித்து வருகிறாரே!
9. நீங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டானவர் 'Role Model' - ரோல் மாடலைத் தேர்வு செய்து, அவரைப்போல முடிந்த அளவு நடந்து மகிழுங்கள்.
உழைப்பால் நமது கலைஞருக்கு ரோல் மாடல் தந்தை பெரியார் என்பதை ஈரோட்டு குருகுல வாசத்திலேயே புரிந்து, பின்பற்றத் தொடங்கி விட்டதால் - 94 வயது வரை உழைப்புத் தேனீயாக வாழ்ந்து வரலாறு படைத்து விட்டார் அல்லவா!
தனக்குச் சோதனை ஏற்படும் போதெல்லாம் இந்த டாக்டர் - தனது தந்தையாரை எடுத்துக்காட்டானவராகக் கொண்டவர் ஆனபடியால் - இந்த நேரத்தில் தனது தந்தை இந்த சோதனையை எப்படி எதிர் கொண்டி ருப்பார் என்று சிந்தித்து செயல்பட்டு, அதன் மூலம் அந்தச் சோதனையை தனது சாதனையாக மாற்றிடுவார் என்று கூறுகிறார்.
(என்னைப் பொருத்தவரை எனக்கு நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 'இத்தகைய சோத னையை எப்படி எதிர்கொண்டு, தீர்வு கண்டிருப்பார்' என்ற பெரியார் தந்த புத்தியையே பயன்படுத்தி அதிலிருந்து மீண்டும் வருவதும் எனது நடைமுறை; அது வெற்றியே தந்துள்ளது என்பதை மிகுந்த அடக்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்)
10. எதற்கும் அதிகமாகக் கவலைப்பட்டு அலுத்துக் கொண்டு மனச்சோர்வடையாதீர்!
வாழ்க்கை என்பது எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பேயாகும்!
எது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக எதிர்பாராமல் ஏற்படும் போது - அதுபற்றி அதிகமாக கவலைப்பட்டு நாம் நம் சக்தியை - புத்தியை ஏன் வீணடித்துக் கொள்ள வேண்டும்? இது புத்திசாலித்தனம் அல்லவே!
டாக்டர் இனோஹாரா கூறுகிறார்:
சின்ன சின்ன அற்ப விஷயங்களுக்கெல்லாம் மனக் கவலை கொண்டு உழற்றிக் கொள்வது, தேவையற்ற ஒன்று மட்டுமல்ல; மன அழுத்தத்தையும் அது வெகுவாக உண்டாக்கி நமக்குத் தொல்லை தருவதாக அமையுமே! உடல் நலமும் மிக பாதிக்கப்படும்!
சில நிகழ்வுகள் நடப்பதைக் கண்டு நாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அமைதியுடன் அதை அலட் சியம் செய்தோ அல்லது நிதானமாக யோசித்தாலோ தீர்வு தானே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனோ வாழுதலே சிறந்தது என்கிறார் டாக்டர் இனோஹாரா.
(நாளையும் தொடரும்
- விடுதலை நாளேடு,21.9.18
11. விஞ்ஞானம் மட்டுமே மக்களுக்கு முழுத் தீர்வு கொடுத்து விடாது! என்கிறார் டாக்டர் இனோஹாரா
நமது பார்வையும் பலவற்றை நோக்கி - பல்வேறு கலைகளை அனுபவித்து, இன்பு றுவது நம்மை ஆரோக் கியமாக வைத்துக் கொள் வதற்கு உதவக் கூடும். (ஓவியம், கவிபுனைதல், இலக்கிய ரசனைகள் (Liberal Arts) போன்ற பலவற்றிலும்கூட ஈடு பட்டு முதுமையில் நாம் காலம் கழித்தால் அது மகிழ்ச்சியைத் தரும் என்ற பொருளை உள்ளடக்கமாகக் கொண்டே இந்த டாக்டர் இப்படி கூறுவதாகவே நமது விளக்கம் அமைதல் நல்லது. விஞ்ஞான விரோதக் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை).
12. பணமே வாழ்க்கையின் எல்லாமும் என்று ஆகிவிடாது - எப்போதும்!
பணம் சேர்ப்பதென்றே வாழும் பலருக்கு பணமே எல்லா முமாக இருப்பது மிகவும் கேடான மனப் பான்மையாகும்!
இந்த புத்திசாலி டாக்டர் கேட்கிறார் 'நான் என்ன எனது கல்லறைக்கு பணத்தையா என்னுடன் கொண்டு போகப் போகிறேன்' என்று. எனவே, எதற்கு வாழ்க்கையில் முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முன்னுரிமை தரும் வாழ்வே முழு வாழ்வாகும். எந்த நேரமும் பணத்தையே நினைத்து வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழவே முடியாது!
(எப்போதும் பணம் நமது "வேலைக்காரனாக" இருப்பது முக்கியம்; அதை நம்மீது ஆதிக்கம் செலுத்தும் "எஜமானனாக்க" அனுமதியாதீர்; அனுமதித்தால் நாம் பண நோயாளிகளாகி, பிறகு மன நோயாளி யாகி மரித்து விடும் நிலைதான் ஏற்படக் கூடும்)
13. வாழ்க்கை என்பதே விசித்திரமான புதிராகவும், வலியைப் போல எப்போது, எப்படி வரும் என்று கூற முடியாதவாறு அமைவதே உண்மை என்கிறார் டாக்டர் இனோஹாரா அவர்கள்!
இந்த அனுபவக் களஞ்சியமான டாக்டர் கூறுகிறார்; "வலி என்பது வாழ்க்கையின் விசித்திர புதிர்களில் ஒன்று! மிகப் பெரிய எதிர்பாராத ஒன்று. அது எப்போது நமக்கு எப்படி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கூறிட முடியாது; எதிர்பார்க்கவும் முடியாது.
இந்த வலி, மனவலி, உடல் வலி போன்ற வலிகளை நாம் சிகிச்சைக்கு உட்படுத்தி குணப்படுத்தவும் முடியும்!
வலியுடன் அவதியுறுவோர் பக்கத்தில் அமர்ந்து இதமாகப் பேசுவது, யார்மீது அவர்கள் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளார்களோ, பாசம் காட்டிடும் அவர்கள் கூறும் ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நிச்சயம் போக்கும்; அல்லது குறைக்கும்; தனது செல்லப் பிராணிகளுடன் கொஞ்சுதல்; அது போலவே இசையைக் கேட்டு மகிழ்தல் இவைகளும் கூட வலியைப் போக்கும் மாமருந்துகளாகும்!"
14. எப்போதும் உற்சாகத்துடன் இருக்கப் பழகுங்கள்!
நமது இதயத்தின் நெருப்பின் கனல்வீச்சு எப்போதும் குறையாமல் இருக்க, நாம் உற்சாகமான உளப் போக்குடன் இருப்புது மிகவும் அவசியமாகும்! உள்ளு வதெல்லாம் உயர்வுள்ளல்; திட்டமிடுதல்; நல்ல கவிதை களைப் படித்துச் சுவைத்து மகிழ்தல்; மற்றவர்களின் கனிந்த அனுபவங்களை அவர்கள் சொல்ல, எழுத நாம் கேட்டும் - படித்தும் பயன் பெறுதல் நமது ஊக்கத்தையும் பெருக்கும்.
பழைய பழமொழி ஒன்று உண்டு. 'எதையும் முயற்சிப்பதில் தவறேதும் இல்லை' என்பதே அது!
எனவே, மேலே கூறிய 14 அம்சங்களை முயற்சி செய்து பாருங்கள் எனது முதிய நண்பர்களே என்கிறார் டாக்டர் இனோஹாரா. இதுபற்றிய எண்ணங்களையும், விமர்சனங் களையும் எனக்கே எழுதி அனுப்புங்கள் என்று திறந்த மனதோடு எழுதுகிறார் டாக்டர்.
எனவே, முதுமையை இரு கரங்கள் கூப்பி வரவேற்று அனுபவிக்கத் தயராவீர் முதியவர்களே! சலிப்பு, சங்கடம், விரக்தி வேதனை இவைகளுக்கு விடை கொடுத்து வாழ்க்கையை நாளும் இன்ப ஊற்றாக்கி மகிழுங்கள், நண்பர்களே!
(நிறைவு)
- விடுதலை நாளேடு, 22.9.18