பக்கங்கள்

வியாழன், 28 ஜூன், 2018

ஓ மனிதா, மனிதா - பறவை இனத்திடம் பாடம் கற்றுக் கொள் (1)&(2)

நேற்று நான் வழக்கம் போல் வீட்டைச் சுற்றி நடைபயிற்சி செய்து கொண்டிருந்தேன். திடீரென காக்கைக் கூட்டத்தின் ஒரே அலறல் சத்தம். ஒரு நூறு காக்கைகள் சுற்றிச் சுற்றி பறந்து 'காகா காகா' ஓசை எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணம் என்ன? எட்டிப் பார்த்தால் சாலையில்  அடிபட்டோ, அல்லது இயற்கையாகச் செத்தோ ஒரு காக்கையின் உடல் கிடந்தது.

அதைக்கண்டே அந்த காக்கை இனத்தின் ஒப்பாரி ஓசை! எல்லாம் சேர்ந்து அதன் மூலம் தன் சக காக்கை இறப்புக்கு இரங்கற்பா பாடுகின்றனவே!

என்னே ஒற்றுமை உணர்வு, துக்கப் பரிமாற்றம் - அந்த ஜீவன்களிடம்!

ஆறறிவு தனக்குத்தான் உண்டு என்று ஆண வத்தோடு கூறும் ஓ மனிதா, உன்னிடம் இல்லாத ஒற்றுமை உணர்வும், இரக்கமும், சோகமும் அந்தப் பறவைக் கூட்டத்திடம் உள்ளதை நினைத்தாவது உன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

ஈழத் தமிழ்ச் சாதி படுகொலை செய்யப்பட்டு (முள்ளிவாய்க்கால்) இரத்த ஆறு ஓடியபோது இப்படி ஒரு உணர்வு தோன்றி உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டிருந்தால் நம்மினம் மாண்டிருக் குமா? காக்கை மட்டுமா? மணிப் புறாக்கள் - மாடப் புறாக்களிடமிருந்துகூட ஓ மனிதா நீ கற்றுக் கொண்டு உன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

புரட்சிக் கவிஞர் தனது 'அழகின் சிரிப்பு' என்ற நூலில் புறாக் கூட்டம் பற்றி புதுமைக் கருத்தொளி பாய்ச்சுகிறார் தன் கவிதைக் கருவூலத்தில்.



இட்டதோர் தாமரைப்பூ


இதழ்விரிந் திருத்தல் போலே


வட்டமாய்ப் புறாக்கள் கூடி


இரையுண்ணும்! அவற்றின் வாழ்வில்


வெட்டில்லை; குத்துமில்லை;


வேறுவே றிருந்த ருந்தும்


கட்டில்லை; கீழ்மேல் என்னும்


கண்மூடி வழக்க மில்லை


ஒரு பெட்டை தன் ஆண் இன்றி


வேறொன்றுக்குடன் படாதாம்;


ஒரு பெட்டை மத்தாப் பைபோல்


ஒளி புரிந்திட நின்றாலும்


திரும்பியும் பார்ப்ப தில்லை


வேறொரு சேவல்? தம்மில்


ஒரு புறா இறந்திட்டால்தான்


ஒன்று மற்றொன்றை நாடும்!


ஓ மனிதா நீ அதனிடம் கற்றுக்கொள்


என்று சுட்டிக் காட்டி மனிதனின் தலையில் குட்டும் வைக்கிறார் நம் ஒப்பிலா புரட்சிக் கவிஞர்.

அவள்தனி; ஒப்ப வில்லை;


அவன், அவள் வருந்தும் வண்ணம்


தவறிழைக் கின்றான் இந்தத்


தகாச் செயல் தன்மை, அன்பு


தவழ்கின்ற புறாக்கள் தம்மில்


ஒரு சில தறுதலைகள்,


கவலைசேர் மக்க ளின்பால்


கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!


ஓ மனிதா - புரட்சிக் கவிஞர் கவிதையால் சொடுக்குகிறார். ஓ மனிதா நீ கற்றுக் கொள்ளா விட்டாலும்கூட பரவாயில்லை; கட்டுப்பாடான புறாக் கூட்டத்திலும் உன் (மனித) குலத்தைப் போல 'தறுதலை'களையும் உருவாக்கிட காரணமாகலாமா? கேட்கிறார் நம் புரட்சிக் கவிஞர்!

புறாக்கூட்டத்தில் ஜாதி மேல் கீழ் இல்லை 'ஒத்துண்ணல்' (அருமையான சொற்றொடர் - சொல்லாக்கம் கூட) உண்டே!

ஆறறிவு அவலட்சணமே நீயோ ஒருவர் உண்ணுவதை மற்றவர் பார்க் கவே கூடாது என்பது எவ்வகையில் நியாயம் ஆகும்? யோசித்தாயா?

ஓ மனிதா உன் வழிவழிப் பிறப்பு களுக்கு ஏன் ஊரடித்து உலையில் கொட்டுகிறாய்? இறக்கை முளைத்ததும் அது சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்து விடுகிறதே அந்தப் பறவை! ஓ மனிதா இதனையும் கற்றுக் கொள்!

(நாளையும் பறக்கும்)

அடுத்து 'கிளிப்பிள்ளை' - நாம் அன்போடு கூறும் கிளிகள் மூலம் புரட்சிக் கவிஞர் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறார். படித்து ஒழுகுவீர்களா?

சொன்னதைச் சொல்லும்

"இளித்தவா யர்கள் மற்றும்

ஏமாற்றுக் காரர் கூடி

விளைத்திடும் தொல்லை வாழ்வில்,

மேலோடு நடக்க எண்ணி

உளப்பாங்கறிந்து மக்கள்

உரைத்ததை உரைத்த வண்ணம்

கிளத்திடும் கிளியே என்சொல்

கேட்டுப் போ பறந்து வாராய்"

இந்நாட்டு 'ஊடகங்கள்கூட உரைத்ததை உரைத்த வண்ணம் கிளத்துவது - சொல்வது இல்லையே! ஆனால் கிளியோ உரைத்ததை அப்படியே மாற்றாமல், திரிக்காமல் வாய்மையுடன் கூறுகிறதே என்று ஒரு புதுவகை விளக்கம் தருகிறார் நம் புரட்சிக்கவிஞர்!

'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை' என்றுதான் பலரும் இப்பூவுலகில் சலித்துப் போய் பேசுகின்றனர்; ஆனால் புரட்சிக்கவிஞரோ புது விளக்கம்   கூறி, கிளியைப் பார்த்தாவது மனிதா மாற்றிப் பேசாதே; ஏமாற்றாதே; இளித்த வாயர்களே ஏமாறாதீர்! என்று கூறுகிறார்.

"காட்டினில் திரியும் போது

கிரீச்சென்று கழறு கின்றாய்;

கூட்டினில் நாங்கள் பெற்ற

குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!

வீட்டிலே தூத்தம் என்பார்

வெளியிலே பிழைப்புக்காக

ஏட்டிலே 'தண்ணீர்' என்பார்

உன்போல்தான் அவரும் கிள்ளாய்"

இடம் மாற்றிப் பேசும் வித்தை உனக்கு மட்டுமா?

சில இரட்டை வேட - பேசு நா 'இரண்டுடையாய் மனிதர்களுக்கும் உண்டே' என்று ஓங்கி அடித்துக் கூறுகிறார். இல்லை. இல்லை. கொட்டு வைக்கிறார் அவர் தலையில்! நம் கவிஞர்.

அது மட்டுமா?

"பாவலர் எல்லாம் நாளும்

பணத்துக்கும் பெருமைக்கும் போய்க்

காவியம் செய்வார் நாளும்

கண், கைகள் கருத்தும் நோக!

ஓவியப் புலவரெல்லாம்

உன்னைப்போல எழுதி விட்டால்

தேவைக்குப் பணம் கிடைக்கும்

சீர்த்தியும் கிடைக்கும் நன்றே!"

பணத்துக்கும், போலிப்புகழுக்கும் காவியமும், ஓவியமும் தீட்டுகின்றனரே - வாழ்வை வயிற்றைக் காக்க அந்த வஞ்சக மனிதர் உன்னை எழுதி புகழ் பெறுகிறார்களே; புகழ், பெருமை மனிதா நல் வழியில் வர வேண்டுமப்பா என்கிறார் கவிஞர்.

அது மட்டுமா?

கோழி

"கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும்

வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத

தொல்புவியில்...!"

என்பதன் மூலம் தாய்க்கோழியின் போர்க்குணம் வீறு கொண்டெழ வேண்டிய நேரத்தில் எப்படிப் பாயும் என்பதை இந்த வகைகளில் எப்படிக் காட்டுகிறார் பார்த்தீர்களா?

மேலும் காட்டு மிருகங்களையும் புரட்சிக் கவிஞர் விடவில்லை.

"தூங்கும்புலியை பறை கொண் டெழுப்பினோம்

தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்"

என்றார்!

கவிஞர் பாரதிகூட

"காக்கைகுருவி எங்கள் ஜாதி நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

என்று மட்டும் பாடினார். (குயில் அவருக்கு செல்லம்)

ஆனால் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரோ எல்லாப் பறவை இனத்திடமும் பாடம் கற்றுக் கொள்; கோழி யிடமும்கூட கொஞ்சம் தெரிந்து கொள் மனிதா, மனிதா! என்கிறார்.

என்னே சிறப்பு!(பறந்து விட்டன; மீண்டும் எப்போதாவது  இப்பக்கம் வரும்).

-  விடுதலை நாளேடு, 27,28.6.18

வியாழன், 14 ஜூன், 2018

சிங்கப்பூர் பற்றிய ஒரு சிறந்த தேன் கூடு இதோ!

கடந்த 68 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் மூத்த பத்திரிக்கையாளர் - மூத்த எழுத்தாளர் - இலக்கியவாதி - திரை கலைத்துறை விமர்சகர் 80 வயதினைத் தாண்டிய மதிப்பிற்குரிய அய்யா ஏ.பி.ராமன் அவர்கள்.

எல்லாப் பொது நிகழ்ச்சிகளின் அழைப்பை ஏற்று, பார்வையாளராக இருந்து, அது பற்றிய சுருக்கமான செய்தியையும் விருப்பு வெறுப்புக்கு இடந்தராமல் எழுதிடுவார் இணையத்தில்!

இவ்வளவு பரந்த அனுபவமும், சிறந்த ஞானமும் உடைய திரு. ஏ.பி.இராமன் அய்யா அவர்கள் 'சிங்கையில் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் எழுதிய நூலின் பிரதியை சிங்கப்பூர் கவிதா மாறன் மூலம் அனுப்பினார். நன்றியுடன் பெற்றோம்.

படித்தேன் - சுவைத்தேன் - இந்நூல் ஒரு கொம் புத்தேன் என ஆற்றொழுக்கான நடையில், எடுத்தவுடன் கீழே வைக்க இயலாது ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!

இந்நூலுக்கு இவருக்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் ஆவார்கள்.

சிங்கப்பூரின் அறிஞர்கள் திருவாளர்கள் கேசவ பாணி (தலைவர், சிங்கப்பூர் இந்தியர் சங்கம்), ஆர்.இராஜாராம் (தலைவர், சிங்கப்பூர் வளர் தமிழ் இலக்கியம்), அவ்விருவரின் முகவுரைகளும், சிங் கையில் தமிழ் மணம் என்ற தலைப்பில் சிறந்ததோர் பீடிகை உரையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (N.U.S.) - பின் சிம் (SIM) பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், முனைவர் சுப.திண்ணப்பன் அவரின் அரிய கட்டுரையும் இந்நூலுக்கு அணி சேர்த்து ஒளி வீசச் செய்கின்றன.

என்னுரை என்ற தலைப்பில் புத்தக ஆசிரியரின் மிக அருமையான கருத்தோட்டம் பளிச்'சிடுகிறது.

இது ஓர் ஆய்வு நூல் அல்ல. நானும் ஓர் ஆய்வாளன் அல்லன்.

சிறந்த ஆய்வாளர்களின் நூல்கள் பலவற்றைப் படித்த பின் எழுதப்பட்ட நூல் இது.

1950லிருந்து சிங்கப்பூரில் வளர்ந்து வாழும் என் நேரிடை வாழ்வனுபவங்களைப் பின்னிப் பிணைந்த  சம்பவங்களும், அதனை சுற்றிச் சூழும் விவரங் களும் இதன் பொருளடக்கம்.

ஒரு கிராமம் எப்படி உலகம் புகழும் நகரமாகி யது? ஆள் அரவமில்லாத சதுப்புக்காடு உலகத் தொழில்மயபூமியாக ஏன் விளங்குகிறது? இந்தியாவின் தென்கோடித் தமிழரும், அவர்களின் உயிர் மூச்சான தமிழும் சிறப்பாக இங்கே எப்படி விளங்க முடிகிறது? இதை விளக்க முயற்சிப்பது என் நோக்கம்.

இதுதான் ஒருவிதத்தில் என் ஆய்வுப் பொருளும் கூட!

தமிழின் ஊற்றகம் தமிழ் நாடு. அங்கே ஊறிய தமிழ்தான், தமிழன் வாழும் பூமியெல்லாம் பீறிட்டுப் பாய்ந்து ஓடுகிறது. அந்த வற்றாத நீர் ஊற்றிலிருந்து நனைந்து புறப்பட்ட தமிழ் இனம், இன்று தாம் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழைக் கொண்டு போய் சேர்க்கபடாத பாடுபடுகிறது.

சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்த வரலாறு சுவையானது. சீனர், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த மெ ழி தமிழ்! இது, மற்ற பெரும்பான்மையினர் மனமுவந்து நமக்குத் தந்த மிகப் பெரிய சலுகையும்கூட.

இன்று நாம் தமிழைப் போற்றுகிறோம். தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கிறோம். அதிகாரத்துவ மொழியாக விளங்கும் தமிழை, அடுத்த தலை முறையினருக்கும் உரிமையாக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். அதற்கு நமக்கு இன்று முன்னின்று உதவுவது நம் அரசாங்கம்!

- இவ்வாறு சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பாதுகாப்புக்கும் பெரிதும் அரசு துணை நிற்கிறது! தூண்டுகோலாக இருந்து துணை புரிந் துள்ளது.

நவீன சிங்கப்பூரின் தந்தையாக போற்றப்படும் மேனாள் பிரதமர் மதியுரை மந்திரி (Mentor Minister) ஆக நீண்டகாலமிருந்து வழிகாட்டி இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களையும் உற்பத்தி செய்து சிங்கப்பூர் ஒரு உலக மய்யம் எல்லாவற்றிற்கும் என்ற நற்பெயர் ஈட்டியுள்ள சிங்கப்பூர் வளர்ச்சி அபாரமான ஒன்று என்பது உலகம் அறிந்ததோடு, பாராட்டி, அதனைப் பின் பற்றவும் முயலுகின்றன.

லீக் குவான்யூ (Lee Kuan Yew) அவர்கள் 70 விழுக் காட்டிற்கு மேற்பட்டோரின் சீன மொழியையும் தேசிய மொழி - ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று பலரும் யோசனை கூறியதோடு பெரும் அழுத்தத்தையும் தந் தனர். லீக்குவான்யூ அவர்கள் அதற்கு இணங்காமல் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வணக்கம் ஆரம் பித்து ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, வானொலி எல்லாவற்றிலும் 4 மொழிகளில் வணக்கம் கூறிடும் நிலை அங்கே உண்டு.



நாடாளுமன்றத்தில் 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் (Simultaneous Translation) மொழி பெயர்ப்பு வசதிகளைச் செய்து தந்துள்ளனர்.

லீக் குவான்யூ அவர்கள் தான் எழுதிய "இரு மொழிக் கொள்கைகள்" பற்றிய நூலில்,

சீன மொழி பேசுவோர் பெரும்பான்மை என்பதால் அதை ஆட்சி மொழியாக்கிட பலரும் சொன்ன யோசனையை நான் ஏற்கவில்லை; காரணம் பெரும்பான்மை - சிறுபான்மை பிரச் சினை வந்துவிடும்.

ஆங்கிலம் ஆட்சி மொழியானால், அதனால் ஏற்படும் வசதிக்குறைவு, மற்ற அத்தனை மொழி பேசுவோருக்கும் சம ஈவு அளவில் பிரித்துக் கொடுக்கப்படும் வாய்ப்பு உண்டாகுமே என்ற தொலைநோக்குடன் எழுதியுள்ளார்!

தமிழர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதம்தான் என்றாலும், 70 சதவிகித சீனர்களுடன் சமஉரிமை யைப் பெற்று பிரச்சினைக்கு இடமன்றி வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.

சிங்கப்பூர் பற்றி 19 தலைப்புகளில் அரிய தகவல் களஞ்சியமாக, ஆவணமாக பதிவு ஆகி உள்ளது. நவில்தோறும் நூல் நயம் - பயில்தொறும் பண் புடையாளரால் எழுதப்பட்டுள்ளது!

ஆய்வு நூல் அல்ல என்பது ஓரளவு உண்மை தான் - அத்தகுதி இதில் உள்ளது? அதேநேரத்தில் ஒரு "சாய்வு நூலும்" அல்ல?

- விடுதலை நாளேடு, 13.6.18

செவ்வாய், 12 ஜூன், 2018

"கூடி மகிழ்ந்திடு தாத்தா - குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா!"

மனஅழுத்தம், அச்ச உணர்வால்


தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்


புதிய ஆய்வில் தகவல்!




"லண்டன், ஜூன் 11  தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடை கிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடு படுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது? உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன்? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர்கள் "தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது" என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது." ஒரு நாளேட்டின் செய்தி.

மேலே சுட்டிக்காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதைவிட தனிமை இனிமை தராது, கொடுமையான மரணத்தைத்தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.

ஓய்வு பெற்ற முதுகுடி மக்கள், வயதான பெரியவர்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி, அன்றாடம் சந்திப்பது, நடைபயிற்சிக்கு நண்பர்கள் குழுவுடன் செல்வது, அடிக்கடி கலகலப்பாக உரையாடுவது, நகைச்சுவை உணர்வுடன் கூடிய வாழ்வினில் தோய்ந்து வாய்விட்டுச் சிரிப்பது, படித்த நல்ல புத்தகங்கள், பெற்ற திடீர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் - இவைகளை தங்கள் முதுமையில், வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் முதியவர்கள்.

தற்கால நடப்புகளில் ஒன்றாக வாழும் பல  குடும்பங்களில் உள்ள நம் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோகூட, நம்முடன் (வயதானவர் களுடன்) ஆர அமரப் பேசிட வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் பணிச்சுமை, களைப்பு, தங்களது வாழ்விணையர்களுக்குக் காட்டிட வேண்டிய அன்பு, கடமைகள் - இவைகளுக்கு அவர்களுக்கு போதிய நேரம் போதவில்லை என்ற நிலையும் யதார்த்தமே!

எனவே, நாமே நம் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கி, வாழ்வை நல வாழ்வாக நீட்டிட முயல வேண்டும்.  சிறைச்சாலைகளில் கைதி களுக்குக் கடும் தண்டனை விதிக்க தனியே கூட்டாளி இன்றி தனிமைச் சிறையில் (Solitary Confinement) உள்ளே இருக்கும் தண்டனை ஏன் என்பது இப்போது புரிகிறதா?

பொதுவாக மனிதன் ஒரு சமூகக் கூட்டுப் பிராணி என்பதால்தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்று உணர்ந்தான்!

அதுவேறு; அதே நேரத்தில் நல்ல நண்பர்களை முதுமையில் பெறுதல்  -   கலந்துறவாடல், பெரும் வைப்பு நிதி வைத்தலைவிட, மா மருந்துகளால் ஏற்படும் சுகத்தை விட, பன்மடங்கு பயன் தருவது என்பதை உணர்ந்து, தனிமை தேடும் தனித்தவர்களே, -  உங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றி பாசம் உள்ள நட்புறவுடன் வாழ்ந்து மகிழ்ச்சியை அரவணைப்பீர்களாக!

"கூடி மகிழ்ந்திடு தாத்தா

குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா!"

- விடுதலை நாளேடு, 12.6.18