இன்று (29.4.2020) புரட்சிக்கவிஞரின் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள். கரோனா கொடுமையால் மக்கள் கூடி வழமைபோல் - திருவிழாபோல் விழா எடுக்க இயலவில்லை.
காலத்தால் வீழாத, வரலாற்றில் வாழும் சுயமரியாதை இலக்கியத் தென்றலாய், புயலாய், எரிமலையாய் என்றும் நிலைத்திருக்கும் அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நமது நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், சுவைபட ஒரு கவிதை - எப்படி பலரின் அச்சம், கோபம், வெறுப்பு - அதுவும் ஆளுமை நிறைந்த அவை யில் அரங்கேறி வெற்றி வாகை சூடியது என்பதை வர்ணிக்கும் வகையில் எழுதியுள்ள கட்டுரை சுவையானது - மறக்க முடியாதது!
‘கோந்தினியே’, ‘கோந்தினியே’ என்கிறீர்கள்? (அதென்ன திடீரென்று ஆசிரியர் இப்படி ஏதோ புரியாத ஒன்றைச் சொல்கிறார் என்று திகைக்கா தீர்கள்.
மேலே படியுங்கள் - பிறகு எனக்கு ‘மர்சி’, ‘மிசி’ - (‘நன்றி அய்யா!’ சொல்வீர்கள்). (அவ்விரு சொற்களும் பிரெஞ்சு மொழி).
நாவலர் 1946 இல் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதோ:
‘‘புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் களங்கமற்ற குழந்தையுள்ளங்கொண்டு கருத்துப் பொதிந்த உரையாடல்களால் நம்மோடு மகிழும் பண்பினராவார். புலவர்கள் இயல்பாகவே வரவழைத்துக் கொள்ளும் வளைந்து வணங்கித் தன்னிலையில் தாழ்ந்து நடக்கும் பண்பினை நமது கவிஞரின் சொல்லிலோ, செயலிலோ, தோற்றத்திலோ காண முடியாது. தன் உள்ளக் கிடக்கையை எவ்விடத்தும் எடுத்துக்கூற எப்பொழுதும் தயங்கியதில்லை. அத்துணை அளவு திண்ணிய உரம் படைத்தவர். அதற்கு மட்டும் ஓர் எடுத்துக்காட்டு. பிரான்சிலே ழூயில்பெரி என்பார் குடியரசுத் தலைவராக வந்தார். அவர் ஆட்சிப்பீடம் ஏறிய காலத்தில் கல்வியானது குருமார்கள் கையில் இருந்தது. அந்த நாடு மட்டுமன்றி உலகில் எங்கணும் பாதிரிகள், குருமார்கள், ஆச்சார்ய பரம்பரை யினர், தனிப்பட்டவர்கள் ஆகியவர்களால் கல்வி கற்பிக்கப்பட்டு வந்ததேயல்லாமல், எந்த அரசியலும் நேரே தொடர்புபடுத்திக் கைக்கொள்ளவில்லை. மதகுருமார்கள் கையிலிருந்த கல்வியைப் பிடுங்கி அரசியலார் நடத்தினால்தான் கல்வி எல்லோருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் என்று கருதிய ழூயில்பெரி, கருதியதைச் செய்து முடித்தார். கல்வி புகட்டும் முறையிலே சிறந்த சீர்திருத்தத்தைச் செய்த அந்தத் தலைவரைப் போற்றிப் புகழ அவருடைய படத்தைப் பிரெஞ்சுப் பள்ளிகளி லெல்லாம் விளங்கும்படி செய்வது வழக்கம். உலகிற்கே வழிகாட்டியாகத் தோன்றிய அந் தத் தலைவராம் ழூயில்பெரியின் நூற்றாண்டு நினைவு விழா எங்கணும் கொண்டாடப் பட்டபொழுது, பாண்டிச்சேரியிலும் கொண்டா டப்பட்டது. அவ்விழாவை சிறப்புச் செய்ய எண்ணிச் செய்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வாழ்த்துப்பாக்கள் பல மொழியிலும் இயற்றச் செய்வது என்ற திட்டத்தையும் போட்டார்கள். அதன்படி தமிழில் வாழ்த்துப்பா புனைய நமது கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். கவிஞரும் அதற்கிணங் கினார். குள்ளநரிக் கூட்டத்தினர் சிலர் பாரதி தாசன் ஒரு சுயமரியாதைக்காரன், அவன் பாடுதல் ஏற்புடைத்தாகாது என்னும் கருத்துப் படச் செயற்குழுத் தலைவரிடம் புறஞ் சொல் லியும் பயனற்றும் போகவே பாரதிதாசனே தமிழில் பா இயற்ற வேண்டி ஏற்பட்டது. விழாவில், அழகு செய்யப்பட்ட மண்டபத்தில் கவர்னரும், அவரது ஆட்சி சுற்றமும், நீதிமன்றத் தலைவர்களும், குருமார்களும், பாதிரிமார்களும், பிரெஞ்சுநாட்டு, திராவிட நாட்டு மக்களில் பணக்காரர்களும், பட்டம் பதவி வகிப்போரும், பாமரரும் குழுமியிருக் கின்றார்கள். நிகழ்ச்சி நிரலின்படி தமிழில் வாழ்த்துப்பா இசைக்கப் புரட்சிக் கவிஞர் அழைக்கப்பட்டார். கவிஞரின் பாட்டை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துக் கூறச் சிலநரியுள்ளம் படைத்தோரும் அங்கிருந் தனர். காரணம் கவிஞரின் கவிதையில் வரும் சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துக்காட்டி, கவிஞரின் மீது பிரெஞ்சுத் தலைவர்களுக்கு ஆத்திரம் ஏற்படவும், அப்படி எடுத்துக்கூறிய தம்மீது அன்பு பிறக்கவுமாகும். புரட்சிக்கவிஞர் பாடத் தொடங்கி ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை’’ என்று முதலடியை இசைத்தார். அது மொழி பெயர்க்கப்பட்டது. பின் ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக் குருக்களின் மேடை” என்று இரண்டாவது அடியையும் சேர்த்து இசைத்தார். கவிஞரைக் காட்டிக் கொடுத்துத் தடை செய்யக் காத்திருந்த கல் நெஞ்சம் படைத்த காக்கையினத்தோன் உளங்கனிந்து மொழி பெயர்த்தான். உடனே பாதிரிமாரின் மலர்ந்த முகமெல்லாம் குவிந் தன. சாந்தம் குடியிருந்த உள்ளத்தில் சினம் குடியேறிற்று. கண்களின் வெண்மை சிவப்பா யிற்று. சாய்ந்திருந்தோர் நிமிர்ந்தார். கேளாச் செவிகள் கேட்கத் தலைப்பட்டன. விழாத் தலைவர் சோர்ந்தாரேனும், அறியும் அவா மேலீட்டால் மற்றப் பகுதியையும் கேட்க வேண்டி ‘கோந்தினியே’ கோந்தினியே’ (மேலே தொடங்கு மேலே தொடங்கு) என்றார். ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத் தொலைந்தது அந்தப்பீடை!’’ என்று மூன்றாவது அடியையும் சேர்த்து கவிஞர் இசைத்தார். மொழி பெயர்க்கப்பட்டவுடன் கோணியிருந்த முகமெல்லாம் முற்றுங்கோண லாயின. தலைவர் மீண்டும் வாட்டமுற்றா ரேனும் மேலும் அறிய ‘கோந்தினியே’ என்றார். ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத்தொலைந்தது அந்தப் பீடை, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!’’ என்று நான்காவது அடியையும் சேர்த்து இசைத்தார் கவிஞர், மொழி பெயர்ப்பினைக் கேட்டார் தலைவர். சுருங்கிய முகம் மலரத் துள்ளி எழுந்து சில சொன்னார். 'அதுதான்! இந்தப் புலவன் சொல்லியதுதான். குருமார்க ளிடத்தே முடங்கிக்கிடந்த கல்வியை நாடெல் லாம் நீர் போல பரப்பினான் ழூயில்பெரி. அதைத்தான் இந்தப் புலவன் சொல்கிறான். இவன் தான் புலவன்! மற்றையோரெல்லாம் புலவராகமாட்டீர்!' என்பது மகிழ்ச்சியினால் எழுச்சியுற்று அத்தலைவர் கூறிய கூற்று. அன்று முதல் அந்தத் தலைவரின் மதிப்பிற் குரிய கவியாகவும், உற்ற நண்பராகவும் கவிஞர் விளங்கினார். பாதிரிமாரின் சீற்றமும், பாராள்வோரின் கொடுமையும் சூழக்கூடும் என்ற நிலையிலும் கவிஞர் கொண்டிருந்த துணிச்சல் வேறு எந்தக் கவிஞருக்கும் இந்த நாளிலும் வந்ததாகக் கண்டறியோம். கவிஞர் தாம் பார்த்து வந்த வேலையினின்றும் ஓய்வுபெற்று வெளியேறி விட்டார் என்பதைக் கேட்டுத் திராவிடம் மகிழ்ச்சிக் கொண்டு வருக என்று வாயார வாழ்த்தி, மனமார வரவேற்கின்றது’’ என்று நாவலர் நெடுஞ்செழியன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
அவரது துணிவு ஒப்புவமையற்றது!
நடுங்காத எழுதுகோல் - மடங்காத சுயமரி யாதை தொடங்காத இடம்தான் ஏது - நம் புரட்சிக் கவிஞருக்கு!
அவர்தாம் புரட்சிக்கவிஞர்! இல்லையா...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக