3. மூன்றாவது விதி:
செல்வத்தைச் சேர்ப்பதுடன் தவிர்க்க முடியாத நிலையும், தேவையும் ஏற்பட்டால் ஒழிய, கடன் வாங்கவே கூடாது; கடன் உயிருக்கு உயிராக நாம் பழகி, நேசித்த நண்பர்களைக்கூட, பகைவர்களாக் கும் வாய்ப்பினை - நாம் விரும்பாவிட்டாலும் நம்மீது திணிக்கக் கூடும்.
கடன் வாங்குகிறவர்கள் வட்டிக் கணக்கைப் பற்றியோ, அதனால் தனது உழைப்பு, வீணே விழலுக்கு இறைத்த நீராகிப் போவதுபற்றியோ சிந்திப்பதே இல்லை!
ஒரு அனுபவத்தில் கனிந்த முதியவர் ஒருவர் ஒரு அரிய செய்தியைச் சொன்னார்: "நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தவர்கள் முன்பு, பர்மாவில், மலேயாவில் பலர் வட்டித் தொழில் நடத்தி வந்தனர்.
(நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிவாழ் பார்ப்பனர்களில் பலரும் வட்டித் தொழில் செய்து வந்தனர்) அவர்களது வட்டி விகிதம் பெரும் அளவு நியாயமாகவே இருக்கும்; என்றாலும் கடன் கேட்க வருபவரிடம் என்னங்க பணம் கேக்கிறீங்க வட்டி கட்ட முடியுமா - வட்டி சற்று தூக்கலா இருக்குமே என்று கூறும்போது, கடன் வாங்க வந்தவர், பரவாயில்லை. எத்தனை சதவிகிதம் என்றாலும் தாருங்கள் என்று தலை யாட்டுவார். அவரது திருப்பிக் கொடுக்கும் எண்ணம் சந்தேகத்திற்குரியது என்று மனதில் புள்ளியை வைத்து பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி விடுவார்களாம்!"
ஆனால், அந்தப் படிக்கு இல்லாமல் மற்றொரு கடன் வாங்க வருவோர், "அய்யா வட்டியை கொஞ்சம் குறைத்து எனக்கு சலுகை தாருங்கள் அய்யா. நான் புள்ளை குட்டிக்காரன், நாணயமாக திருப்பிக் கட்ட வேண்டும் அல்லவா? அதற்காகத் தான் உங்களுடன் வாதாடும் நிலை உள்ளது. தவறாக எண்ண வேண்டாம்" என்று கெஞ்சுவாராம்!
பின் நபர் நல்லெண்ணத்துடன் வாங்கிய கடனைத் திருப்பித் தருவது நிச்சயம் என்று மனதில் மதிப்பீடு செய்து கொண்டு தவறாது உடனே கடன் தொகையைத் தந்து வட்டிச் சலுகையும் தருவார்களாம்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "ஏழைகள் வட்டியைத் தருகிறார்கள். வட்டியை சொந்தமாக்கி கொள்ளுவது பெரும் பணக் காரர்களே!" என்பதே அப்பழமொழி! (பணக்காரர் களுக்கு அது நிதியாகிறது)
தந்தை பெரியாரின் சிக்கனம் உலகறிந்த ஒன்றுதானே!
அவர் யாரிடமும் கடன் வாங்கவேமாட்டார்; யாருக்கும் கடன் கொடுக்கவும் மாட்டார் கடன் கேட்டு வருவோருக்கு ஒரு சிறு தொகையை 'நன்கொடை'யாகவே தந்து விட்டு, கடன் தர இயலாது என்று கண்டிப்புடனும், கறார் குரலிலும் கூறி விடுவார்!
அந்தக் கால ஈரோட்டில் மண்டி வியாபாரத்தின் போது இவரது தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மூவாயிரம் ரூபாயை அவர் தந்தைக்குத் தெரியாமல் வாங்கியதை அறிந்து கடனைத் திருப்பித் தர கடன் கொடுத்தவரையும் இவர் தந்தை முன்னிலையில் தனது தமையனாரையும் அமர வைத்து, 3000 ரூபாயை ஒரு ரூபாய் நாணயமாய் வரிசையாக நீளமாக அடுக்கி வைத்து எவ்வளவு கடன் வாங்கி "ஊதாரிச் செலவு" செய் துள்ளார் என்று காட்சிப்படுத்தியதாக அய்யாவே எங்களிடம் கூறியுள்ளார்!
எனவே கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் இப்போது வட்டி, தொடர் வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் வந்து விட்ட நிலையில் அது கடன் வாங்கியவரின் உயிரையே பலி வாங்கி விடுகிறதே!
4. நான்காவது விதி:
பணத்தைப் பெருக்க வேண்டும் என்று பேராசையில் இறங்கி - பல மடங்கு பணம் வளரும் என நம்பி, Speculation கூட இறங்கி சூதாட்டம் போன்ற யூக வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர். அதைத் தவிர்த்து, உருப்படியான நல்ல வழி முறைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் முதலீடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
'பேராசை பெரு நஷ்டம்' என்பதை மறந்து விடாமல் இருப்பது அவசியம் ஆகும்.
(மீண்டும் திங்களில்....)