நீண்ட நேரம் - 3 மணி, 4 மணி, (2 மணி நேரத்திற்கு மேல்) இருக்கையில் அமர்ந்தே பணிபுரிவோர் - அது எத்தகைய பணியாக இருந்தாலும், கணினியின் முன் அமர்ந்து வேலை செய்தல் மற்றும் எழுத்தர் பணிகள் அல்லது அமர்ந்து தொலைக்காட்சி என்ற தொல்லைக் காட்சிகளை பார்த்து, ஒரு 'சீரியலை' அடுத்து அடுத்த சீரியல் அல்லது பார்த்துப் புளித்துப் போன பழைய திரைப்படங்களானாலும் 3 மணி நேரம் எழுந்திருக் காமலேயே லயித்து விடுவது ஆகிய இத்தருணங் களில் நமது மூளைக்குச் செல்லுகின்ற இரத்த ஓட்டம் என்பது மிகவும் மெதுவாகச் சென்று, ரத்த ஓட்டம் அதற்கு குறையும் - நிலையும், வாய்ப்பும் ஏற்படுகிறது.
இதன் விளைவு மூளையின் பலமும் நலமும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப் புகள் மிகவும் அதிகமாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது மூளை என்பதுதான் நமது உடல் இயக்கத்தின் 'கட்டுப்பாட்டு அறை' அலுவலகமாகும். அதன் ஆணைப்படி தான் உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்குகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், தங்கு தடையின்றிச் சென்று, எவ்வித நிறுத்தமும் இல்லாமல் அது நடந்தால்தான் நமது உடல் நலம் சீராக இருக்கும்; பக்கவாதம், இதயத் தாக்குதல் (Heart Attack) போன்றவைகள் ஏற்படாது இருக்கும். ரத்த ஓட்டம் என்பது எப்போதும் சதா ஓடிக் கொண்டேயிருக்கும் (Shuttling) போது, நமது நினைவாற்றல், மூளையில் நிகழ்வுகள் பதிவுகள் போன்றவைகளை உடலின் பல வகையான அறிகுறிகள், ஆணைகள், செயலாக்கங்கள் நடைபெற்று வருகின்றன.
அறிவியல் வளராத காலத்தில் மனிதர்கள் மற்றும் அய்ந்தறிவு பிராணிகளுக்கும்கூட இப்படி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்றம், இறக்கம் (Fluctuations) ஏற்படுவதால் பல மாற்றங்களும் உடல் உறுப்பு சீற்றங் களும் கூட ஏற்பட்டு வந்தன.
மனிதர்களுக்கு இது நீண்ட காலம் (இந்த இரத்த ஓட்டக் குறைவு) தொடர்ந்தால், அது மூளை நரம்பு சம்பந்தப்பட்ட குறைபாட்டு நோய்களுக்கு (Nero degenertive diseases) துவக்க மறதி நோயான (Dementia) வரை கொண்டு போய் விட்டுவதில் முடியக் கூடும்.
தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வதன் மூலம், மூளைக்கு மட்டுமல்ல, நமது உடலின் பல உறுப்புக்களுக்கும் போய்ச் சேர வேண்டிய இரத்த ஓட்டக் குறைவு வேறு பல தொந்தரவுகளை உருவாக்கி பல நோய்களுக்கு காரணமாக அமையவிடக் கூடும். கடந்த ஜூன் மாதம் (2018) வெளிவந்த (Journal of Applied Physiology) என்ற ஆய்வு ஏட்டில் லிவர்பூலில் (இங்கிலாந்து) உள்ள ஜான்மூர்ஸ் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடைபெற்றது.
நல்ல உடல் நலத்துடன் உள்ள 18 வயதுக்கு மேற் பட்ட ஆண்கள் - பெண்கள் ஆகிய அலுவலகப் பணியாளர்கள் 15 பேரை வைத்து ஆராய்ச்சி செய்து அறிக்கை தயாரித்தனர்.
இவர்களை பல்கலைக் கழகத்தின் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, தலையில் இதற்கென உள்ள கருவிகளைப் பொருத்தி - ரத்த ஓட்டம் எப்படி உள்ளது - ரத்தக் குழாய்கள் எப்படி வேலை செய்கின்றன என்று ஆராய்ந்துள்ளனர்!
முகமூடிகளை அணிவித்து, மூச்சு விடுவதில் வெளியாகும் கரியமில வாயு (Carbon Dioxide) அளவு எவ்வளவு, இந்த வாயுக்கள் எப்படி உடலினை மாற்று கின்றன? என்றெல்லாம் கண்டறிந்தனர்.
மூச்சுவிடும் முறைகள் மூலம் இந்த கரியமில வாயுவையும் தக்க முறையில் மாற்றி ஒழுங்குபடுத்தலாம் என்கிற விவரத்தை கண்டறிந்தனர்!
அவர்களது மேஜைகளுக்கு அருகே உள்ள (Treadmill) களில் 30 நிமிடம் அவர்களை ஓட விட்டு (ஒரு மணிக்கு 2 மைல் வேகத்தில் ஓட விட்டு) ஏற்படும் மாறுதல்களைக் கண்டு ஒருங்கிணைத்து முடிவுகளை அறிவித்தனர்.
ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாகவே, இருக்கையிலிருந்து எழுந்து, தண்ணீர் குடித்தல் (நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவோர்) கழிப்பறைக்குச் சென்று திரும்புதல், கூடங்களிலேயே சற்று கால் ஆற நடந்து திரும்புதல் போன்றவற்றை செய்தால் அது நல வாழ்வுக்கு ; மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி நம் வாழ்வு நல்வாழ்வாக வாழ்ந்திட உதவி செய்யும்.
நமது அலுவலகங்களில் இடையில் எழுந்து சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்து பணி செய்ய அனுமதி அளிப்பது நல்லது!
3, 4 மணி நேரம் தொடர்ந்து படித்தல், எழுதுதல் பணி செய்யும்போது நான் எழுந்து கழிப்பறை அல்லது வீட்டு முற்றத்தில் சிறு நடை நடந்து மீண்டும் அமர்ந்து பணி தொடருவது உண்டு - இது தெரியாமலேயே -
இதை எளிதில் எல்லோரும் செய்யாமல் - ஒரே இடத்தில் அமரும் போது ரத்தம் ஓட்டம் குறைந்து மரத்துப் போவது நமக்கேகூட பல நேரங்களில் ஏற்பட்ட துண்டே - இல்லையா? எனவே, இதைக் கடைப் பிடியுங்கள்.
- விடுதலை நாளேடு, 21.8.18