பக்கங்கள்

திங்கள், 3 ஜூலை, 2017

மலரும் மனங்களும்



திருமதி. சுந்தரிவெள்ளையன் 86 வயது வரை வாழ்ந்து மறைந்த ஒரு பெண் பொறியாளராக - அக்காலத்தில் சென்னை கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் (பிறகுதான் அது அண்ணா பல்கலைக் கழகமாகப் பெரிதாய் உருவெடுத்தது) பெரிதும் ஆண்கள் மாணவர்கள்தான் பொறியியல் (B.E.) பட்டப் படிப்புப் படிப்பவர்; பெண்களை அதற்கு பெற்றோர்கள் அனுப்புவதே இல்லை.

அக்காலத்தில் மூன்றாவது 'செட்டாக' (Third Set)  பெண்கள் இணைந்து படிப்பதில், வகுப்பில், அதிகம்பட்சம் 3 பெண்கள்தான் படிப்பார்கள்!

முதல் 'செட்டில் (அணி) மே ஜார்ஜ் என்ற கேரளப் பெண்மணி அம்மையாரும், ஒரு சிலரும் படித்து அவர் பிறகு தலைமை எஞ்சினியர் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைவு.

திருமதி. சுந்தரி வெள்ளையன் அக்காலத்தில் வியப்புடனும், கேள்விக் குறியுடன் பலரால் பார்க்கப் பட்ட ஒரு பெண் பொறியாளர் ஆவார்!

அவர் அனைத்திந்திய வானொலியில் பொறி யாளர், திருமணமான பிறகு சில ஆண்டுகள் கழித்து, மாநிலப் பணிக்குத் தேர்வு பெற்று,  அடையாறு அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கின் முதல்வராகப் பொறுப்பேற்றார். (அன்றைய முதல் அமைச்சர் நமது கலைஞர் அதற்கு இந்தி எதிர்ப்புப் போர் வீராங்கனை டாக்டர் தருமாம்பாள் மகளிர் அரசு பாலிடெக்னிக் என்று பிறகு பெயர் சூட்டினார்).

வானொலியில் இருந்தபோது, மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியராக உயர்ந்த பகுத்தறிவாளர் சி. வெள்ளையன் அவர்களை மணந்தார்.

பத்தாண்டு காலம்தான் அவர்களது மண வாழ்க்கை; பிறகு பேராசிரியர் சி. வெள்ளையன் அவர்கள் திடீரென 1973இல் மாரடைப்பால் மறைந்தார்.

அப்போது இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், எல்லாம் 9,7,5 வயதுள்ள பெண் குழந்தைகள்!

இந்த தாங்கொணாத சோகத்தை - இழப்பை துணிவுடன் எதிர் கொண்டு தம் மகள்களை நன்றாக வளர்த்து, ஒரு பொறியாளர், இரண்டு டாக்டர்கள் என்பது போல படிக்க வைத்து, தக்க வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொடுத்தவர் முதல்வர் சுந்தரி வெள்ளையன்! அது மட்டுமல்லாமல் மற்ற உறவு, ஊர் பிள்ளைகளையும் கூட தனது இல்லத்தில் வைத்து ஒரு 'விடுதி' போல நடத்தித் தொண்டறம் நடத்தியவர் அவர்!

'கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்' என்பது சிலப்பதிகாரத்தின் வரிகள் ஆகும்.

முற்றிலும்  அதனைப் பொய்யாக்கி, வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்; வளர்த்து ஆளாக்குகிறேன் பாருங்கள் என்று நல்ல நிலையில் இன்று இரண்டு பேர் அமெரிக்கா, ஒருவர் இங்கிலாந்து என்று மன நிறைவுடன் வாழுகிறார்கள்.

மறைந்த சுந்தரி வெள்ளையன் அவர்கள் யாருக்கும் வரிந்து கட்டிக் கொண்டு உதவிகள் செய்வார். மற்றவர்களுக்காக துணிந்து யாரிடமும் வாதாடி உதவிகளைப் பெற்றுத் தருவதில் இவர் ஒரு தனித் தன்மையானவர்.

'தம்மின் தம் மக்கள் அறிவுடமை' என்பதைப்போல, அந்த மூன்று மகள்களும் தனது தாயாருக்கு  ஆற்ற வேண்டிய இறுதிக் கடமைகளை ஆற்றினரே! நாளை அவர்கள். (அமெரிக்காவில்) சான் ஓஸ்(Sanjose) இல்லத்தில் நினைவு இரங்கல் நிகழ்ச்சி நடத்திட ஓர் அறிவிப்புச் செய்துள்ளனர்.

அதில் ஒரு புதுமையான அறிவிப்பு; "வருகிறவர்கள் அருள்கூர்ந்து, மலர்களைக் கொண்டு வராமல், பெண் கல்வி தழைக்க, உதவிடும் வகையில் அப்பணத்தை அன்பளிப்பாக அளித்தலே சிறப்பு" என்பதுதான் அவ் அறிவிப்பு!

எவ்வளவு அருமையான பாராட்டு அறிவிப்புப் பார்த்தீர்களா?

பூக்கள் மலர்க் கொத்துகளை செலவழித்து வாங்கி அவற்றைக் குப்பை கூடையில் போடுவதால் யாருக்கு என்ன இலாபம்?

இதுதான் சரியான பகுத்தறிவு மனிதநேய அணுகுமுறை.   சென்ற ஆண்டு சுயமரியாதை வீரான திருமதி. ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார், "தன் மறைவில், யாரும் பூக்கள், மலர் மாலைகளைக் கொண்டு வராமல், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அந்தப் பணத்தை உண்டியலில் போட்டு அனுப்புங்கள். அதுவே எனக்குக் காட்டும் அன்பு கலந்த இறுதி மரியாதை" என்று  எழுதி வைத்தாரே! சென்னை பெரியார் திடலில் அவரது உடல் அருகே உண்டியலில் பலரும் பணம் போட்டனர்.  மாலைகள் வாங்கிய ஒரு சிலர்கூட எடுத்துச் சென்று விட்டனர்!

இப்படிச் செய்தல் - மாற்றங்கள் முக்கியம் - தேவையும்கூட!

மலர்களைத் தூவுவதைவிட

மனங்களைத் தூவுங்கள்! - மன உணர்வுகளே முக்கியம்.

அதுவே  வரவேற்கத்தக்கது.



-விடுதலை,3.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக