பக்கங்கள்

வெள்ளி, 16 ஜூன், 2017

‘காலம்' என்னும் கிடைத்தற்கரிய வாய்ப்பு: புரிந்துகொள்வீர்!

உங்களுடைய வங்கிக் கணக்கில், ஒவ்வொரு நாள் காலையிலும் 86,400 டாலர்கள் (கணக்கில்) வரவு வைக்கப் படுகிறது; ஒரே ஒரு நிபந்தனைதான்!

அது என்னவென்றால், மறுநாள் வரைக்கும் எல்லா டாலர்களையும் செலவழித்துவிட வேண்டும்; அப் போதுதான் அடுத்த நாள் காலையிலும் இதே 86,400 டாலர், கணக்கிற்கு வரவு வரும்.

என்ன செய்வீர்கள்? ‘‘எப்படியும் செலவழித்துவிட்டு அடுத்த நாள் வங்கிக் கணக்கில் வரவினை எதிர் பார்த்து இருப்பேன். ஏனெனில், அதுதானே நிபந்தனை'' என்பீர்கள்.

சரி, அதனைச் செலவழித்து அடுத்த வரவிற்குக் காத்திருக்கும் உங்களுக்கு, இந்த 86,400 டாலரில் எதுவுமே மிச்ச மிருக்காது; புதிய வரவு அப்போதுதான் கிடைக்கும் என்னும்போது, நீங்கள் மிகுந்த கவனத்துடன்தானே அதனைச் செலவழிப்பீர்கள்; கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ‘தாம்தூம்‘ என்று செல வழிக்காமல், கவனமாகச் செலவழிப் பேன் என்றும் கூறுகிறீர்கள், மகிழ்ச்சி, நன்றி!

நாம் ஒவ்வொருவரும் இந்த வரவு - செலவுக் கணக்கைப் பெற்றிருக் கிறோம்; மறவாதீர்! அதற்குப் பெயர்தான் விலை மதிப்பற்ற ‘‘காலம்‘’  (Time)  என்பதாகும்!

செலவழிக்கும் பணத்தைக்கூட மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால், செலவழித்த காலத்தை நாம் மீண்டும் சம்பாதிக்க முடியுமா? நிச்சயம் முடியாது!

ஒவ்வொரு நாளிலும் நமக்கு 86,400 வினாடிகள் கிடைக்கின்றன. அதனை மிகமிகக் கவனமாக, பயனுறு வகையில் செலவழிக்க வேண்டாமா? அந்தக் கோணத்தில் சிந்தித்துச் செயலாற்றுங் கள்.

ஒவ்வொரு நாளும் காலம் நமக்குத் தரும் கொடை 86,400 வினாடிகள்; அதனை நாம் மிகுந்த பொறுப்புடன் செலவழிக்கவேண்டும்.

உடல் நலம் பேண,

கல்வி அறிவு வாய்ப்புகளைப் பெருக்கிட,

மகிழ்ச்சியான வாழ்வினைப் பெற்றிட!

இந்த இருப்புகளைப் பயன்படுத்து வதுதானே அறிவுடைமை - இல்லையா?

காலம் என்பதின் - கடிகாரம் - இந்த 86,400 வினாடிகள் நமக்கு நாள்தோறும் கிடைக்கிறதே அதன் பெருமையை அறிந்து, மிகுந்த பயனுறு வகையில் அதனைக் கையாள வேண்டாமா?

ஒரு வருடத்தின் பெருமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கடைசித் தேர்வில் தோற்றுப் போன மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமையை அறிந்துகொள்ள  - அரைகுறையாகப் பிறந்த குழந்தையின் பெற்றோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

ஒரு மணித்துளியின் மதிப்பை உணர்ந்துகொள்ள ரயிலையோ, பேருந்தையோ தவறவிட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு வினாடியின் அதிமுக்கியத்துவம் புரிய வேண்டுமா?

தாம் உயிருக்கு உயிராக நேசித்தவர், மரணப் படுக்கையில் விட்ட கடைசி மூச்சினைக் கணக்கிட்டு வருந்தி வாடி டுவோரிடம் தெரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே, எல்லோருக்கும் இந்த 86,400 நிதி - காலையில், நாளும் வாழ்க்கை என்னும் வங்கியில் போடப்பட்டு - இரவு முடிந்துவிடுகிறது!

எனவே, இந்தபெருமதிப்பிற்குரிய காலத்தை கருத்தோடும், கவனத் தோடும், வீண் செலவு எதிலும் ஈடுபடுத்தாமல், நற்காரியங்களுக்கே நாளும் செலவிடுங்கள் - நாம் வளர, முன்னேற அதுவே வழி!

காலமும், அலைகளும் யாருக்காக வும் காத்திரா!

புரிந்துகொள்க!

- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,8.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக