பக்கங்கள்

சனி, 2 ஜனவரி, 2016

முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!


நமக்கு வயதாகிறது என்று கவலைப் படும் முதுமையாளர்களான நண்பர்களே!
ஏதோ இனி நம் உடல் நிலை என்ன வாகுமோ, நமக்கு யார் பாதுகாப்புத் தரப் போகிறார்களோ என்று எண்ணி முதுமையைத் துன்பத்தின் துவக்கம் என்பதுபோல கற்பனைக் குதிரைமீதேறி சவாரி செய்யும் அருமைப் பெரியோர்களே.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் வருத்தப்படாத வாலிபராகவே என்றென்றும் வாழ்ந்து காட்ட முடியும்!
கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள் அல்ல   - நெறிகள் இதோ:
கருத்தூன்றிப் படித்து, களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
1. முதலாவது நெறி: எனக்கு வயதாகி விட்டது என்று ஒரு போதும் அலுப்பு, சலிப்புடன் கூறாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து விரட்டியடியுங்கள்!
காரணம் மூவகை வயது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மறவாதீர்! முதலாவது ஆண்டுக் கணக்கில் வயது
(Chronological Age)
இரண்டாவது பிறப்பு, உறுப்பு  அடிப்படையில் வயது
(Biological Age)
மூன்றாவது  மனதில் நாம் எண்ணும் வயது - மனோ தத்துவ வயது(Psychological Age)
முதலாவது:  நமது கட்டுப்பாட்டிற்குள் வராது கொண்டு வர முடியாது என்பது உண்மை.
இரண்டாவது: நமது உடல் நலத்தைப் பொறுத்தது நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதன் அடிப்படையில் அமைந்த வயது. நாம் எப்படி வாழ்க்கையை அமைத்து நலம் காக்கிறோமே அதைப் பொறுத்தது.
மூன்றாவது: (உணவு முறை உட்பட) முதலாம் நெறி (பாட வழி) எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது, ஆக்கபூர்வ சிந்தனை ஓட்டம், (Positive Attitude) எதிர்மறை சிந்தனைக்கு இடம் தராது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிடும் மனமில்லாத உயரிய - இரட்டை அல்லாத திறந்த ஒற்றை மன - மகிழ்ச்சி தரும் வாழ்வு - நமது இளமைக்குப் பால் வார்க்கும்! சீரிளமைத் திறன் அதன் மூலம் வாய்க்கும்!
2. இரண்டாவது நெறி:
உடல் நலத்தைவிட சிறந்த செல்வம் - உண்மைச் செல்வம் வேறு ஏதுமில்லை. எனவே உடல் நலப் பாதுகாப்பை அலட்சியம் செய்யாமல், அன்றாடம்  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மீதூண் தவிர்த்தல் இவைகளுக்கு முன்னுரிமை.
மருந்துகள் எடுத்தலை தவிர்க்காத ஒழுங்குமுறை அவசியமாகும்.
நல்ல மருத்துவக் காப்பீடு திட்டம் பயன் தரும் - (ஆனால் இதை நன்கு ஆராய்ந்து  தேர்வு செய்தல் அவசியம் - குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்தால், நோய் வந்தபோது சிகிச்சைச் செலவு என்ற பாரம் - சுமை குறையக் கூடும்).
3 மூன்றாவது நெறி: பணம் அவசியம்(Money) நமது தேவைகள், செலவுகளுக்கு நியாய வழிகளில் - ஈட்டும் பொருள் - சம்பாதித்த பணம் மிகவும் முக்கியம்.
பணத்தைச் சம்பாதிப்பதைவிட சேமிப்பது மிக மிக முக்கியம்.
எளிமை, சிக்கனம், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தல், தேவைக்கு மட்டுமே செலவழித்தல், டம்பாச்சாரத்தை அறவே கை விடுதல் எல்லாம் பணம் சேர உதவிடும்.
ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை      (குறள்-478)
வரும் வருமானம் அதிகமாக இல்லையே என்று கவலைப்படாதீர்கள். அதைப் பெருக்க திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் அருமையான வழி முறை கூறியுள்ளனர்!
செலவைச் சுருக்குதலே, வருவாய் பெருக்குதலுக்கு வாய்ப்பேற்படுத்தித் தரும் என்பது உண்மை.
பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் எவரும் பணப் பேராசைக்கு அடிமையாகி விடக் கூடாது. அது உங்கள் எஜமானன் ஆனால் ஆபத்து; அதை உங்கள் பணியாளராகவே வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(மற்றவை நாளை)
- கி.வீ.ரமணி
முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!-2

முதுமையை விரட்டி, என்றும் சீரிளமைத் திறத்தோடு உள்ளோம் என்று முதுகுடிமக்கள் வரை - மனப்பாங்கைப் பெற பின்பற்ற வேண்டிய பத்து நெறிகளில் மூன்று நெறிகளை முன்னர் விளக்கினோம். அதன் தொடர்ச்சியே இவை:
4. நான்காம் நெறி: இளைப்பாறுதலும் (Relaxation)
பொழுது போக்கில் திளைத்தலும்
(Recreation)
நமது மனப்பாங்கு வளமை,இளமை பெற மிகவும் இளைப்பாறுதல் தேவை -கோடையிலே இளைப்பாறுதல் என்ற வடலூர் வள்ளல் பெருமானின் பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருமே!
ஆங்கிலச் சொல்  Relexation என்பதற்கு வடலூரார் தந்த வளம் மிக்க செம்மொழியாம் எம் மொழியான தமிழ் மொழியில் உள்ள சொல் இளைப்பாறுதல் - களைப்பைப் போக்கும் செலவில்லா மாமருந்து!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! - இல்லையா?
கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணனின் பொருள் பொதிந்த நகைச்சுவை துணுக்குகளை ஒலி நாடா மூலமாகவோ, அல்லது ஞிக்ஷிஞி என்ற ஒளி வட்டத் தகடுகள் மூலமோ வீட்டில் கேட்டு மகிழலாமே!
அதுபோல தற்போதுள்ள காமெடி சேனல் என்ற நகைச்சுவைத் துணுக்குப் பகுதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரியுங்கள் - பல ஆழ்ந்த பொருள் உள்ள நகைச்சுவை அல்லவென்றாலும்கூட!
நல்ல இசையைக் கேட்டு ரசியுங்கள் - உங்களை மறந்து அதில் லயித்து, புத்துணர்வைப் பெற அதன் உதவியை நாடுங்கள்; நாதஸ்வரம், வயலின், வீணை (பழைய யாழ் இல்லையே இப்போது) இவைகளால் ஒரு மீட்டுருவாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
துன்பம் நேர்கையில், யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே?
என்று அன்பு மகளைப் பார்த்து புரட்சிக் கவிஞர் கேட்டதன் உள்ளார்ந்த கருத்து இதுதானே!
பொழுதுபோக்கு (recreation) என்பவை புத்தகப் படிப்பாகவோ, விளையாட்டுகளாகவோ, பிடித்த நண்பர் களுடன் கலகலப்பாக உரையாடுதல் நல்ல ஓவியங்கள், சிற்பங்களைக்கூட கலை நயக்கண் கொண்டு பார்த்து அதில் உள்ளத்தைப் பறி கொடுத்தோ எப்படியேனும் இருக்கலாம் அதன் மூலம் புத்தாக்கத்தைப் பெருக்கலாம்!
என்றாலும் இந்தப் பொழுது போக்கு அம்சம் குறித்த ஒரு எச்சரிக்கையும் தேவை!
இது உணவில் உப்பைச் சேர்ப்பது போல இருக்க வேண்டுமே தவிர, உப்பே உணவாகும் கீழ் நிலைக்குச் சென்று விடக் கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி பார்ப்பதை பொழுது போக்கு எனக் கூறும் நண்பர்கள் முதுமையாளர்கள் இதை மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளல் நல்லது.
5. காலத்தை மிகவும் மதித்து, திட்டமிட்டு வாழ்தல் என்பது அய்ந்தாம் நெறி.
காலத்தை உங்கள் கட்டுப்பாட்டில் ஒரு குதிரையின் லகானைப் பிடித் துச் சவாரி செய்பவரைப்போல கட்டுப்பாட்டில் வைத்து வாழ்தல் அவசியமாகும்.
ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய் பிறக்கிறோம். நேற்று என்பது கொடுக்கப்பட்ட (கிழிக்கப்பட்ட செக்) பணவோலைத் தாள்(paid Cheque) போன்றது.
நாளை என்பது பிராமி சரி நோட் - புரோநோட் போன்றது!
இன்று என்பது கையில் உள்ள ரொக்கம்   (Ready cash)
மறவாதீர்!
இதை லாபகரமாகச் செலவழிக்க வேண்டாமா? அதைவிட முக்கியம், ஒவ்வொரு விநாடியும் திரும்பி வராதவை என்பதால் திட்டமிட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக்கி உழைப்பது, நடப்பது, படிப்பது, எழுதுவது முதலிய பலவற்றையும் அட்டவணைப்படுத்தி வாழ்ந்தால் சாதிக்கும் செயல்கள் எண்ணற்றவை.
முடியாதோ என்பவைகளும், விடியாதோ என்ற கவலைகளும், பறந்தோடும் - துணிவுடன் மேற்கொண்டால்
இவ்வளவு எளிதா? நான் ஏன் இதை பெரிய மலை என்று தவறாக எண்ணினேன் என்று பிறகு எளிதில் நீங்களே உணர்வீர்கள்!
(நாளை மற்றவை)
- கி.வீரமணி
முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!-3

ஆறாவது நெறி:
மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்! பல அறிஞர்கள், தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்கள் கூறினார்களே நினைவுக்கு வருகிறதா?
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. எனவே, மாற்றம் என் பதுதான் நிரந்தரமானது - மறவாதீர்!
என்னதான் பழைமை விரும் பிகளானாலும், இன்று கட்டை வண்டிப் பயணம், ஓலைச்சுவடி, எழுத்தாணி, குடுமி வைத்துக் கொள்ளல், விதவைப் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தல், மாதவிடாய் பெண்களை வீட்டுக்குள் ஒதுக்கி வைத்தல் - இப்படிப் பல பலவும் இன்று முதியவர்களால்கூட ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையே! மாற்றம் தவிர்க்க இயலாது; மாற்றம் வளர்ச்சியின் அறிகுறி -அடையாளம் என்பதால்தானே!
இராமாயண காலத்தில், மகாபாரத புராண இதிகாசங்களில் போர்க் கருவிகள் வேலும், வில்லும், யானைப்படை,
குதிரைப்படை போன்றவைதானே போர்ப்படை!
இன்றைய ஏவுகணை யுகத்தில் இவைகளால் நவீனப் போர் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியுமா? அறைகளில் அமர்ந்தே போர்க் கருவிகளை - அறிவியல் தொழில்நுட்ப முறையில் நகர்த் தப்படுகின்ற நிலையில், பழைய கருவிகள் எப்படிப் பயன்பட முடியும்?
23 வயதில் செத்துக் கொண்டிருந்த மனிதர்கள் 80, 90, 100 வயது மூத்த குடிமக்களாக வயது வளர்ந்திருப்பது மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியின் விளைச்சலால் அல்லவா? எனவே, மாற்றத்தைக்
கண்டு மருளாதீர்கள்!
அந்தக் காலத்திலே...
எங்க காலத்திலே...
நான் காலேஜிலே படிச்சப் போ
என்றெல்லாம், வளர்ந்த நம் பிள்ளை, பேரப்பிள்ளைகளை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.
அவர்களிடமிருந்து பெற வேண்டிய, நாம் கற்றுக்கொள்ள  வேண்டிய செய்திகள், அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் ஏராளம், ஏராளம்!
இத்தகைய மாறுதல் - வளர்ச்சி யைக் காணும் வகையில் நாம் வாழுகிறோமோ என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பெருமைப்படுங்கள்.
ஏழாம் நெறி:
மனிதர் எவராயினும் அடிப் படையில் அவர் சுயநலவாதியே! அது தவிர்க்க இயலாதது. தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பது நடைமுறையில் நாம் பார்ப்பதல்லவா!
ஆனால், அதைக் கட்டுக்குள் வைத்து சுயநலமாக்கி வாழுங்கள். சுயநலத்தை ஒரு வழிப்பாதையாக வைக்காமல் கொஞ்சமாவது பெற்றுக்கொண்டே இருப்பதற்குப் பதில் திருப்பிக் கொடுக்கவும் கற்று, அதை நடைமுறைப்படுத்துங்கள் - தனக்கென வாழா பிறர்க்குரியவராக இருப்பது அவ்வளவு எளிதானதல்ல; அதனால் குறைந்த பட்சம் தனக்கென வாழ்ந்தாலும், பிறரது தேவை - உணர்வு - உதவுதல் இவைகளுக்கு முக்கியத்துவம் தர மறக்காதீர்!
பிறர்க்கு உதவிடும் வகையில் ஏற்படும் மகிழ்ச்சி; உள்ளார்ந்த மன திருப்தி, மற்றவர்க்கு உதவிடுகிறோம் என்று நமக்கே - அதை எண் ணும்போது பீறிட்டுக் கிளம்பும் உளநெகிழ்வு அலாதியானது. கருமிகளுக்கு அது தெரியாது!
கொடுப்பவர்கள் ஒருபோதும் இழப்பவர்கள் ஆகமாட்டார்கள்.
மாறாக, மகிழ்ச்சி வளம் பெற்று, இளையர்களாகும் வாய்ப்பு அந்த மகிழ்ச்சி சார்ந்த மனநிறைவு கொண்டு வந்து
கொடுக்கவே செய்யும்.
எட்டாவது நெறி: மன்னிப்போம்; மறப்போம்!
இது மிக முக்கியமானது. நம் முதுமைக் காலத்தில் - மற்றவர்களின் தவறுகளைப் பெரிதுபடுத்திடாமல், அலட்சியப் புன்னகையால் ஓரங்கட்டுங்கள் - ஒதுக்கித் தள் ளுங்கள்!
வாழ்க்கையில் மன்னிக்கத் தெரிந்தவனே உண்மையான மனிதன்; உயர்வான மனிதன்.
முதலில் மன்னிக்கப் பழகுங்கள்; பிறகு அதை மறக்கவும் பழகுங்கள்.
பழிவாங்கும் உணர்ச்சி என்பது பக்குவப்படாத பழங்காலத்துக் காட்டுமிராண்டிப் பருவ சிந்தனை யாகும்.
மன்னிக்கும்போது, மறக்கும் போது ஏற்படுவது அமைதி - அன்பு.
பழிவாங்கும் போது ஏற்படுவது வன்மம்; கோபம், ஒரு வகை வெறித்தனம்.
இதனால் யாருக்குமே பலன் கிடைக்காது! நமது இரத்தக் கொதிப்புதான் அதிகமாகும்! உடல் நலமும் உள்ளநலமும் பெரிதும் பாதிக்கவே செய்யும்.
மற்ற முக்கிய இரண்டு நெறிகள் பற்றி நாளை எழுதுவோம்.
- கி.வீரமணி
முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!-4

9ஆம் நெறி: எதிலும் பொருள் காணுங்கள்
எந்தச் செயலை முதுமையாளர்கள் சந்திக்க நேரினும் அது கண்டு சலிப்போ, சங்கடமோ, அதன் மூலம் நாம் தோற்று விட்டோமோ என்ற தோல்வி மனப்பான்மையோ, ‘ஹூம் இனி நம்மால் என்ன முடியும்? நமக்குத் தான்  வயதாகி விட்டதே! நாம்தான் முன்பு போல் அதிகம் ஓடி ஆட முடி யாது போயிற்றே!’ என்று ஒரு வித்தி யாசமான மனப்போக்கை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
இதனால் என்ன விளைவு... நன்மை தீமை... தோல்வியாக அது அமைந்தால்.. எப்படி எதிர் கொண்டு முறியடிப்பது?  என்றே பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து நடந்தால் மாமலை யும் ஓர் கடுகு! மாக் கடலும் ஓர் வாய்க்கால்!! இல்லையா?
வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள்; அதில் எதிர்பாராதவை எத்தனையோ, விசித்திரங்களும் உண்டு - அவற்றால் என்ன நம் வாழ்க்கையா முடிந்துவிடுகிறது? இல்லையே! நீங்கள் நீங்களாகவே என்றும் இருங்கள் அவர்கள் அவர் களாகவே என்றும் இருக்கட்டும்; அது அவர்கள் வழி, அவர்கள் முறை - அதுபற்றி நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று அலட்சியப்படுத்த வேண்டியவைகளை அலட்சியப்படுத் துங்கள் - கண்ணில் விழும் துரும்புகளால் சிற்சில நேரங்களில் இடர்களும் கண் ணீரும் உண்டு;  அதற்காக கண்ணையா நாம் பிடுங்கிக் கொள்ளுகிறோம்? இல்லையே அதுபோல!
சில நேரங்களில் உடன் தோல்வி, பிறகு அதுவே வெற்றிக்கான வாய்ப்பாகக் கூட - பல எதிர்வினைகளைப் புறந் தள்ளக் கூடியதாகக்கூட ஆகி விடலாமே!
எப்போதும் எதையும் நம்பிக்கைப் பார்வையிலேயே Optimist) பார்க்கப் பழகுங்கள். குறுகிய நம்பிக்கைஇன்மைப் பார்வை (Pessimistic outlook) தேவை இல்லை. அதுதான் வள்ளுவர் சொன்ன அருமருந்து போன்ற அறிவுரை
‘இடுக்கண் வருங்கால் நகுக!’
இதில் ‘நகுக’ என்பது அலட்சிய சிரிப் புடன் அதனை எதிர் கொள்க என்று கொள்க!
வாழ்க்கை சரளமாக சிக்கலின்றி மகிழ்ச்சியுடன் தடம் புரளாமல் ஓடும்.
நெறி பத்து: : மரண பயத்தை வெல்லுங்கள்!
வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் மறையப் போகிறவர்களே இன்றுள்ள நிலைமைப்படி  நாளை ‘அறிவியல் அற்புதங்கள்’ நிகழ்ந்தால் மரணமேகூட தவிர்க்கப்படக் கூடும். (அதனால் ஏற்படும் பிரச்சினைகளோ பல்வேறு வடிவங் களாகக்கூட மாறலாம். அதுவேறு)
வாழும் காலத்தில் அடுத்த நொடியே மரணம் - சாவு வந்தாலும் - ஏற்க, நாம் என்றும் தயாராக இருக்கத்தான் வேண்டும்.
அதற்காக நம்மை நாம் தற் கொலைக்கு ஆளாக்கிக் கொள்ள வேண் டும் என்பதல்ல பொருள். நமக்காக மற்றவர் உதவிட முடியாத ஒன்றுதான் மரணம் என்ற சாவு. நமக்குத் தெரிந்து நடந்தாலும் அதனால் நமக்கென்ன துன்பம்? அறிவுள்ள மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கி விட்டால், அவர்கள் அடுத்த நிலை - தொடர் பணி பற்றித்தான் சிந்தித்து செயல்படுவார்களே தவிர, அழுது மூக்கைச் சிந்திக் கொண்டிருக்க மாட்டார்கள்!
நாம் எதனையும் கூடுமானவரை பகுத்தறிந்து சிக்கலற்ற நிலையை நம் காலத்தில் குடும்பமானாலும், நிறுவன மானாலும், இயக்கமானாலும் - ஆக்கி விட்டால் எதுவும் சிறப்புடன் நடக்கும். நமக்கும் அதுதானே பெருமையும் மகிழ்ச்சியும். எனவே மரண பயம் அற்ற மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்வோம்! அதற்காக மின்சாரத்தில் கை வைத்துப் பரிசோதிப்பது என்ப தல்ல இதன் பொருள்?
தொண்டறப் பணிகளை வாழ் நாளில் செய்வோர் மறைவதில்லை -
உடலால் மறைந்தாலும், கொள்கை களால் சாதனைகளால், புகழ் பூத்த லட்சியங்களை விட்டுச் செல்வதால், தெளிவான பாதைகளை கலங்கரை வெளிச்சங்களாக்கிக் காட்டி விடுவ தால் என்றும் மரணமில்லா மனிதர் களே! ஏன் நாமும் அதில் ஒருவராகக் கூடாது?
அசை போட்டுச் சிந்தியுங்கள் -
முதிய இளைஞர்களே! மகிழ்ச்சி யோடு வாழுங்கள்.
(நிறைவு)
-விடுதலை,30.11.15,1,2,3.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக