தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் தந்தை பெரியார் பால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் இணைந்த மானமிகு. குடந்தை எஸ்.ஆர். இராதா அவர்கள் போற்றத்தகுந்த பண்புகள் நிறைந்த மாமனிதராக தான் மறையும் வரை - தனிப்பெரும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்து காட்டியவர்.
நாம் ஜாதி, மதம், பற்றிக் கவலைப்படாதவர்கள். அந்த சிந்தனையே நமது இயக்கத்தவர்களுக்குக் கிடையாது என்பது தான் திராவிடர் கழகத்தின் தனித்தன்மையாகும்!
குடந்தை எஸ்.ஆர்.இராதா முன்னாள் அமைச்சர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க.வில் இருந்த நிலையில்). எல்லாவற் றையும் விட அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
"புரட்சித் தலைவரின் அன்புத்தம்பி, பகுத் தறிவுச்சுடர் எஸ்.ஆர்.இராதா" என்ற தலைப்பில் ஓர் அருமையான வாழ்க்கை வரலாற்று நூலை சவுராஷ்டிரா கல்ச்சுரல் அகாடமி வெளியீடாக திரு .(இராமியா) ஆர்.ஆர்.குபேந்திரன் அவர்கள் எழுதியுள்ளார். தோழர் குடந்தை கவுதமன் எனக்குத் தந்தார்!
பல சுவையான தகவல்கள். பொது வாழ்வில் அரசியலில் உள்ளோர் கொள்கையோடு இருக்க முடியுமா என்பதற்கு தக்க விடையளிக்கும் நூலாகும்!
ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்த சுயமரி யாதைக்காரர் - சிறுபான்மையின பிற் படுத்தப்பட்டோர் சுவுராஷ்டிரா சமூகத்தில் பிறந்த அவர் கருஞ்சட்டைக்காரர் ஆனது வியக்கத் தக்கது.
நீதிக்கட்சி துவக்கத்தில் டாக்டர் டி.எம்.நாயருடன் இருந்த மதுரை வழக்குரைஞர் எல்.கே.துளசிராம், அச்சமுகத்தவர். அவர் திராவிட இயக்கத்தில் இருந்தது அபூர்வமானது. குடந்தை திராவிடர் கழகத்தில் எஸ்.ஆர்.இராதா, கு.பா. ராமமூர்த்தி, அவரது துணைவியார் பத்மாவதி - தீவிர தொண்டர்கள். காஞ்சி ஏ.ஆர். வெங்கட்ராமன், எனது மாணவப் பருவகால பிரச்சாரகர். பேச்சாளர். அய்யா, அண்ணாவுக்கும் நன்கு பழக்கமானவர்.
இப்படி விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் உண்டு. காரணம் அவ்வளவு வைதிகத்தில் மூழ்கிய மக்கள் - அங்கே இப்படி ஒரு "குறிஞ்சி மலர்!"
அந்நூலில், மாணவப் பருவத்தில் எப்படி பெரியாரிடம் ஈர்க்கப்பட்டு, தி.க.விலிருந்து திமுக வுக்குப் போன பிறகும் பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தியதையும், மறையும் வரை சுயமரியாதை வீரராகத் திகழ்ந்தவர் என்பதையும் விளக்கி அவரது கொள்கைப் பிடிப்புக்கு எடுத்துக்காட்டாக இந்நூல் திகழ்கிறது.
அதில் உள்ள சில சுவையான தகவல்கள் - எப்படியெல்லாம் இளைஞர்களாலும் லட்சிய இயக்கங்கள் வளர்ந்தன என்பதற்கான எடுத்துக் காட்டாகின்றன.
"நம்மால் முடியாதது வேறு யாராலும் முடி யாது.
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும்" என்பதற்குத் தோழர் எஸ்.ஆர்.இராதா வின் வாழ்க்கையே ஒரு சீரிய எடுத்துக்காட்டு!
(272 பக்கங்களில் தகவல்கள் சுவையுடன் தரப்பட்டுள்ள நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள்)
புத்தகத்திற்குள் நுழைவோமா?
பள்ளிக்கு வெளியே படிப்பு
"எஸ். ஆர். இராதா தொடக்கத்தில் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்காவிட்டாலும், அவரு டைய அண்ணன் இராமசாமி மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு வளர்ப்புப் புத்தகங்களை அவருக்கு அளித்துப் படிக்க வைத்த பின், அவரு டைய அறிவுத் திறன் சுடர் விட்டு வெளி வர ஆரம்பித்தது. அதனால் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த கும்பகோணம் நகர உயர் நிலைப் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் இராதாவைத் தேர்வில் வெற்றி பெறா வண்ணம் பல முட்டுக் கட்டைகளைப் போட்டனர். அதனால் வெறுப்படைந்த இராதா பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டார்.
ஆனாலும் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்த தனிப் பயிற்சிக் கல்லூரி (Tutorial College) ) ஒன்று காசி ஹிந்துப் பல்கலைக் கழகத்தின் (Banaras Hindu University) மெட்ரிகுலேஷன் படிப்பை அஞ்சல் வழியில் கற்பித்து, தேர்ச்சி பெற வைப்பதாக வந்த ஒரு விளம்பரத்தை அவர் கண்டார். அதன்படி அஞ்சல் வழியில் கல்வி கற்று, அதன் பின் கடைசி மூன்று மாதங்கள் காசிக்குச் சென்று அங்கே தங்கி நேர்முகப் பயிற்சியையும் தேர்வையும் முடித்து விட்டு வரவேண்டும். இராதா மிக்க ஆர்வத்துடன் இப்பயிற்சியில் சேர்ந்து விட்டார். அவருடன் நண்பர்கள் சிலரும் இணைந்தனர். அஞ்சல் வழியில் பயிற்சியை முடித்த பின் நேர்முகப் பயிற்சிக்குச் செல்ல வேண்டிய காலமும் வந்தது. இராதாவும் நண்பர்களும் மிக்க உற்சாகத்துடன் காசிக்குச் சென்றனர். அங்கு புத்தகப் படிப்பில் மட்டும் மூழ்கி விடாமல் காசிக்குப் பக்கத்தில் உள்ள அலஹாபாத் உள்ளிட்ட நகரங்களையும் சுற்றிப் பார்த்தனர்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் திருவிழா நடப்பது போல் அலஹாபாத்திலும் 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா நடக்கும். இராதா காசிக்குச் சென்ற ஆண்டான 1954 கும்பமேளா நடக்கும் ஆண்டாக இருந்தது. இராதாவும் நண்பர்களும் கும்பமேளாவைக் காண அலஹாபாத் சென்றனர். கும்பகோணத்தில் மாகாமகத்திற்குக் கூடும் கூட்டத்தை விட மிக அதிகமாகக் கூட்டம் கூடி இருந்தது.
இந்துக்கள் / இந்தியர்கள் ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு எதி ராகப் போராடும் உணர்வைத் தூண்டு வதற்காக, இந்தக் கும்பமேளா விழாவை இந்திய அரசியல் வாதிகள் பிரபலப்படுத்தி இருந்தார்கள். ஆங்கிலே யர்கள் வெளியேறிய பின் அலஹாபாத்தில் அவ் வாண்டு தான் முதல் கும்பமேளா நடந்தது. ஆங்கி லேயர்கள் காலத்தில் கலந்து கொண்டதை விட மிக அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். கும்பமேளா விழாவில் காட்டுமிராண்டிகளை விடப் பழமையான பழக்கமாக, சாமியார்கள் நிர்வாணமாகக் கலந்து கொள்ளும் பழக்கம் இருந்தது / இருக்கிறது. அவ்வாண்டும் அவ்வாறே கலந்து கொண்டார்கள். மேலும் பிரபலமான அரசியல் தலைவர்கள் பலரும் அவ்விழாவில் கலந்து கொண்டனர். மக்கள் நிர்வாணச் சாமியார் களைப் பார்ப்பதற்கும், அரசியல் தலைவர் களைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு திசையிலும் போக ஆரம்பித்தனர் அந்நேரத்தில் கங்கை நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைப் பகுதியின் அளவு சுருங்கியது. இவை அனைத்தும் காரணங்களாக அமைந்து மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் எண்ணூறு பேர் மரணமடைந் தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந் தனர். மரணம் அடைந்தவர்கள் அனைவரும் அடையாளம் கூட காணப் படாமல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். இராதாவும் அவரது நண்பர் களும், விழாவின் புனிதத்துவத்தில் ஆர்வம் இல்லாத தாலும், கடவுள் நம்பிக்கையே இல்லாத தாலும், விழாவைத் தொலைவில் இருந்தே பார்த் தனர். ஆகவே அங்கு நடந்த தள்ளு முள்ளுவில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தனர். பொதுவாக இது போன்ற விபத்தில் இருந்து தப்பியவர்கள் கடவுள் காப்பாற்றினார் என்று கூறுவார்கள். ஆனால் இராதாவும் அவரது நண்பர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் தான் அவ் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தார்கள்.
கடைசியில் அவர்கள் காசிக்கு எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையை, அதாவது மெட்ரிகுலேஷன் தேர்வை, வெற்றிகரமாக முடித்து விட்டுக் கும்பகோணத்திற்குத் திரும்பினார்கள்.
(தொடரும்)
பெரியாரை அழைத்தார்
"காசியிலிருந்து கும்பகோணம் திரும்பிய பின் இராதா இடைநிலைப் படிப்பைப் (Intermediate) படிக்க விரும்பினார். படிக்கத் தொடங்கவும் செய்தார். ஆனால் அரசியல் அவரை வெகு வலுவாக இழுத்தது. ஆகவே இடைநிலைப் படிப்பை படிக்கும் எண்ணத்தை விட்டு விட்டார். இப்பொழுது அவருக்கு வயது இருபது நிரம்பி இருபத்தொன்று நடந்து கொண்டு இருந்தது. பதினாறாவது வயதில் தி.மு.க.வில் சேர்க்க மறுக்கப்பட்ட இராதா பதினெட்டு வயது முடிந்த உடனேயே அக்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இராதாவின் வாக்குத் திறன் எந்த ஒரு கூட்டத்திலும் அவரை முதன்மைப் படுத்தியது. இராதா பேசுகிறார் என்றால் அக்கூட்டத்தில் இளைஞர்களின் கூட்டம் அலை மோதும். பல கூட்டங்களில் பேசிய அவருக்குத் தன் சொந்த ஊரில் தான் சார்ந்த சௌராஷ்டிர மக்களிடையே பேசுவதற்கு, பெரியாரை அழைக்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி பெரியாருக்கு அழைப்பு விடுத்தார். ஒரு இளைஞன் அவ்வளவு ஆர்வமாக அழைப்பதைக் கண்ட பெரியாரும் வருவதாக ஒப்புக்கொண்டார். 27-02-1955 அன்று பெரியார் கும்ப கோணத்தில் பேசுவது என்று ஏற்பாடு ஆயிற்று.
பெரியார் கும்பகோணத்தில் சௌராஷ்டிர மக்கள் வாழும் பகுதியில் பேச வருகிறார் என்ற செய்தியை அறிந்த அச்சமூகத்தில் உள்ள மூத்த மக்கள் அதை விரும்பவில்லை. சௌராஷ்டிர மக்கள் வைதீகத்திலும் கடவுள் நம்பிக்கையிலும் வெகுவாக ஊறியவர்கள். பொதுவாக அவர்கள் யாருடனும் பகைமை பாராட்ட மாட்டார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை உடையவர் களையும், தங்களுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்பவர்களையும், அமைதியுடன் புறக் கணித்துப் போவார்களே ஒழிய மல்லுக்கு நிற்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது அச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனே சமூகத்தின் பொதுக் கருத்துக்கு எதிராக நிற்கும் போது,
அதுவும் இளைஞர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் போது, அவர்களால் கண்டும் காணாமலும் போக முடியவில்லை .
அவர்கள் கும்பகோணத்தில் பெரியார் பங்கு கொள்ள இருக்கும் கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று முயன்றனர். இராதா இக்கூட்டத் திற்கு, திண்டுக்கல் திரு.என்.வி.சுப்புராம் தலைமை தாங்குவார் என்று அறிவித்திருந்தார். திண்டுக் கல்லில் என்.வி.ஜி.பி. (N.V.G.B.) சுப்புராம் என்ற சௌராஷ்டிரர் மிகப் பிரபல மானவர், பணக்காரர். அவர் பெரியார் பங்கு கொள்ளும் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை. கும்பகோணத்திலிருந்து, சில பெரியவர்கள் திண்டுக்கல் சென்று என்.வி.ஜி.பி. சுப்புராமைச் சந்தித்தனர். அவர் கும்பகோணத்தில் நடக்கும் கூட்டம் பற்றி எதுவும் அறியாதவராக இருந்தார். அப்படி என்றால் எஸ்ஆர். இராதா அறிவித்தது பொய்யா?
அவர்கள் கும்பகோணத்திற்குத் திரும்ப வந்து கூட்டத்திற்கு உண்மையில் தலைமை தாங்கப் போவது யார் என்று விசாரித்தனர். அவ்வாறு விசாரித்ததில் என்.வி.சுப்புராம் என்பவர் கும்பகோணத்தில் தறி நெய்து கொண்டு இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு சௌராஷ்டிரர் என்று அறிந்தார்கள். உடனே அந்த இளைஞனை அணுகி, பெரியார் கலந்து கொள்ளும் கூட்டத் துக்குத் தலைமை தாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் எஸ்.ஆர்.இராதாவின் சொற்படி தான் நடப்பேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
முதல் கட்டத் தோல்வி அடைந்த பின், அவர்கள் கும்பகோணம் நகர தி.மு.க.வினரை அணுகி, "தி.மு.க. கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.இராதா அக்கட்சியின் அனுமதி இல்லாமல் பெரியாரை அழைத்துப் பேச வைப்பது சரியா? இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா?" என்று கேட்டனர். கும்பகோணம் நகர தி.மு.க வினரும் இராதாவிடம் இதைப் பற்றிப் பேச, "தான் செய்வதில் தவறு ஏதும் இல்லை " என்று விடை அளித்துவிட்டார். இராதாவின் மறுமொழியில் மனம் நிறைவுறாத அவர்கள் அண்ணாவிடம் போய் முறையிட்டனர். அண்ணாவோ, பெரியார் கொள்கைகள் பரவுவது தி.மு.க.வுக்கு வளர்ச்சியே என்று கூறிவிட்டு இராதா தன் விருப்பப்படி செய்ய விட்டுவிடுமாறு கூறிவிட்டார்.
இரண்டாவது கட்டத்திலும் தோல்வி அடைந்தவுடன், சௌராஷ்டிர சமூகப் பெரியவர்கள் திராவிடர் கழகத்தினரை அணுகி தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.இராதா அரசியல் கட்சி, மரபுகள் (Protocol) எதையும் பின்பற்றாமல், கட்சித் தலைவருக்கும் தெரியாமல் திராவிடர் கழகத்திலும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் பெரியாரை அழைத்துக் கூட்டம் போடுவதைப் பற்றிக் கூறினார்கள். பெரியாரின் தொண்டர்களும் எவ்வித மரபும் பின்பற்றப்படாமல் நடத்தவிருக்கும் கூட்டத் திற்குப் பெரியார் செல்லக் கூடாது என்று வற்புறுத்தினார்கள். ஆனால் பெரியார் தான் வாக்கு அளித்து விட்டதாகவும், அதைக் காப் பாற்றுவது மரபைப் பின்பற்றுவதை விட முக்கியம் என்றும் கூறிவிட்டார். மேலும் ஒரு இளைஞன் இவ்வளவு ஆர்வத்துடன் செயல்படும்போது அவரை ஊக்குவித்துத் தான் ஆகவேண்டும் என்றும், அவர்களுக்கு மனம் இல்லாவிட்டால் கூட்டத்தில் கலந்து, கொள்ள வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
ஆகவே கும்பகோணத்தில் பெரியார் வந்து பேசப் போவது உறுதி ஆகி விட்டது. அந்த நேரத்தில் நடிகர் எம்.ஆர்.இராதா நாடகங்களை நடத்து வதற்காக, கும்பகோணத்தில் முகாமிட்டு இருந்தார். இதை அறிந்த எஸ்.ஆர்.இராதா அவரையும் கூட்டத்தில் பேச வேண்டும் என்று அழைக்கச் சென்றார்.
தன்னை அழைக்க வந்த செய்தியை அறிந்தவுடன் எம்.ஆர்.இராதா உடனே வந்து, யாரும் அழைக்கா விட்டாலும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வது என்று நினைத்து இருந்ததாகவும், அழைப்பு கிடைத்ததில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் கூறினார். சௌராஷ்டிர இளைஞர் சங்கத்தின் சார்பில் 27-02-1955 அன்று நடக்க விருந்த கூட்டத்தில் எம்.ஆர்.இராதா கலந்து கொள்ளு கிறார் எனும் அறிவிப்பு ('விடுதலை'
26-2-1955 இதழில் வெளி வந்தது. "
(தொடரும்...)
பெரியார் கூட்டம் நடந்தது
"எல்லாத் தடங்கல்களையும் மீறி, கூட்டம் நடத்துவது உறுதியானது. பின் சௌராஷ்டிர சமூகப் பெரியவர்கள் சோர்ந்து விட்டனர். மேலும் நடிகர் எம்.ஆர்.இராதாவும் அக்கூட்டத் தில் பேசப் போகிறார் என்று அறிந்தவுடன் நடிகரைப் பார்க்க மக்கள் திரண்டு வந்து விடு வார்கள் என்றும், கூட்டம் மிகச் சிறப்பாக நடக்கும் என்றும் அவர்கள் உறுதியாக எதிர்பார்த்தனர். இனி எந்த விதமான தடங்கலும் ஏற்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட பெரியவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, தெருவெங்கும் பிய்ந்த செருப்புகளை வைத்து தோரணம் கட்டினர். இதனால் வெகுண்டு போன எஸ்.ஆர்.இராதாவின் நண்பர்கள் அரண்மனை இராமையர், நாராயணா, நகர் மன்ற உறுப்பினராக இருந்த சாரங்கபாணி பாகவதர் ஆகியோருக்கு எதிராகக் காவல் துறையில் புகார் கொடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டனர். காவல் துறையினரும் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தனர். சாரங்கபாணி பாகவதர் எஸ்.ஆர்.இராதா தன் தம்பியின் மகன் என்றும், தாங்கள் யாரும் எந்த விதத்திலும் அவர்களுக்கு தடையாக இல்லை என்றும் கூறினார்.
கூட்டம் 27-02-1955 காலையில் தொடங்கியது. கூட்டத்திற்கு வரும் வழியில் செருப்புத் தோரணங்கள் இருப்பதை எம்.ஆர்.இராதா கவனித்து விட்டார். அது அவரைச் சினமூட்டியது. கோபமாக அவர் பேச ஆரம்பித்து விட்டார். காலை 8 மணிக்குப் பேச ஆரம்பித்தவர் இடை விடாமல் பேசிக் கொண்டு இருந்தார். சரியாக 9.30 மணிக்குப் பெரியார் வந்து சேர்ந்தார். பெரியார் வந்தவுடன் எம்.ஆர்.இராதா பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
பெரியார் தன் உரையின் தொடக்கத்தில் எம்.ஆர்.இராதா வின் முகத்தைப் பார்த்தால் அவர் கடுமையாகப் பேசி இருப்பார் என்று தெரிவதாகவும், அதனால் மக்களின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காகத் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். சௌராஷ்டிர மக்கள் சாதுவானவர்கள் என்று தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் தங்களைப் பிரா மணர்கள் என்று அழைத்துக் கொள்வதும் தனக்குத் தெரியும் என்றும் கூறினார். ஆனால் பிராமணர்கள், சௌராஷ்டிரர்களைப் பிராம ணர்கள் என்று ஏற்றுக் கொள்வது இல்லை என்றும், அவர்களைச் சூத்திரர்களாகவே வரை யறைப்படுத்தி உள்ளனர் என்றும் பேசினார்.
மேலும் சௌராஷ்டிரர்கள் மற்ற சமுதாய மக்களுக்கு எவ்விதமான இடையூறும் செய் யாமல் வாழ்பவர்கள் என்றும், தங்கள் சமூகத் தவர்களிடையே எழும் பிரச்சனை களையும் வன்முறையில் ஈடுபடாமலேயே தீர்த்துக் கொள் கிறார்கள் என்றும் அவர் பேசினார். பொதுவாக சௌராஷ்ட்ரர்கள் மீது எந்தவிதமான குற்றவியல் வழக்குகளும் (Criminal Cases) இல்லை என்றும், காவல் நிலையங்களில் உள்ள குற்றவாளிகள் பட்டியலில் ஒரு சௌராஷ்டிரரின் பெயரும் இருக்காது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவ்வாறு ஒரு நல்ல சமூக இயக்கத்திற்கு இயைந்த வாழ்க்கையை வாழும் சௌராஷ் டிரர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒரே காரணத் திற்காக திராவிட இயக்கத்தைச் சந்தேகத் துடன் பார்க்கிறார்கள் என்றும், அதன் காரணமாகவே எஸ்ஆர்.இராதாவையும் சந்தேகத்துடன் பார்க் கிறார்கள் என்றும் பெரியார் குறிப்பிட்டார். அதே கண்ணோட்டத்தில் எஸ்.ஆர்.இராதாவையும் பார்த்து அவருடைய வளர்ச்சியைத் தடுத்துவிட வேண்டாம் என்றும், அவரால் சௌராஷ்டிர சமூகம் மட்டும் அல்லாமல் அனைத்து மக்களும் நன்மை அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
பின் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த பெரியகுளம் சுப்பையர் தனது நண்பர் என்றும், அவருடைய வீட்டில், தான் மீன் குழம்புச் சாப் பாடு சாப்பிட்டு இருப்பதாகவும், சௌராஷ்டிரர் களின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும் என்றும் பெரியார் கூறினார். அதன் பின் நெச வாளர்களின் ஏழ்மை நிலையைப் பற்றியும் அவர்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் பேசினார்..
இயந்திரத் தொழில், அதாவது விசைத்தறி வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அது வளரும் போது கைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும், அவ்வாறு நடக்காமல் இருப்ப தற்கு, நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறிக் கொள்ளும் காலம் வரையிலும், விசைத்தறி வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விசைத் தறித் துணிகள் மீது 100% வரி விதிக்கலாம் என்றும் கூறினார். காந்தியாரின் கதர்த் துணித் திட்டம் ஏட்டளவில் தான் உள்ளது என்றும், அது நெசவாளர்களுக்கு நன்மை அளிப்பதாக இல்லை என்றும், கதர்த்துணி என்பது ஒருவன் காங்கிரஸ் காரன் என்று காட்டுவதற்கான அடையாளம் (Identity) போல ஆகிவிட்டது என்றும் பெரியார் பேசினார். நெசவாளர்கள் பல்லைக் காட்டிக் கெஞ்சியும், பணிந்தும் காரியம் சாதிக்க நினைப்பது அறிவுடைமை ஆகாது என்றும் தங்கள் வலிமையைத் திரட்டியும், வளர்த்தும் அரசிடம் போராடுவதே சிறந்த வழி என்றும் பேசினார். பெரியாரின் பேச்சு 15-03-1955 அன்று 'விடுதலை' நாளிதழில் விரிவாக வெளிவந்தது.
எஸ்.ஆர்.இராதா திட்டமிட்டபடி, கும்பகோ ணத்தில் பெரியார் கலந்து கொண்ட கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்ததை அறிந்து கொண்ட அண்ணா , அவரை வெகுவாகப் பாராட்டினார். பெரியாரை விட்டுப் பிரிந்து இருந்தாலும் பெரியாரின் கொள்கைகளை, பெரியாரின் தலைமையை விட்டுப் பிரியவில்லை என்று தான் அறிவித்து இருப்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர் எஸ்ஆர்.இராதாதான் என்று மிகவும் பாராட்டினார். புதுக் கட்சியை (தி.மு.க.வை) ஆரம்பித்த பிறகு கைத்தறிப் பிரச்சாரம் செய்வதற்கும், சுயமரியாதைத் திரும ணங்கள் நடத்துவதற்கும் பெரியாரை அழைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குத் தோன்றாத போது எஸ்.ஆர். இராதாவிற்குத் தோன்றியது என்றால் அவர் சமூக வளர்ச்சித் தத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு உள்ளார் என்று காட்டுவதாகவும் கூறி இராதாவைப் பாராட்டினார்.
இம்மேடையில், எஸ்.ஆர். இராதா பெரியாருக்கு மலர்மாலையை அணிவிப்பதற்குப் பதிலாக, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த ஓட்டைக் காலணா நாணயங்களில் 6400 (ரூ.100) நாணயங்களை மாலையாகக் கோர்த்து அணிவித்தார். இதைச் சிலர் குறை கூறினார்கள். ஆனால் பெரியார் மலர் மாலையை விடக் காசு மாலை மேல் என்று கூறிவிட்டார்.
(நிறைவு)