முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கப் பழகவேண்டும் - இன்முகத்துடன்!
உலகின் அழகுப் போட்டியில் முதற்பரிசு பெற்று உலகம் முழுவதும் விளம்பர வெளிச்சம் - ஏராளமான பண வரவு, அடுத்து பணக்கார வாழ்க்கைத் துணையேற்றல் எல்லாம் கிடைக்கும்; கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும், அதைப் பெரிதும் மதித்துப் போற்றிப் பெருமிதத்தால் விம்மிய ஆணும்கூட, வயது ஏற ஏற முதுமையைத் தானே ஏற்கவேண்டும்.
முதுமையை தள்ளிப் போ(ட)க எவ்வளவு ‘லஞ்சம்' கொடுத்தாலும், கொடுக்கப் பேரம் பேசினா லும்கூட, அது போகுமா? போடவும் முடியாதே!
எனவே, காலம் நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சியில் முதுமையும், மரணமும் (இன்று வரையில் - நாளை அறிவியல் இதை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம்) தவிர்க்க இயலாதவை அல்லவா! எனவே, கவலைப்படாமல் ஏற்று, அந்த முதுமையைப் பயன் உள்ளதாக்க, அதையே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, மனித குலத்தவராகிய நாம் ஆயத்தமாகிடுவதே அறிவுடைமை - இல்லையா?
முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழி இல்லையே!
ஆனால், முதிர்ச்சி என்பது அப்படி அல்ல. அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்துகொண்டு வருவதல்ல. முதிர்ச்சி என்பது, நமது பண்புகள், பழக்கங்கள்மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெறவேண்டிய ஒரு அருங் குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகார்!
அம்முதிர்ச்சி என்பது எப்படி வரும் - எது முதிர்ச்சியின் அடையாளம் என்று கேட்கிறீர்களா?
கீழ்வரும் 11 குணங்களை குறளில் உள்ள குறட் பாக்களைப் போல் படித்து, செரித்து, நடைமுறைப் படுத்துங்கள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே உலகம் உங்களைக் கொண்டு சென்று நிறுத்தும்.
1. மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே முதலில் திருத்திக் கொள்வது. மற்றவருக்கு அறிவுரை வழங்காதீர்; உங்களுக்கு நீங்களே அறிவுரை, அறவுரை வழங்கி, நடைமுறை யில் செயலுருவில் மாற்றத்திற்கு ஆளாகுங்கள்.
2. எவரிடமும் முழுமையான குணாதிசியங்களை (பூரணத்துவம் - Perfection அய்) எதிர்பார்க்காதீர்கள். குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். ஊனமுற்ற நம் குழந்தைகளை நாம் நேசிக்கவில்லையா? கொன்றா போட்டு விடுகி றோம்? இல்லையே! இன்னுங்கேட்டால் அவர் களிடம்தானே அதிகப் பரிவும், பாசமும் காட்டு கிறோம்.
3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வைக்கும், அவர்களது பார்வைக்கும், நடத் தைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளும், காரண காரியங்களும் இருக்கும்; அந்த மறுபக்கத்தை ஆழமாக அலசி - மனிதநேயத்துடன் இதைப் பார்த்தால், நமது நோக்கும் - போக்கும் அவர்பற்றிய (அவசர) முடிவும் தவறு என்று தெரியும்.
ஜப்பானில் ஒரு ஏழைப் பெண் குழந்தை தவ றாமல் வகுப்புக்கு வந்தவர்; திடீரென காலதாமதமாக சில நாள் தொடர்ந்து வந்தார்; பிறகு விடுமுறை போட்டு, பள்ளிக்கு விட்டு விட்டு வந்து அபராதம் - தண்டனை பெற்றார்.
பிறகு ஒரு நாள் திடீரென பள்ளிக்கு வழமை போல் முன்கூட்டியே நேரத்திற்கு வந்தார். ஆசிரி யர்கள் மீண்டும் இவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.
அப்போது அவர் சொன்னார்,
‘‘எனது ஊனமுற்ற தாயும், பாட்டியும் இருந்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு தாய் நோயினால் இறந்துவிட்டார். பாட்டியைக் கவனிக்க மருந்து, உணவு தர எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகியது. பிறகு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, நானும் உடனிருந்தேன். பாட்டி இறந்ததால், ஈமச்சடங்குகள் நேற்றுதான் முடிந்தன. இப்போது பள்ளிக்கு வந்துள்ளேன். நான் கவனிக்க, உதவிட யாரும் இனி எனக்கு இல்லை. எனவே, காலந்தவறமாட்டேன்'' என்று கண்ணீர் மல்க சொன்னார் அந்த மாணவி. ஆசிரியர்கள் அழுதார்கள்; பள்ளியில் அவரைச் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.
இதுபோல நாம் நமது கோணத்தில் மட்டுமே பார்த்தால் உண்மை புரியாது. அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள். ‘‘ஒத்தறிவு'' (Empathy) என்பது மிகவும் தேவை. அது வந்தால் முதிர்ச்சி வந்துவிட்டது என்று பொருள்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 24.2.18