பக்கங்கள்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

காஷ்மீரைப் பாருங்கள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்ற பைபிள் வாசகங்களை முன்பு சிலர் கூறுவர். ஆனால், இப்போதுள்ள யதார்த்தம் என்னவெனில், திருமணங்கள் உண் மையில் ரொக்கத்தில்தான் நிச்ச யிக்கப்படுகின்றன!

பற்பல தவறான தேடுதல்களும், அமைதல்களும்கூட ஏன் காதல் திருமணங்களில்கூட - திட்டமிட்டே ‘‘புளியங்கொம்புகளை’’ப் பிடிக்கின் றவர்களும், பிறகு அதனைச் சுவைத்து, முழுமையாக உருவிவிட்ட பிறகு, ‘‘அற்ற குளத்து அறுநீர்ப்பறவைபோல’’ வேறு இடம் நாடி ஓடுதலும் உண்டே!

‘‘நான் அமெரிக்கா வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் உன் னைத் திருமணம் செய்து கொண்டேன்; ஒப்புக்கொண்டேன். இப்போது இத் தனை ஆண்டுகளாகவும் உன்னுடன் இருந்து ‘பர்மனென்ட் ரெசிடெண்ட்’ (PR) 
தகுதியைப் பெற்றுவிட்டேன்; இனிமேல் நம் இருவரிடையே உள்ளது கணவன் - மனைவி உறவல்ல; வெறும் அறிமுக நண்பர்கள் அவ்வளவே’’ என்று கூறிய சில ‘‘வீராங்கனைகளையும் (?)’’ நமக்கு நன்றாகத் தெரியும்!

திருமணங்கள் எத்தகைய முறை திருமணங்களாக இருந்தாலும், தேவை யற்ற ஆடம்பர வெளிச்சங்கள் தேவையா என்பது இன்று முக்கிய கேள்வியாகும்.

அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் ஒருவித கேடு - தாக்கம் நோயைவிடக் கொடுமையானதாகும்!

ஆடம்பரத் திருமணங்களை நடத் தியவர்கள் கதி அதோ கதி என்றாலும், எளிமையின் ஏற்றத்தின் சிறப்புதான் என்னே!

அழைப்பிதழ்களில் தலைவர்களின் படங்கள் - ஏதோ பாட புத்தகங்களைப் புரட்டுவதுபோல பல பக்கங்கள் புரட்டிய பிறகே மணவிழா எங்கு நடைபெறுகிறது? எந்தத் தேதி இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்!

என்னே விசித்திரம்! விந்தை!!

அவ்வழைப்பிதழ் 200 ரூபாய் முதல் 500 ரூபாய்வரைகூட இருக்கும்.  இரண்டு, மூன்று நல்ல புத்தகங்களைக் கூட அதற்குப் பதில் தந்தால், அவர்கள் காலங்காலமாகப் படித்துப் பயன் பெறுவர். அப்புத்தகங் களில் மணமகள், மணமகன் பெயர், தேதி போட்டால் நிலையான பயன் விளையுமே! வெறும் அழைப்பிதழ் நிகழ்வு முடிந்தவுடன், குப்பைத் தொட்டிக்குத்தானே போகப் போகிறது - யோசித்துப் பார்த்தீர்களா?

காஷ்மீரில் இனி திருமணங்களுக்கு 500 பேருக்குமேல் விருந்தளிக்கும் நிகழ்வு கூடாது; மீறினால் சட்டப்படி அபராதம் என்றும், நிச்சயத்திற்கு 400 பேர் வரைதான் என்பதும் காட்டப் படவேண்டும் என்பதால், அதனை கடைபிடித்தாகவேண்டும்.

ஆடம்பர திருமணம் அண்மையில் கர்நாடகத்தில் - ரெட்டி சகோதரர் - அதுவும் புதிய ரூபாய் நோட்டுப் பஞ்சமான காலகட்டத்தில், எத்தனை தடபுடலோடு நடைபெற்றது. (பா.ஜ.க. அமைச்சர்களாக இருந்த - சுரங்க முத லாளிகள் அவர்கள்). 21 ஆம் நூற் றாண்டில் ஆடம்பர வெளிச்சத்திற்காக வெட்கப்பட வேண்டாமா?

கர்நாடகாவிலுள்ள எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் இதைக் கண் டித்து புறக்கணித்தார்களா? இல்லையே!

முந்தைய “தமிழ்நாட்டுத் திருமண விளைவுதான்’’ தமிழ்நாடு கண்கூடாகப் பார்த்ததே!

1978 இல் (நெருக்கடி காலத்தில்) நடைபெற்ற தீமையின்போது செய்த நன்மை 50, 100 பேருக்குமேல் திருமண அழைப்பு கூடாது என்ற அருமையான ஆணை - நடைமுறை - பிறகு மறைந்து விட்டது.

காஷ்மீர் வழிகாட்டுகிறது - எளிமை, சிக்கன திருமணச் சட்டங்கள் - மற்ற மாநிலங்களிலும் வரவேண்டும்.

வருமான வரியினர், விற்பனை வரியினர் - (மத்திய - மாநில அரசு)  அழையா விருந்தினராக அங்கே சென்று, அங்கேயே  நடமாடும் நீதிமன்றம் (‘‘மொபைல் கோர்ட்’’) நடத்தி அபராதம் போட்டு, சிறைத் தண்ட னையும் தரவேண்டும்!

அந்த அபராதத் தொகையினை முதியோர் இல்லங்கள், அனாதைக் குழந்தைகள் இல்லங்களுக்குக்கூட தர நீதிமன்றமே தீர்ப்பில் குறிப்பிடலாமே!

காஷ்மீர் - படம் அல்ல - பாடம்!

செய்தி மட்டுமல்ல - தொடர்வதற்கும் கூட!
-விடுதலை,23.2.17